செய்தியாளர் பக்கம் அன்பாசிரியர் 11 - மகேந்திர பாபு: பசுமையை போதிக்கும் தமிழாசிரியர்!

 


செய்தியாளர் பக்கம்

அன்பாசிரியர் 11 -

மகேந்திர பாபு:

பசுமையை போதிக்கும் தமிழாசிரியர்!

க.சே. ரமணி பிரபா தேவி
  

சராசரி ஆசிரியர் பாடத்தை நடத்துகிறார். சிறந்த ஆசிரியர் நடைமுறை உதாரணங்களோடு கற்பிக்கிறார். உன்னதமான ஆசிரியர் உயிரோட்டத்தை ஏற்படுத்துகிறார்.

கற்பித்தல் மட்டும்தான் ஆசிரியர் பணியா? பாடம் சொல்லிக்கொடுத்து, மதிப்பெண்கள் வாங்க வைத்தால் போதுமா? 'இல்லை' என்கிறார் ஆசிரியர் மகேந்திர பாபு. கல்வியோடு, இயற்கை சார்ந்த விஷயங்களிலும், இலக்கியத்திலும் மாணவர்களைக் அதிக கவனம் செலுத்த வைக்கிறார்.

ஆரம்ப காலப் பயணம்

தூத்துக்குடி மாவட்டம், பொன்னையாபுரம் என் சொந்த ஊர். அங்கேயே பள்ளிப்படிப்பை முடித்த நான், தமிழாசிரியர் கணேசன் அவர்களால் கவரப்பட்டேன். அவர் பாடத்தைக் கற்பித்த விதம், ஆசிரியராக வேண்டும் என்னும் ஆர்வத்தைக் கொண்டு வந்தது. பன்னிரெண்டாம் வகுப்பில் 'இந்தியனே எழுந்து நில்' என்னும் கவிதைத் தொகுப்பை எழுதினேன்.

ஆசிரியர் பணியில் சேர்ந்த முதல் வருடம் மலைவாழ் பள்ளிகளில் பணியாற்ற வேண்டியிருந்தது. தினமும் சுமார் 12 கி.மீ. நடக்க வேண்டியிருக்கும். செல்லுமிடமெல்லாம் பசுமை பரந்திருந்தது. இயல்பாகவே இயற்கை மீது ஆர்வம் கொண்டிருந்த எனக்கு, அந்தப் பணியிடம் பிடித்திருந்தது.

2002-ல் மதுரையில் இருக்கும் இளமனூருக்கு மாற்றலானது. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் இயங்கும் உயர்நிலைப் பள்ளியில் வேலைக்குச் சேர்ந்தேன். தமிழாசிரியராக என் பணி ஆரம்பித்தது. உரைநடைகளையும், செய்யுள்களையும் எளிதாகப் புரியும் வகையில் நாடகமாகவும், கதை வடிவத்திலும் கற்றுக் கொடுக்க ஆரம்பித்தேன். அதற்கு மாணவர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது. மாணவர்கள் தொடர்ந்து இரண்டு வருடங்கள், ஆண்டுத்தேர்வில் 100 சதவீதத் தேர்ச்சி பெற்றனர்.

விடுதிக்காப்பாளர் பணி

அடுத்த வருடம் ஆதிதிராவிடர் நலத்துறையின் பள்ளி விடுதிக் காப்பாளராக ஆனேன். தலைமைப் பொறுப்பு என்பதால், நினைத்ததைச் செய்ய முடிகிற சுதந்திரம் கிடைத்தது. விடுதியில் பணியை ஆரம்பிக்கும்போதே, மாணவர்கள் அனைவருக்கும் உணவு கிடைப்பதில் தாமதமோ, உணவில்லாமல் போவதோ கூடாது என்று முடிவெடுத்தேன். மாணவர்களைப் பார்க்கவரும் பெற்றோர்களுக்கு, பசியோடு வருபவர்களுக்கு என எல்லோருக்கும் உணவு கிடைக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன்.

கல்விக்குழு, உணவுக்குழு, இறை வழிபாட்டுக்குழு, கலைக்குழு, தோட்டக்குழு என விடுதி மாணவர்கள் பல்வேறு குழுக்களாகப் பிரிக்கப்பட்டார்கள். ஒவ்வொரு குழுவிலும் எட்டு மாணவர்கள் இருப்பார்கள். தோட்டக்குழு மூலம், பள்ளி வளாகத்தில் சுமார் 400 செடிகளை நட்டோம்.

மாணவர்களின் கற்பனைத் திறனை வளர்க்கும் விதமாக 'வளர்பிறை' என்னும் கையெழுத்துப் பத்திரிகை நடத்தப்பட்டது. பழைய மாணவர்களை ஒருங்கிணைத்து, முன்னாள் மாணவர் சங்கத்தைத் தொடங்கினோம். புரவலர்கள் மூலம் சுமார் 1000 புத்தகங்கள் வாங்கப்பட்டு, 'அண்ணல் அம்பேத்கர் நூலகம்' அமைக்கப்பட்டது. சகாயம் ஐ.ஏ.எஸ். மூலம் மதுரையில் இருக்கும் 50 பள்ளி விடுதிகளிலேயே, 'சிறந்த முன்மாதிரி விடுதி' என்னும் விருது வழங்கப்பட்டது.

