ஏற்றம் தரும் இளைஞர்கள்.- மு.மகேந்திர பாபு .

 


தினமலர் - என்பார்வை - கட்டுரை - மு.மகேந்திர பாபு .

ஏற்றம் தரும் இளைஞர்கள்.

ஒளிபடைத்த கண்ணினாய்  வா வா வா
உறுதிகொண்ட நெஞ்சினாய் வா வா வா
களிபடைத்த மொழியினாய் வா வா வா
கடுமை கொண்ட தோளினாய் வா வா வா
தெளிவு பெற்ற மதியினாய் வா வா வா
                 என இளைய சமுதாயத்தை நோக்கி இன்முகத்தோடு அழைத்தார் மகாகவி பாரதி. இன்றைய இளைய சமுதாயம் ஏற்றத்தையும் , மாற்றத்தையும் நோக்கி மகத்தான பாதையில் மகிழ்வோடு பயணித்துக் கொண்டிருக்கிறது. பாட்டுப்பாட்டன் பாரதியின் வரிகளில் மீண்டும் சொல்வதென்றால் ,

' எடுத்த காரியம் யாவினும் வெற்றி
எங்கு நோக்கினும் வெற்றி ' என்ற வெற்றிப் பாதையில் வீறுநடை போடுகிறது இளைய சமுதாயம்.முயற்சியையும் , பயிற்சியையும் இருகண்களாகக் கொண்டு , அகமும் முகமும் மகிழ்ந்து தன்னுடன் இருப்பவர்களையும் , குழு மனப்பான்மையுடன் அரவணைத்துச் செல்கின்றனர் இன்றைய இளைஞர்கள். நான்கு இளைஞர்கள் சேர்ந்தால் வெட்டிப்பேச்சுப் பேசி நேரத்தை வீணடிப்பார்கள் என்ற நிலை மாறி , வெற்றிப்பேச்சுப் பேசி நாடும் , வீடும் நலமாய் இருக்க , வளமாய் இருக்க நல்ல சிந்தனையோடு , நற்செயல்களும் செய்வார்கள் என்பதற்கு இன்றைய இளைஞர்கள் எடுத்துக்காட்டாக உள்ளனர். தானும் உயர்ந்து , தன்னுடன் இருப்பவர்களையும் உயர்த்தும் உயர்ந்த மனப்பான்மை இன்றைய பள்ளி , கல்லூரி இளைஞர்களிடம் , இளைஞிகளிடம் விரிந்து இருப்பதைக் காணலாம்.


எல்லைச்சாமிகளாக இளைஞர்கள்.

' மனதில் உறுதி வேண்டும்
வாக்கினிலே இனிமை வேண்டும் ' - என்ற மாகவிஞன் பாரதியின் வரிகளுக்குச் சொந்தக்காரர்கள் இளைஞர்கள். நம் அண்டை நாடுகள் எல்லாம் சண்டை நாடுகளாகவே இருக்கின்றன.சுற்றியிருக்கும் நாடுகளால் இன்னல்களே நம்மைச் சூழ்ந்திருக்கின்றன. ஒப்பந்தங்களை  மீறி எல்லைக்குள் நுழைந்து தொல்லை தரும் எதிரிகளின் எல்லாச் சூழ்ச்சிகளையும் முறியடித்தும் , நாட்டிற்காகத் தன் இன்னுயிரைத் தரும் எல்லைச்சாமிகளாக அன்று முதல் இன்று வரை இளைஞர்கள் திகழ்ந்து வருகிறார்கள்.

சீனாவின் சமீபத்திய அத்துமீறலால் தம் உயிரை நாட்டிற்காக அர்ப்பணித்த   நம் இந்திய வீரர்களின் தியாகத்தை  என்னவென்று சொல்வது ? எல்லையில் நம் வீரர்கள்  விழித்திருந்து நாட்டைத் தாங்கிக் கொண்டிருப்பதால்தான் , நாம்  இரவிலே  நிம்மதியாகத்  தூங்கிக் கொண்டிருக்கிறோம்.  போருக்குச் சென்ற தன் மகன் வீரமரணம் அடைந்தான் என்று பெருமைப்பட்ட நம் புறநானூற்றுத்தாய் போல்தான் இன்றைய தாய்களும் இருக்கின்றார்கள்.  எத்தனையோ கிராமங்கள் இராணுவத்திற்கும் ,  மக்கள் சேவைக்கும் என தம் இளைஞர்களைத் தயார் செய்து வருகின்றன. 

