கல்வி தந்த வள்ளல் பெருந்தகை காமராசர் - மு.மகேந்திர பாபு

 


கல்வி தந்த வள்ளல் பெருந்தகை  காமராசர்

கதராடைக்குள் மறைந்திருந்த கருப்பு நிற மேனிக்குள் , வெள்ளை மலராய் பூத்திருந்தது அவரது உள்ளம். பட்டிதொட்டி எங்கும் அவரது பாதம்பட  , கரை புரண்டு ஓடியது கல்வி வெள்ளம்.படிக்காத மேதை என்றழைக்கப் பட்டவர் பின்னாளில் பல்கலைக்கழகமாக உயர்ந்தார்.  மக்கள் கொடுத்த பதவி மக்களுக்கு உதவி செய்வதற்கே என தன்னை அர்ப்பணித்தவர்.நிகழ்காலம் மட்டுமன்றி எதிர்காலத் தமிழகத்தின் தேவையையும் தன் ஞானத்தால் அறிந்தவர் . அணைகள் பல அமைத்து ஓடும் நீரைத் தேக்கி , மக்கள் உள்ளங்களிலும் மகிழ்ச்சியைத் தேக்கியவர். அவரது நீளமான கை கல்வியைப் பிள்ளைகளுக்கு ஊட்டுவதற்காக நீண்டது. அறியாமை இருள் மாண்டது. யார் அவர் ? அவர்தான் தந்தை பெரியாரால் ' பச்சைத்தமிழன் ' என அழைக்கப்பட்ட கல்விக்கண் திறந்த பெருந்தலைவர் , ஏழைகளின் பங்காளர் , கர்மவீரர் காமராசர் அவர்கள்.

விருதுப்பட்டி பெற்ற விருது.

விருதுப்பட்டி என்னும் கரிசல் மண்ணில் உதித்த கருப்பு வைரம். அன்றைய விருதுப்பட்டியான இன்றைய விருது நகர் பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் தொடர்ந்து மாநில முதன்மை பெற்றுச் சரித்திர சாதனை படைத்து வருகிறது. காரணம் , கல்வி பிறந்த ஊரல்லவா அது ? சாதனைகள் தொடரத்தானே வேண்டும் ? 

' நிமிர்ந்தால் தலையிடிக்கும்
நிற்பதற்கே இடமிருக்கும் 
அமைவான ஒரு குடிலில் 
ஐயா நீ வந்துதித்தாய் ' 

- என்று கர்மவீரரின் எளிமையான இல்லத்தை வார்த்தையில் வடித்தார் கவியரசு கண்ணதாசன் அவர்கள்.

ஒவ்வொரு நாளும் , மாதமும் , ஆண்டும் ஏதேனும் ஒரு விதத்தில் எதிர்காலத்தில் மறக்க முடியாத நிலையைப் பெற்றுவிடுகிறது. அந்த வகையில் 1903 ஆம் அண்டு ஜூலை மாதம் 15 ஆம் தேதியை வரலாறு தன் பக்கங்களில் கல்வி பிறந்த நாளாக , வளர்ச்சி நாளாக எழுதி வைத்துக் கொண்டது. ஆம் ! அன்றுதான் கர்மவீரர் , குமாரசாமி - சிவகாமி தம்பதியினர்க்கு குழந்தையாக வந்துதித்தார். ஐந்தாவது வயதில் தந்தையை இழந்து , பின்னாளில் பள்ளி செல்லும் ஐந்து வயதுக் குழந்தைகளுக்கு கல்வி தந்த தந்தையாக மாறினார். திருமணமே செய்து கொள்ளவில்லை. ஆனாலும் அனைத்துக் குழந்தைகளுக்கும் கல்வித்தந்தையாக உயர்ந்தார்.

கல்வி வளர்ச்சி

' கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு
மாடல்ல மற்றை யவை ' 

