சூழல் காத்துச் சுகம் பெறுவோம் ! - உலகச் சுற்றுச்சூழல் தினம் - ஜூன் - 5 - மு.மகேந்திர பாபு

 

சூழல் காத்துச் சுகம் பெறுவோம் !

(உலகச் சுற்றுச்சூழல் தினம் - ஜூன் - 5 )
கட்டுரை - மு.மகேந்திர பாபு , தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்ஙாளர் & பட்டதாரி தமிழாசிரியர், அரசு மேல்நிலைப் பள்ளி ( ஆதிந ) , இளமனூர்.

மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழற்
காடும் உடையது அரண்.
      தெளிந்த நீரும் , பரந்த நிலமும் , உயர்ந்த மலையும் , அடர்ந்த காடும் இயற்கை அரண்களாகும் என்று இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நம் வள்ளுவப் பெருந்தகை கூறியுள்ளதன் மூலம் , நம் பழந்தமிழர்களின் சுற்றுச்சூழல் குறித்த பார்வையினை நாம் அறியலாம்.

இயற்கைதான் மிகப்பெரிய பள்ளிக்கூடம். தினம் தினம் நமக்கு நடத்துகிறது பாடம். கட்டணம் பெறாத ஆசானாகத் திகழ்கிறது இயற்கை . மலைகளும் , மரங்களும் , ஆறுகளும் , கடல்களும் , பறவைகளும் , விலங்குகளும் நமக்கான வாழ்க்கைப் பாடங்களைத் தினமும் கற்றுக் கொடுத்துக் கொண்டேதான் இருக்கின்றன. கற்றுக் கொடுக்கும் ஆசான்களைக் காப்பாற்ற வேண்டியது நமது கடமையாகும். மனித இனம் , தம் சுற்றம் குற்றமற்று வாழ , சுற்றுச் சூழலால் ஆளப்பட வேண்டும்.

உலக சுற்றுச்சூழல் நாள் :

                       ஒவ்வொரு.ஆண்டும் ஜூன் - 5 ஆம் தேதி உலக சுற்றுச் சூழல் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளை சுற்றுச் சூழல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் ஒரு தினமாக ஐக்கிய நாடுகள் பயன்படுத்தி வருகின்றன. அரசியல் கவனத்தையும் , செயல்முறைகளையும் அதிகரிக்க இந்த நாள் பயன்படுகிறது. உயிர்களின் வாழ்க்கை தொடர்பான பல்வேறு சுற்றுச் சூழல் பிரச்சினைகளுக்கு மனிதரை எதிர்கொள்ளச் செய்வதும் , உலகச் சுற்றுச் சூழல் பிரச்சினைகளுக்கும் , சுற்றுச் சூழல் கல்விக்கும் அழுத்தம் கொடுப்பதும் , சுற்றுச் சூழலைப் பேணுவதில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் இத்தினத்தின் முதன்மை நோக்கமாகும்.  1972 இல் சுவீடனின் தலைநகரான ஸ்ரொக்ஹோமில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் ' மனித குடியிருப்பும் , சுற்றாடலும் ' என்ற வரலாற்றுப் புகழ்மிக்க உலக மாநாட்டில் உலக சுற்றுச் சூழலின் முக்கியத்துவம் , இயற்கை வளங்கள் , அதன் பயன்பாடு போன்றவை பற்றிக் கலந்துரையாடப் பட்டது.

மாறிவரும் இயற்கைச் சமநிலை :

