வெற்றிக் கதவின் திறவுகோல் தன்னம்பிக்கை.- மு.மகேந்திர பாபு

 

வெற்றிக் கதவின் திறவுகோல் தன்னம்பிக்கை.

' எடுத்த காரியம் யாவினும் வெற்றி
எங்கு நோக்கினும் வெற்றி '  என்றார் பைந்தமிழ்ப்புலவர் பாரதி.
' வெறுங்கை என்பது மூடத்தனம் - உன்
விரல்கள் பத்தும் மூலதனம்
கருங்கல் பாறையும் நொறுங்கி விழும் - உன்
கைகளில் பூமி சுழன்று வரும் '
என்றார் தன்னம்பிக்கை கவிஞர் தாராபாரதி.
' நம்பிக்கை நார் மட்டும்
நம் கையிலிருந்தால்
உதிர்ந்த பூக்களும் வந்து
ஒவ்வொன்றாய் ஒட்டிக்கொள்ளும் '  என்றார் கவிஞர் மு.மேத்தா.
' முயற்சி திருவினையாக்கும் ' என்றார்  ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நமது வான்புகழ் கொண்ட வள்ளுவப் பேராசான். முயற்சியும் பயிற்சியும் கொண்டு தன்னம்பிக்கை என்னும் திறவுகோலால் வெற்றியெனும் கதவினைத் திறக்கலாம். வானம்பாடியென வானில் பறக்கலாம்.

தன்னம்பிக்கையெனும் தாரக மந்திரம்.

தன்னம்பிக்கை என்பது ஒருநாளில் உதிர்ந்துவிடும் பூவாக இருந்து விடக்கூடாது.மேலும் மேலும் மலரை உருவாக்கும் செடியாக இருக்க வேண்டும் என்றார் அரிஸ்டாட்டில்.
மண்ணில் விதைத்த விதைகள் முதல் விண்ணில் பறக்கும் பறவைகள் முதல் அனைத்து உயிரினங்களின் உடலோடும் ஒட்டிய ஒன்று தன்னம்பிக்கை. உயர்திணை , அஃறிணை என்றில்லாது , உயர வேண்டிய ஒவ்வோர் உயிரினத்திற்கும் வேண்டியது தன்னம்பிக்கை. போட்டிகள் நிறைந்த இன்றைய பூவுலகில் தன்னம்பிக்கையோடு ஒவ்வொரு நாளின் விடியலையும் யார் எதிர்கொள்கிறார்களோ , அவர்களுக்கே உண்மையான விடியல் கிடைக்கிறது.

தன்னம்பிக்கையின் நிறைவு ' என்னால் முடியும் என்றும் விடியும் ' என்பது.  இன்றைய மாணவர்களிடமும் , இளைஞர்களிடமும் அவர்களது மனவயலில் விதைக்க வேண்டியது தன்னம்பிக்கை விதைகளே !  சின்னச் சின்னத் தோல்விகளை , ஏமாற்றங்களைத் , துரோகங்களை எளிதாக எடுத்துக் கொள்ளக்கூடிய மனநிலையில் இன்றைய மாணவர்களும் , இளைஞர்களும் இல்லை என்பது வருத்தத்குரிய உண்மைச் செய்தியாகும். ' புதைக்கப் படவில்லை விதைக்கப் படுகிறோம் என்றுணர்ந்த விதை இருளுக்கு அஞ்சாது. ஒதுக்கப் படவில்லை செதுக்கப் படுகிறோம் என்றுணர்ந்த மனம் தோல்விக்கு அஞ்சாது. தன்னம்பிக்கையோடு போராடி தோல்வியைத் தழுவினாலும் , ஒருவன் தோளில் அமரும் தோல்வி வெற்றிக்கருகில் வீறுநடையிட்டுக் கொண்டிருக்கிறது என்றுதான் அர்த்தம். உயர்த்தி விட ஒருவரின் கரம் உதவிக்கு நமக்குத் தேவையில்லை. தன்னம்பிக்கை ஒன்று உள்ளத்தில் காட்டாற்று வெள்ளமென பாய்ந்து வந்தால் தனியொருவனாகத் தரணியை ஆளலாம். நான்கு பேருக்கு நன்மை செய்து வாழலாம்.