- என்ற வான் புகழ் கொண்ட வள்ளுவப் பேராசானின் வார்த்தைகளை நன்கு உணர்ந்தவர் கர்மவீரர் அவர்கள். அறியாமை என்ற இருளை அகற்றிய ஞானதீபம். கல்வி ஒன்றே மக்களின் உயர்விற்கான ஒரே வழி என்பதை உணர்ந்திருந்தார் பெருந்தலைவர். அனைவருக்கும் கல்வி வழங்க வேண்டும் என்பதை சபதம் போலவே ஏற்றார். இருநூறு ஆண்டு காலத்தில் பெற்ற கல்வி வளர்ச்சிக்கு மேலான வளர்ச்சியை எட்டாண்டு காலத்தில் வழங்கியவர் கர்மவீரர் என்று கல்வித்துறை அறிஞர் நெ.து.சுந்தரவடிவேலு குறிப்பிடுகிறார். ' கல்விக்கண் கொடுத்த வள்ளல் ' என்று புகழ்ந்தார் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் . கர்மவீரரின் ஆட்சிக் காலத்தில் மட்டும் தமிழகத்தில் தோன்றிய பள்ளிகளின் எண்ணிக்கை ஆறாயிரத்திற்கும் மேல். முந்நூறு பேர் கொண்ட ஓர் ஊருக்கு ஒரு பள்ளி எனத் திட்டமிட்டார். இலவசக் கல்வித் திட்டமும் மதிய உணவுத் திட்டமும் செயல் படுத்தப் பட்டன. சுமார் நான்கு இலட்சம் என்றிருந்த கற்றோர் எண்ணிக்கை , பதின்மூன்று இலட்சம் என்ற எண்ணிக்கையை எட்டியது. 

மதிய உணவு தந்த மாமனிதர்.

பெருந்தலைவர் காமராசர் அவர்கள் செய்த பெரும்புரட்சி  ' மதிய உணவுத் திட்டமாகும் ' . வறுமை காரணமாக பள்ளிக்கு வராமல் , சிறுவயதிலேயே பிழைப்புக்காக வேலைக்குச் செல்லும் சிறுவர்களைப் பள்ளிக்கு வரவைப்பதற்காகவும் , கல்வி வளர்ச்சிக்காகவும் இத்திட்டத்தை பெருந்தலைவர் தொடங்கினார். 1955 ஆம் ஆண்டு மார்ச் 27 ஆம் நாள் சென்னை பூங்கா நகர் மெமோரியல் மண்டபத்தில் சென்னை மாகாண தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் மாநாடு நடந்தது. அந்த மாநாட்டைத் தொடங்கி வைக்க முதலமைச்சர் காமராசர் வந்திருந்தார். மாநாட்டில் பேசுகையில் , மதிய உணவுத் திட்டத்தை கொண்டுவரப்போவதாக அறிவித்தார். மேலும் , தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஊரிலும் தொடக்கப்பள்ளி அமைக்க வேண்டும் . பள்ளிக்கூடம் இருக்கிற ஊர்களில் எல்லாக் குழந்தைகளும் படிக்கப் போவது இல்லை.ஏழைப் பையன்களுக்கும் , பெண் குழந்தைகளுக்கும் வயிற்றுப்பாடு பெரும்பாடாக இருக்கிறது. ஒருவேளை கஞ்சி கிடைத்தால் போதும் என்று ஆடு , மாடு மேய்க்கப் போய்த் தங்களது எதிர்காலத்தைப் பாழாக்கிக் கொள்கிறார்கள். அவர்களைப் பள்ளிக்கூடங்களுக்கு வரச் செய்வது முக்கியம். அதற்கு ஏழைக் குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்க வேண்டும். தொடக்கத்தில் ஒருகோடி செலவாகும். சில ஆண்டுகளில் மூன்று கோடி , நான்கு கோடி கூட செலவாகலாம். நம் பிள்ளைகளில் கல்வி வளர்ச்சிக்கு இது பெரிய பணம் இல்லை.தேவைப்பட்டால் அதற்காக தனிவரிகூட போடலாம் என்றார்.

பாட்டாலே புரட்சி செய்த பாட்டுக்கொரு புலவன் பாரதி பிறந்த ஊரான எட்டையபுரத்தில் 1956 ஆம் அண்டில் முதன்முதலாக மதிய உணவுத் திட்டத்தைத் தொடங்கினார். திட்டத்தைத் தொடக்கி வைத்து ,பெருந்தலைவர் பேசினார்.

அன்னதானம் நமக்குப் புதிதல்ல. இதுவரை வீட்டுக்கு வந்தவர்களுக்கு உணவளித்தோம். இப்போது பள்ளிக்கூடத்தைத் தேடிச்சென்று சோறு போடுகிறோம். இதன்மூலம் உயிர்காத்த புண்ணியமும் , படிப்பு கொடுத்த புண்ணியமும் சேரும். எல்லோர்க்கும் கல்விக்கண்ணைத் திறப்பதை விட எனக்கு முக்கியமான வேலை வேறு இல்லை. எனவே , மற்ற எல்லா வேலைகளையும் ஒதுக்கி வைத்துவிட்டு , ஊர்வலமாக வந்து பகல் உணவுத் திட்டத்திற்கு பிச்சை எடுக்கவும் சித்தமாக இருக்கிறேன் என்றார். அதனால்தான் அவர் பெருந்தலைவராக என்றும் நம் இதய சிம்மாசனத்தில் இருக்கிறார்.