                               இயற்கை வளங்களான நீர்நிலைகள் , காடுகள் , காட்டுயிரிகள் , காற்று மணடலம் , பறவைகள் , கடற்கரைகள் என அனைத்தும் மனித குலத்துக்காக வடிவமைக்கப்பட்ட பொக்கிசங்களாகும். மனித இனம் , விலங்கினம் , பறவையினம் , தாவர இனம் , கடல்வாழ் உயிரினங்கள் என அனைத்தின் நல்வாழ்வும் இந்தச் சுற்றுச் சூழலிலின் சமநிலையில்தான் உள்ளது. இச்சுற்றுச் சூழலின் சமநிலையில் ஏற்படும் மாற்றங்கள் சுற்றுச் சூழலை மட்டுமன்றி உயிரினங்களின் வாழ்வுக்கும் அச்சுறுத்தலாகவும் , ஆபத்ததாகவும் அமைந்து விடுகின்றன.  நவீன விஞ்ஞான , தொழில் நுட்ப வளர்ச்சியின் காரணமாக சுற்றுச் சூழல் இன்று மாசடைந்து வருகிறது. சுற்றுச் சூழலைப் பேணிப் பாதுகாக்க வேண்டியதன்  அவசியத்தை உணர்ந்து  செயல்படத் தவறியதன் விளைவுகளை மனிதகுலம் இப்போது தாராளமாக அனுபவிக்கத் தொடங்கி விட்டது.

சுற்றுச் சூழல் காப்பதில் பள்ளிகளின் பங்கு :

                                      ' இயற்கையைப் பராமரிக்க மனிதருக்குக் கற்றுக் கொடுக்க ஒரே வழி அவர்கள் குழந்தையாக இருக்கும்போதே இயற்கையைப் புரிய வைப்பதுதான் ' என்கிறார் அறிஞர் கான்ராட் லாரன்ஸ். குழந்தைப் பருவத்தில் விதைக்கப்படும் நல்ல எண்ணங்கள்தான் மனிதராக மாறும்போது அவை மரமாக வளர்ந்து நிற்கும் . இதைப் பள்ளிகள் சிறப்பாகச் செயல்படுத்தி வருகின்றன . பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டு வருகின்ற சுற்றுச்சூழல் மன்றம் , தேசிய பசுமைப்படை மூலமாக மாணவர்களிடம் சுற்றுச் சூழல் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. மாணவர்களின் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் சாக்லேட் மிட்டாய்களுக்குப் பதிலாக , மரக்கன்று ஒன்றை நடச்செய்து பராமரிக்கச் செய்தல் , அரசு விழாக்களின் சிறப்பைப் போற்றும் வகையில் ஒவ்வொரு அரசு விழாக்களிலும் ஒருமரக்கன்றாவது நடச்செய்து பராமரித்தல் , தேசத்தலைவர்களைப் போற்றும் வகையில் அவர்களது பெயரிலேயே மரக்கன்று நடச்செய்தல் , உலக சுற்றுச் சூழல் தினம் , உலக வனநாள் போன்ற தினங்களைப் பள்ளிகளில் கொண்டாடாடுதல் மற்றும் விழிப்புணர்வுப் பேரணிகளை நடத்துதல் , இயற்கை உரங்களைத் தயாரிக்கவும் , பயன்படுத்தவும் கற்றுக் கொடுத்தல் , சிறப்பாக மரம் வளர்க்கும் மாணவர் குழுக்களை ஊக்கப்படுத்தும் விதமாக புத்தகங்கள் , பூச்செடிகள் பரிசளித்துப் பாராட்டுதல் , தங்கள் வீடுகளிலும் , வீதிகளிலும் மரக்கன்றுகள் நடும் பழக்கத்தை உருவாக்குதல் , இயற்கை வளங்களைப் பாதுகாத்தலின் அவசியத்தைக்கூறி மாணவர்களை இயற்கை ஆர்வலர்களாக மாற்றுதல் போன்ற பணிகளைப் பள்ளிகள் இன்று சிறப்பாகச் செய்து வருகின்றன.

சுற்றுச் சூழல் காப்பதில் தனிமனிதனின் பங்கு :

