கவிப்பேரரசு வைரமுத்து பிறந்த நாள் விழா ( 13 - 07 - 16 )
வரவேற்புரை - பொறியாளர். திரு.சுரேஷ் அவர்கள்.
அனைவரையும்
வணங்கி மகிழ்கிறேன்.
இது தனிமனிதனுக்கான விழா அல்ல.
கவித் தமிழ் மகனுக்கான விழா என
வாழ்த்த வந்திருக்கும்
உங்கள் அன்பு கண்டு நெகிழ்கிறேன்.
இன்று ,
சங்கம் வைத்துத்
தமிழ் வளரத்த மதுரை மண்ணில்
மீண்டும் ஓர் உலகத் தமிழ்ச்சங்கமா
என்ற வியப்பு அனைவரின் கண்ணில் !
ஒருங்கிணைந்த
மதுரை மண்ணின்
மடியினில் உதித்தவர் .
உலகத்தின் உள்ளமதில்
கவிச்சூரியனாய்த்
தடம் பதித்தவர்.
கவிபாடும்
இத்தேனீயைப் படைத்ததால்
வடுகபட்டி வரலாறாய் ஆனது.
தென்மேற்குப் பருவக்காற்றும்
சற்றே நின்று
கவிப்பேரரசின் கவிதை கேட்டு
இளைப்பாறிப் போனது.
இந்தக் கள்ளிக்காட்டுச் சூரியனை
ஏந்திக் கொண்டது
பாரதிராஜா எனும்
படைப்பாளுமை வானம்.
இது ஒரு பொன்மாலைப் பொழுதென
நிழல்களில் தொடங்கிய
இந்த நிஜத்தை
புகழ்மாலை தந்து ,
உச்சி முகர்ந்து
உள்ளம் பூரித்தது அந்த ஞானம்.
நகரங்களின் நடுவினில் சிக்கிக்கொண்ட
தமிழ்ச்சினிமாவை
சற்றே கரம் பிடித்து
காற்று வாங்க காலாற
கிராமத்திற்கு அழைத்து வந்தது
அந்த இயக்குநர் இமயம்.
எழுபதுக்குப் பின்பு
தமிழ்ச்சினிமாவிற்கு
நிரந்தர இடம் கொடுத்தது நம் இதயம்.
மரங்களைப் பாடிய
மகத்தான மனிதனுக்கு
தம் கரங்களால்
வாழ்த்து மழை பொழிய
வந்திருக்கிறது மல்லிகைப் பூக்கூட்டம்.
அதன் மனசுக்குள்ளே
ஆழ்ந்திருக்கு அன்பின் கொண்டாட்டம்.
மல்லிகைப் பூ மட்டுமல்ல ...
மதுரைக்காரன் மனசும் வெள்ளைதான்.
நாங்க பண்பிலும் பாசத்திலும்
பச்சப் புள்ளைதான்.
கவிப்பேரரசு வைரமுத்து
தமிழுக்குக் கிடைத்திட்ட
தங்கமான் தமிழ்ச் சொத்து.
இன்று...
மதுரையில் மீண்டும் ஒரு
சித்திரைத் திருவிழா.
இது கவிஞர்கள் திருவிழா எனும்
கவிப்பேரரசு வைரமுத்து பிறந்தநாள் பெருவிழா.
இவர் விரல்பிடித்து எழுதும்போதெல்லாம்
தமிழின் குரல் உயர்த்த
தேசிய விருதெனும் கணையாழி
கவிஞரின் கைகளுக்கு ஆறுமுறை
அழகு சேர்த்தது.
சற்றே கம்பீரமாய்
கர்வமாய்ப் பார்த்தது.
கவிஞரின்
திரையிசைப் பாடல்கள்
மனதிற்கு இதம்.
கள்ளிக்காட்டு இதிகாசமும் ,
கருவாச்சி காவியமும் ,
மூன்றாம் உலகப் போரும் என
இவரது எழுத்துகள் பல விதம்.
இந்தக் கவிமேகம்
இலக்கிய வானில்
மெல்ல பயணத்தைத் தொடக்கியது
வைகறை மேகங்களாய் !
அப்போது தெரிந்திருக்காது
இலக்கிய வானிற்கும் ,
இந்தக் கவிமேகத்திற்கும்
தமிழ் நூல் பயிரை
விளைவித்து அறுவடை செய்யப் போகிறது என்று !
கவிராஜன் கதை படைத்த
கவிப்பேரரசர்.
சிற்பியே உன்னைச் செதுக்குகிறேன்
நீ சிலைகளைச் செதுக்கு என்றவர்.
தண்ணீர் தேசம் காண
கடலில் பயணித்து
நம் மனங்களை வென்றவர்.
இந்தக் குளத்தில்
எத்தனை பேர் கல்லெறிந்தாலும் ,
இவரது ஜன்னலுக்கு வெளியேயும் ,
நேற்றுப் போட்ட கோலங்களை யும் நனைக்க
உள்ளம் இணைக்க
பெய்யெனப் பெய்கிறது
இவரது கவிதை மழை
அன்று தொட்டு இன்று வரை.
வடுகபட்டி முதல் வால்கா வரையில்
விதைக்கப் பட்டுள்ளது உங்களால்
வெற்றித் தமிழரின் பெயர்.
தரணியெங்கும் தமிழ் கோலோச்ச
பாடுபடுகிறது உங்கள் உயிர்.
தமிழுக்கு நிறமுண்டு
தமிழர்தம் எழுச்சியினை வளர்க்க
உங்கள் பேச்சிற்கு என்றும் திறமுண்டு.
ஊர்கூடி கொண்டாடுகிறது
இன்னு உங்கள் பிறந்தநாளை.
உற்சாகமாய்த் துள்ளிக் குதிக்கிறத
இவ்வெள்ளிக் கிழமை மாலை.
வந்திருக்கும் அனைவரையும்
இருகரம் கூப்பி
வணங்கி வரவேற்கிறது நம் வெற்றித் தமிழர் பேரவை .
நன்றி வணக்கம்.
மு.மகேந்திர பாபு ,
பேசி - 97861 41410.
0 Comments