மக்கள் பணியில் இளைஞர்கள்.
                  
                      சமூகச் சிந்தனையுடன் சக மனிதர்களைச்  சரிநிகர் சமானமாகக் கருதும் மனநிலை இன்றைய இளைஞர்களின் மனவயலில் மரமென வேரூன்றியுள்ளது. சாதி , மத , இன , மொழி பேதமின்றி உலகளாவிய உள்ளத்துடன் தங்கள் பயணத்தைத் தொடங்குகிறார்கள். வீட்டில் தலைப்பிள்ளையாய் இருக்கும் இளைஞர்கள் , தந்தையின் பொறுப்பை விருப்புடன் தமதாக்கி நட்பு பாராட்டுகிறார்கள்.  விடுமுறை  என்றால் ஏதேனும்  ஒரு ஆடுகளத்தில் அடைந்துவிடுவார்கள் என்ற நிலையை மாற்றி , வீதியில் இறங்கி சுத்தம் செய்யவும் , மரக்கன்றுகளை நட்டுவைத்துப் பராமரிக்கவும் , பாதுகாக்கவும் செய்கிறார்கள் .  ' முன்னாள் மாணவர் சங்கம் '  அமைத்து தான் படித்த பள்ளிக்குத் திறன் வகுப்பறை , நூலகம் அமைத்தல்  , வண்ணம் பூசுதல் என தங்களால் இயன்ற உதவிகளை நண்பர்களுடன் இணைந்து செய்து வருகிறார்கள்.

பத்து இளைஞர்கள் ஒன்று கூடினால் நிச்சயம் அங்கே பயனுள்ள செயல்பாட்டிற்கான சிந்தனை ஒன்று அவர்களின் மனங்களில் மலர்ந்திருக்கும். மகத்தான சேவையாய் வளர்ந்திருக்கும். இயற்கைப் பேரிடர்கள் முதல் இன்றைய கொரனா ஊரடங்கு வரை இளைஞர்களின் பேராற்றலையும் , உதவி செய்வதில் உள்ள பேரார்வத்தையும் பார்த்து வியக்கிறோம். சரித்திரம் படைத்த ஜல்லிக்கட்டு முதல் சாமான்ய மக்களின் சட்டத்துணை வரை இன்றைய இளைஞர்களின் மக்கட்பணி என்பது பாராட்டிற்குரியது.

வழிகாட்டும் இளைஞர்கள்.

எண்ணிய முடிதல் வேண்டும்
நல்லவை எண்ணல் வேண்டும்
திண்ணிய நெஞ்சம் வேண்டும்
தெளிந்த நல்லறிவு வேண்டும் 
-  என்ற பாட்டுப்பாட்டன் பாரதியின் மகத்தான வார்த்தைகளை மனதில் கொண்டு பயணிக்கிறார்கள் இளைஞர்கள் . தன் உடல் நலம் பேணுவது முதல் ஊர் நலம் பேணுதல் வரை இளைஞர்கள் அனைவருக்கும் வழிகாட்டியாகத் திகழ்ந்து வருகிறார்கள்.இதைச்செய் , அதைச்செய் என எடுத்துரைக்கவோ , இடித்துரைக்கவோ தேவையில்லை. ஆபத்தில் சிக்கியவருக்கு இரத்தம் தேவையென இருவரை அழைத்தால் , இருபது இளைஞர்கள் அங்கே வந்து , இரத்தம் தந்து செல்கிறார்கள் . நம் மனங்களை வெல்கிறார்கள்.

ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் மகன்கள்  பொறியாளராக , மருத்துவராக வரவேண்டும் என்ற விருப்பத்தில் உள்ளார்கள். பெற்றோருக்காகப் பட்டப்படிப்புகள் படித்தாலும் , மண்ணையும் மக்களையும் காக்கும் வேளாண்மையை விரும்பிச் செய்யும் இளைஞர்களை இங்கே நாம் பாராட்ட வேண்டும். வேளாண் விஞ்ஞானி ஐயா நம்மாழ்வார் எடுத்துரைத்த  இயற்கை விவசாயத்தை இளைஞர்கள் மனமுவந்து செய்து வருகிறார்கள். ரசாயானமற்ற உணவுப் பொருட்களை நமக்குத் தருகிறார்கள்.மண்ணைப் பக்குவப் படுத்தியும் , மனங்களைப் பக்குவப்படுத்தியும் மகசூல் என்னும் மகத்தான வெற்றியை இளைஞர்கள் பெற்றுவருகிறார்கள்.