                                          ' ஒரு சந்ததி போகிறது , மறு சந்ததி வருகிறது . பூமியோ என்றென்றைக்குமாக நிலைத்திருக்கிறது ' என்கிறார் கார்ல் கேன்சன். நிலைத்து நிற்கும் பூமிதான் மனித குலம் மட்டுமன்றி அனைத்து உயிர்களுக்குமான சாமி. இயற்கை வளங்களைப் பாதுகாத்தல் , சுற்றுச் சூழல் பேணுதல் போன்றவற்றை ஒவ்வொரு தனிமனிதனும் முன்னெடுத்துச் செல்ல வேண்டும் . இந்தப் பூமிப்பந்தில் மனிதன் மட்டுமல்ல , புல் பூண்டுகளும் ஓர் அங்கம்தான் என்பதை உணர வேண்டும். பாலித்தீன் , பிளாஸ்டிக் பயன்படுத்துவதை இயன்ற அளவு குறைத்திட முயற்சிக்க வேண்டும் . கடைகளுக்குத் துணிப்பைகளைத் தூக்கிச் செல்ல வேண்டும். இன்று , மஞ்சள் பைகளையோ , துணிப்பைகளையோ தூக்கிச் செல்வதை மரியாதைக் குறைவாக எண்ணும் மனநிலை நம்மிடம் உள்ளது. இந்த எண்ணத்திலிருந்து நாம் விடுபட வேண்டும். கடைகளில் ஐந்து ரூபாய்க்குப் பொருள் வாங்கினாலும் , அதற்கும் பாலித்தின் பை கேட்கும் மனநிலையில்தான் நாம் இருக்கிறோம். துணிப்பைகளைப் பயன்படுத்தினால் நமக்கும் , எதிர்காலச் சந்ததியினர்க்கும் துக்கம் இல்லை. நெகிழிப்பைகளை நினைத்தாலே தூக்கம் இல்லை. மண்ணின் வளத்தை மடியச் செய்து விடும்.  ஒரு மரம் தன் வாழ்நாளெல்லாம் வெளியிடும் ஆக்சிஜனின் மதிப்பு ரூ.பதினைந்து இலட்சத்திற்கும் மேலானது என கணக்கிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு தனிமனிதனும் பல இலட்சங்களுக்கு அதிபதியாவான் மரக்கன்றுகளை நட்டுவைத்து மரமாக்கும் போது. எனவே , சுற்றுச் சூழலின் முக்கியப் பங்கினை தனிமனிதன் உணர்ந்து செயல்பட வேண்டும்.

சூழல் மேம்பட ...

              ' தூய்மை பாரதம் ' என்ற திட்டத்தை நமது அரசு செயல்படுத்தி அனைத்து இடங்களிலும் சுகாதாரத்தை மேம்படச் செய்துவருகிறது.  பாலித்தின் பைகளுக்கு மாற்றாக இனிப்பகம் மற்றும் கடைகளில் பனையோலைக் கொட்டான்களைப் பயன்படுத்த அறிவுறுத்தலாம். இதனால் பனைத்தொழிலாளர்களின் வாழ்க்கைநிலை மேம்படும். காகிதப் பைகளைப் பயன்படுத்தலாம். மக்கும் குப்பைகள் , மக்காத குப்பைகள் என வீடுகளிலும் , தெருக்களிலும் தனித்தனியாகக் குப்பைகளை இடச்செய்யலாம். நெகிழித் தேனீர்க் கோப்பைகளுக்குப் பதிலாக மண்பாண்டக் குவளைகளைப் பயன்படுத்தச் செய்யலாம். தன்னார்வலர்கள் , தொண்டு நிறுவனங்களின் இயற்கை சார்ந்த செயல்பாடுகளைத் தொடர்ந்து ஊக்கப் படுத்திப் பரிசுகள் வழங்கலாம்.

பாலைவனமாக மாறிக் கொண்டிருக்கும் நம் இயற்கையை அனைவரும் ஒன்றிணைந்து சோலைவனமாக மாற்றலாம். மரங்கள் நிறையும் போது , நம் மனங்களும் நிறையும். மரம் மனிதனின் மூன்றாவது கரம். மரம் நடுவோம் மனம் தொடுவோம். மாற்றம் நம்மிலிருந்து தொடங்கட்டும். இயற்கையை நேசிப்போம் ! இயன்றதை யாசிப்போம் !

கட்டுரை.

மு.மகேந்திர பாபு ,
தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் & பட்டதாரி தமிழாசிரியர் ,
அரசு மேல்நிலைப்பள்ளி ( ஆதிந ) , இளமனூர் , மதுரை.
பேசி - 97861 41410
மின்னஞ்சல் : tamilkavibabu@gmail.com

Post a Comment

0 Comments