குழந்தைகளின் குருநாதர்.

தன்னைத் தேடி வந்து உதவி கேட்பவர்கள் , உதவி பெறுவதற்கு சரியானவர்கள் என்றால் மறுக்காது , மறக்காது உதவி செய்வார் பெருந்தலைவர் அவர்கள். ஒருநாள் பெருந்தலைவர் வீட்டில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார். அப்போது அவரைப் பார்க்க ஒரு சிறுவனும் , சிறுமியும் அழுக்காடைகளுடனும் , பரட்டைத் தலைகளுடனும் வந்தார்கள். அவர்களது தோற்றம் ஏழ்மையைப் பறைசாற்றியது. பணியாளர் அவர்களை உள்ளே விடாமல் விரட்டுகிறார். கேட் வரை ஓடிய குழந்தைகள் இருவரும் தயங்கித் தயங்கி நிற்கிறார்கள். தம்மைப் பார்க்க வந்தவர்களை வாசல்வரை வந்து வழியனுப்பிய பெருந்தலைவரின் கண்களில் அந்தக் குழந்தைகள் பட்டுவிட்டார்கள். யாரைப் பார்க்க வந்தீங்க ? என்றார். சிறுமி தயக்கத்துடன் , உங்களைப் பார்க்கத்தான் வந்தோம். எங்களுக்கு அப்பா இல்லை. அம்மா மட்டுந்தான். அண்ணனுக்கு டைப்ரைட்டிங் பரிட்சைக்கு பீஸ்கட்ட பணம் இல்லை. உங்களைப்பார்த்தா உதவி செய்விங்கனு எல்லோரும் சொன்னாங்க.அதான் வந்தோம் என்றாள் .

அவர்களை அன்போடு தட்டிக்கொடுத்தபடி , அம்மாதான் அனுப்பிச்சாங்களா ? என்றார். இல்லை , நாங்களாகத்தான் வந்தோம் . அம்மா அப்பளம் போட்டு வீடுவீடா விக்கிறாங்க. அந்த வருமானத்தில எங்கள படிக்க வைக்கிறாங்க என்று சொன்னதும் , வீட்டிற்குள் சென்று கையில் கவரோடு வந்தார்.சிறுமியிடம் கொடுத்து , இதில் கொஞ்சம் பணம் இருக்கு. அண்ணனுக்கு பீஸ் கட்டுங்க. அம்மா பேச்சைக்கேட்டு நல்ல பிள்ளைகளா நடக்கணும் என்றார். மறுநாள் மீண்டும் வந்த குழந்தைகள் , பரிட்சைக்கு பணம் கட்டிவிட்டோம் ஐயா. அந்த ரசீதை அம்மா உங்களிடம் காட்டிட்டு வரச்சொன்னாங்க என்று ரசீதை பெருந்தலைவரிடம் சிறுமி நீட்டினாள். பெருந்தலைவர் கண்கலங்கி விட்டார். ஏழ்மையிலும் இவ்வளவு நேர்மையா என குழந்தைகளை அன்போடு தட்டிக்கொடுத்து வாசல்வரை வந்து வழியனுப்பி வைத்தார்.

அன்னசத்திரம் ஆயிரம் வைத்தல்
ஆலயம் பதினாயிரம் நாட்டல்
அன்னயாவினும் புண்ணியம்கோடி
ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல் 

என்ற மகாகவியின் வரிகளுக்கு உரமூட்டியவர் பெருந்தலைவர். பள்ளிக்கூடம் சென்று அதிகம் படிக்காத அந்த மேதையின் நினைவைப் போற்றும் விதமாக அவரது பிறந்த நாளை தமிழக அரசு ' கல்வி வளர்ச்சி நாளாக ' கொண்டாடி வருகிறது. நாமும் கொண்டாடுவோம் கர்மவீரரையும் , கல்வியையும் ! 

மு.மகேந்திர பாபு , 
பட்டதாரி தமிழாசிரியர் ,
அரசு ஆ.தி.ந.மேல்நிலைப்பள்ளி 
இளமனூர் , மதுரை .
பேசி - 97861 41410.

Post a Comment

0 Comments