சமூக வலைதளங்களில் சாதிக்கும் இளைஞர்கள்.

      அறிவியல் தொழில் நுட்பத்தால் உலகம் இன்று உள்ளங்கைக்குள் சுருங்கிவிட்டது. திறன் மிகுந்த நம் இளைஞர்கள் திறன் பேசிக்குள் தன்னைத் தொலைத்துவிடாமல் , தாம் கற்றதையும் பெற்றதையும் கொண்டு திருவாய் மலர்ந்து , பல தொழில்நுட்பங்களை காட்சிப்பதிவாக்கி சமூக வலைதளங்களில் வருவாய் ஈட்டி வருகிறார்கள் .  தான் படித்த படிப்பிற்கேற்ப வேலை தேடியது ஒரு காலம். இன்று எவ்வளவு படித்திருந்தாலும் , தன் திறமையின் மூலமாக வீட்டிலிருந்தே பயனுள்ள பல செய்திகளைப் பிறர்க்கு சமூக ஊடகங்கள் மூலமாகத் தந்து வருகிறார்கள் இளைஞர்களும் பெண்களும். ஆணுக்கு நிகராகப் பெண்களும் சாதித்து வருவது பாராட்டிற்குரியது. வீட்டில் சமையல் செய்வது முதல் விண்வெளியில் பறப்பது வரை அனைத்துத் தகவல்களையும் வழங்கி வருவாய் ஈட்டுகிறார்கள். தங்கள் திறமையைக் காட்டுகிறார்கள்.
அறிவியல் செய்திகளையும் , அனுபவச் செய்திகளையும் இன்றைய இளைஞர்கள் தாமாகக் கற்று ஊடகங்கள் மூலம் வழங்கி வருகிறார்கள் . செல்போன் கையில் இருந்தால் சீரழிந்து விடுவார்கள் என்ற நிலை மாறி , செல்போன் கையிலிருந்தால் சிலவற்றைச் சீர்செய்வார்கள் என்ற நிலையை உருவாக்கியுள்ளார்கள்.

சாதனை இளைஞர்கள்.

           பிறந்தோம் , இருந்தோம் , இறந்தோம் என்றில்லாமல் , பிறந்தோம்  , இருந்தோம் , சிறந்தோம் ; மக்கள் மனங்களில் நிறைந்தோம் என்ற நிலையை உருவாக்கி வருகிறார்கள் இன்றைய இளைஞர்கள்.

' வெறுங்கை என்பது மூடத்தனம்
உன் விரல்கள் பத்தும் மூலதனம் !
கருங்கல் பாறையும் நொறுங்கி விழும்
உன் கைகளில் பூமி சுழன்று வரும்  !' - என்ற தன்னம்பிக்கைக் கவிஞர் தாராபாரதியின் வார்த்தைகளுக்கேற்ப இளைஞர்களின் கைகளில் இன்பமாய் பூமி சுழன்று வருகிறது.

துள்ளிச்செல்லும் பள்ளிப்பருவத்து இளைஞர்களும் , கல்லூரிக்குள் நுழைந்த கட்டிளம் காளையர்களும் , தங்கள் மனங்களில் சேவை என்னும் நற்பண்பை நிரப்பியிருக்கிறார்கள். வழி நடத்த மூத்தோர்களும் முன்வருகிறார்கள். இளைஞர்களின் கரம் மூத்தோர்களின் கரத்தோடு ஒன்றிணைந்து செயல்படுவதால் வெற்றிக்கனிகளே கைக்குக் கிட்டுகின்றன. நம் கனவு நாயகர் கலாம் ஐயா சொன்னதைப் போல ,

' ஒருநாள் நிச்சயம் விடியும் - அது
உன்னால் மட்டுமே முடியும் !

ஆம் இளைஞர்களே ! இது இளைஞர்களின் காலம் ! இனி இன்பமே எந்நாளும் !

மு.மகேந்திர பாபு ,
தமிழாசிரியர் , அரசு ஆ.தி.ந.மேல்நிலைப் பள்ளி , இளமனூர் , மதுரை.

பேசி - 97861 41410 . 

Post a Comment

0 Comments