ஒரு பறவை மரத்தின் கிளையில் அமரும் போது அது எந்த நேரத்திலும் முறிந்துவிடும்  என்ற பயத்தில் அமர்வதில்லை. ஏனென்றால் அப்பறவை நம்புவது மரத்தின் கிளையை அல்ல அதன் சிறகை.  தோல்வியின் அடையாளம் தயக்கம் .வெற்றியின் அடையாளம் துணிச்சல். துணிந்தவர் தோற்றதில்லை , தயங்கியவர் வென்றதில்லை என்பது காலங்காலமாக நாம் கண்டுணரும் செய்தி.விழுவதெல்லாம் எழுவதற்காகத்தான தவிர அழுவதற்காக அல்ல என்பதை நம் மனம் உணர வேண்டும். 'எடுத்த செயலை முடிக்காமல் கைவிடும் போது வெற்றிக்கு எவ்வளவு அருகில் இருக்கிறோம் என்பது பலருக்குத் தெரிவதில்லை .எனவே , தோல்வியைத் தழுவுகின்றனர் என்றார் மக்களின் விஞ்ஞானி எடிசன். அதைத்தான் அன்றே சொன்னார் ஈரடிகளால் உலக உள்ளங்களை அளந்த வள்ளுவப் பெருந்தகை .
தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும் '  என்று.

தன்னம்பிக்கையாளர்களின்  வெற்றி வரிகள்.

ஒரே ஓர் எண்ணத்தைக் கையில் எடுங்கள்.அந்த எண்ணத்தையே உங்கள் வாழ்க்கை ஆக்குங்கள்.அந்த எண்ணத்தையே சிந்தியுங்கள்.கனவு காணுங்கள்.உடலின் ஒவ்வொரு செல்லும் , நரம்பும் அந்த எண்ணத்திலேயே ஊறட்டும் . இதுவே வெற்றியின் ரகசியம் என்றார் சுவாமி விவேகானந்தர் அவர்கள்.

வாழ்க்கையில் நாம் சில எதிர்பாராத பிரச்சனைகளை எதிர்கொள்வதற்கு எப்பொழுதுத் தயாராக இருக்க வேண்டும். பிரச்சனை நம்மை மேலாதிக்கம் செய்ய அனுமதிக்கக் கூடாது. நாம்தான் பிரச்சனைகளை மேலாதிக்கம் செய்ய வேண்டும்.பிரச்சனைகளை தோல்வியுறச் செய்து , வெற்றி காண வேண்டும் என்றார் மக்கள் மனங்களில் நிறைந்த ஐயா அப்துல் கலாம் அவர்கள்.

துவண்டு போவதே ஒரு மனிதனுடைய மிகப்பெரிய பலவீனம். வெற்றிக்கான நிச்சய வழி , தோல்வி அடைந்த பின்னும் இன்னும் ஒரு முறை முயற்சி செய்வது என்றார் மக்களுக்கான பல அரிய கண்டுபிடிப்புகளைத் தந்த தாமஸ் ஆல்வா எடிசன்.

நான் ஆரம்பத்தில் பத்துக் காரியங்களைச் செய்தால் , ஒன்பது தோல்வியாகவே முடியும். தோல்வி என்னைக் கேலி செய்தது. ஒன்பது முறை வெற்றி பெற என்ன செய்ய வேண்டுமென யோசித்தேன்.தொண்ணூறு முறை முயன்றால் ஒன்பதில் வெற்றி கிடைக்குமல்லவா ? அன்று முதல் , முயற்சியின் எண்ணிக்கையை அதிகப்படுத்தினேன். இதுதான் எனது வெற்றியின் ரகசியம் என்கிறார் அறிஞர் பெர்னாட்ஷா.

சிகரம் தொட்டவர்களும் , மக்களின் சிந்தனையில் இடம் பெற்றவர்களும் ஒரே நாளில் புகழின் உச்சிக்குச் சென்றவர்கள் அல்ல. வலிகளைச் சுமந்து , தன்னம்பிக்கையால் தனக்கென தனி வழிகளை உருவாக்கியவர்கள் என்பதை நாம் அறியலாம்.

தன்னம்பிக்கை மாணவர்கள் :

வறுமையின் பிடியில் வசமாய்ச் சிக்குண்டபோதிலும் , பல பள்ளி மாணவர்களும் , கல்லூரி மாணவர்களும் தங்களின் தன்னம்பிக்கையால் படிப்பிலும் , வாழ்க்கையிலும் பல சாதனை படைத்து வருகிறார்கள். காலையில் கல்லூரிக்கும் , மாலையில் ஏதேனும் ஒரு கடையிலோ ,  நிறுவனங்களிலோ வேலை செய்து தங்கள் படிப்புச் செலவுகளை தானே நிர்வகித்துக் கொள்கிறார்கள். சில மாணவர்களோ பெற்றோர்களின் மென்மையான கண்டிப்புகளைக்கூட தாங்கும் சக்தியின்றி வன்முறையைக் கையாளத் தொடங்கிவிடுகின்றனர். பள்ளியில் முதல் மதிப்பெண் பெறுவதே எனது மதிப்பை உயர்த்தும் என்ற எண்ணம்  அனைத்து மாணவர் மனங்களிலும் மண்டிக்கிடக்கிறது. இந்நிலை மாறும்போது தன்னம்பிக்கை இழந்து , தவறான பாதைகளுக்குச் செல்லத் தொடங்குகிறார்கள். மதிப்பெண்களைத் தாண்டியும் ஒரு உலகம் இருக்கிறது என்பதை மாணவர்கள் உணர வேண்டும். பெற்றோர்களும் ஆசிரியர்களும் உணர்த்த வேண்டும். படிப்பில் தோல்வியுற்ற பல மாணவர்கள் வாழ்க்கையில் வெற்றி பெற்றுள்ளார்கள் என்பதை உணர்த்த வேண்டும். புத்தகப் பையோடு , தன்னம்பிக்கையையும் தோளில் சுமக்கக் கற்றுத் தர வேண்டும். அப்போதுதான் அவர்கள் வெற்றி எனும் பூந்தோட்டத்திற்குள் சென்று மகிழ்ச்சியெனும் தேன் குடிக்க முடியும். மாணவர் வாழ்வு வளமாய் , நலமாய் விடியும்.

தன்னம்பிக்கையே வாழ்க்கை :

படிப்பதற்கும் , சாதனை படைப்பதற்கும் வயது தேவையில்லை என்பதை நிருபித்திருக்கிறார் அறுபத்தேழு வயது நிரம்பிய செல்லத்தாய் என்ற நம் தமிழகத்து தன்னம்பிக்கைப்  பெண்மணி. ' இளமையில் கல் ' என்பது முதுமொழி என்றாலும் , கல்வி கற்பதற்கு வயது ஒரு தடையல்ல. படிக்கும் பருவத்திலுள்ள மாணவர்கள் கூட படிப்பிலே அலட்சியம் காட்டுகின்ற இக்காலத்தில் , பாட்டியாக இருக்கக்கூடிய ஒருவர் தமிழ்நாடு திறந்த நிலைப் பல்கலைக்கழகத்திலே எம்.ஏ பட்டம் பெற்று கவர்னரிடம் பாராட்டைப் பெற்றுள்ளார். இந்த வயதில் ஏன் படிக்க வேண்டும் ? என நினைக்காமல் , எம்.ஏ பட்டம் பெற்று , பெண்கள் மட்டுமன்றி ஒட்டு மொத்த மக்களுக்கும் முன்மாதிரியாகத் திகழ்கிறார் செல்லத்தாய் என்ற தன்னம்பிக்கைப் பெண்மணி.

உள்ளத்தில் தன்னம்பிக்கை உள்ளவர்களுக்கு , உடலில் உறுப்புகள் இல்லை என்ற கவலை இல்லை. இரண்டு கைகளும் , இரண்டு கால்களும் இல்லாமல் ஒரு மனிதன் வாழ முடியுமா ? வாழ்ந்தாலும் சாதிக்க முடியுமா ?  அப்படியே சாதித்தாலும் உலகளவில் உன்னத மாற்றத்தை ஏற்படுத்த முடியுமா  ? கோடிக்கணக்கனக்கான மக்களுக்கு உற்சாகத்தையும் , தன்னம்பிக்கையையும் ஊட்ட முடியுமா ? தனது திறமையை வெளிக்காட்ட முடியுமா ?  இந்த  கேள்விகளுக்கெல்லாம் ' ஆம் ' எனும் பதில்தான் ' நிக்வாய்சஸின் ' வாழ்க்கை. பிறக்கும் போதே இரண்டு கால்களும் , கைகளும் இல்லை.பல்வேறு பிரச்சனைகளை , சவால்களை எதிர்கொண்டு தான் உயரவேண்டும் என தன்னம்பிக்கையைக் கையிலெடுத்தார். இன்று உலகில் எல்லா நாடுகளிலும் பயணித்து தன்னம்பிக்கை தளர்ந்த மனிதர்களுக்கு ஊக்கம் கொடுத்துக் கொண்டிருக்கிறார் இந்த உன்னத மனிதர்.இன்றைய காலகட்டத்தில் இவர் நமக்கெல்லாம் முன்னோடி எனச்சொல்வது சாலப் பொருத்தமானதாகும்.

காலை எழுந்ததும் :

காலை எழுந்து , கண்ணாடி  முன் நின்று நமக்குள் ஒரு சுயபிரகடனம் செய்து கொள்ள வேண்டும் தினமும்.  நான் மிகச் சிறந்த வெற்றியாளன் , நான் தன்னம்பிக்கை நிறைந்தவன். என்னால் எதையும் சாதிக்க முடியும் . மலர்ந்துவிட்ட இந்த நாளில் முகமலர்ச்சியோடு , என்னால் இயன்ற உதவிகளைப் பிறர்க்குச் செய்வேன். இன்றைய தினம் செய்ய வேண்டிய பணிகளைப் பட்டியிடுவேன் . எனக்குள் எந்த குறைகளும் இல்லை. மன நிறைவோடு இந்த நாளை எதிர்கொள்ளப் போகிறேன் என நேர்மறை எண்ணங்களோடு காலைப் பொழுதைக் கரம் கோர்த்தால் மனம் உரமாகும்.

திசைகாட்டிகள் இன்றி காலையில் தன் பறத்தலைத் தொடங்குகின்ற பறவை , இரை முடித்து மீண்டும் கூடு திரும்புவதற்கு அது நம்புவது தன் சிறகுகளில் இருக்கும் தன்னம்பிக்கையை மட்டும்தான்.
தன்னை விட எடை கூடுதலாக உள்ள பொருளை எறும்பு அசாத்தியமாகத் தூக்கிச் செல்கிறது. ஆனால் ஆறறிவு படைத்த நாம் ?

' சுடும் வரை நெருப்பு
சுற்றும் வரை பூமி
போராடும் வரை மனிதன் , நீ மனிதன் '  என்றார் கவிப்பேரரசு வைரமுத்து. தன்னம்பிக்கை திறவுகோல் நம்மிடம்  இருந்தால் வெற்றிக்கதவினை எளிதில் திறக்கலாம்.

முடியாது என்பது மன ஊனம் - நீ
முயலாமைதான் அவமானம் !
விடியாமைக்கு யார் மூலம் - மனம்
விழித்தால் உண்டே எதிர்காலம் !

என்ற கவிஞர் பல்லவனின் தன்னம்பிக்கை  வார்த்தைகளை
நமக்குள் விதையாய் விதைப்போம் ! வெற்றியெனும்   விருட்சமாய் வளரும் ! தினமும் மகிழ்ச்சிப் பூக்கள் மலரும் !

கட்டுரை

மு.மகேந்திர பாபு ,
தமிழாசிரியர் .
அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளி , இளமனூர் , மதுரை. - 625 201.
பேசி - 97861 41410

Post a Comment

0 Comments