பசுமைப் பயணம்

2013-ல் திரும்பவும் ஆசிரியப் பணிக்குத் திரும்பி, தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளராக ஆனேன். அப்துல் கலாம் நினைவாக 'மாணவர் பூங்கா', 'கலாம் மூலிகைத் தோட்டம்' ஆகியவற்றை உருவாக்கினோம். வேளாண் அலுவலர் ஆறுமுகம் மரக்கன்றுகளை இலவசமாகக் கொடுத்து உதவினார். 'என் வீடு; என் மரம்' என்று ஒரு திட்டத்தை ஆரம்பித்து, யார் வீட்டில் நன்றாக மரம் வளர்க்கிறார்களோ, அவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.

'ஒரு விழா, ஒரு மரம்' என்ற பெயரில், அரசு விழாக்களில் மரங்களின் அவசியத்தை வலியுறுத்தினோம். மாணவர்கள், தங்கள் பிறந்தநாளுக்கு சாக்லேட் வழங்குவதற்குப் பதிலாக கடலை மிட்டாய் கொடுக்கச் சொன்னோம். பிறந்தநாள் அன்று மரக்கன்றுகளை நடச்சொன்னோம்.

உதவிய கரங்கள்

பள்ளி வளாகத்தை விட்டுக் கொஞ்சம் வெளியேயும் வரலாமே என்று தோன்றியது. 'பசுமைச் சாலை' திட்டத்தின் கீழ், சாலை ஓரங்களில் மரக்கன்றுகளை நட்டோம். இப்போது, சுமார் 2 கி.மீ. நீளத்துக்கு 150 மரக்கன்றுகள் வைக்கப்பட்டிருக்கின்றன. சக்கிமங்கலம் ஊராட்சி ஒன்றியத் தலைவரான ரஹமத் சுபகத்துல்லா, நூறு நாள் வேலைத்திட்டத்தின் கீழ் வேலைக்கு வருபவர்களைப் பயன்படுத்திக் கொள்ள அனுமதி அளித்தார். அவர்கள் மரக்கன்றுகளை நட்டதோடு, வேலியையும் அடைத்துக் கொடுத்துவிட்டனர்.

'விதை கலாம் வா 2020' என்னும் திட்டத்தின் கீழ், சேகர் என்பவர் 100 மரக்கன்றுகளையும், அரிமா சங்கத்தின் சார்பில் கரிகாலன், 50 மரக்கன்றுகளையும் இலவசமாக அளித்தனர். பதினோறாம் வகுப்புப் படிக்கும் சூர்யா, பிரபாகர், மாரி, கதிர்வேலன் ஆகிய நான்கு மாணவர்களும் விடுமுறை நாளில்கூட, மரக்கன்றுகளை நடுவதற்குக் கூட வருகின்றனர்.

எங்களைப் பார்த்து என்.எஸ்.எஸ். படையும், பள்ளியில் ஒரு தோட்டம் அமைத்திருக்கிறது. எட்டாம் வகுப்பு மாணவர்கள், பள்ளியின் சிறிய பகுதியில் தோட்டம் போட்டிருக்கின்றனர். ஆறாம் வகுப்பு மாணவிகள், எங்களுக்கும் இடம் வேண்டும் என்று கேட்டு, தங்கள் வீடுகளில் வளர்க்கும் டேபிள் ரோஸ் உள்ளிட்ட பூச்செடிகளைக் கொண்டுவந்து வளர்க்கிறார்கள். இவை அனைத்துக்கும் எங்கள் தலைமை ஆசிரியர் மோகன் முழு ஒத்துழைப்பு அளிக்கிறார்" என்கிறார் அன்பாசிரியர் மகேந்திர பாபு.

விழிப்புணர்வுப் பாடல்கள்

'மரமும் மனிதமும்' என்ற பெயரில் ஆல்பம் ஒன்றை உருவாக்கியிருக்கிறார் அன்பாசிரியர் மகேந்திர பாபு. இதில் இருக்கும் 12 பாடல்கள், சமூக அவலங்களையும், அவற்றுக்கான தீர்வுகளைப் பற்றியும் பேசுகின்றன. போதை ஒழிப்பு, நதிநீர் இணைப்பு, உடல் உறுப்பு தானம், மனிதநேயம் ஆகியவற்றோடு அம்மாவின் அன்பும், மாமதுரையின் சிறப்பும் பாடப்பட்டிருக்கிறது.

பசுமைத்திட்டத்தை ஊக்குவிக்கும் விதமாக, சகாயம் வழங்கிய சிறந்த அரசுப் பணியாளர் விருது, லட்சிய ஆசிரியர் விருது, கு.ஞானசம்பந்தன் அவர்களால் வழங்கப்பட்ட சிறந்த விடுதிக்காப்பாளர் விருது, மதுரை கிரீன் அமைப்பு வழங்கிய சிறந்த பசுமைப்பள்ளி விருது ஆகியவை அன்பாசிரியர் மகேந்திர பாபுவின் பணிக்கு அங்கீகாரம் அளிக்கின்றன.

மரங்களோடு மனிதநேயமும்

இயற்கையின் மீது அதிக ஈடுபாட்டோடு இருப்பதைத்தான் என்னுடைய பலமாக நினைக்கிறேன். மரம் வளர்க்கும் பழக்கம் மாணவர்களைத் தாண்டி அனைவருக்கும் வர வேண்டும். மரம் வளர்ப்பதோடு, மனிதநேயத்தையும் வளர்த்தெடுக்க வேண்டும். மரங்களோடு சேர்ந்து மனிதமும் பயணிக்க வேண்டும். பார்க்கும் இடமெல்லாம் பச்சையாக மாற வேண்டும் என்பது என்னுடைய ஆசை. என் மாணவர்கள் நிச்சயம் ஒருநாள் அதை நிறைவேற்றுவார்கள்.

க.சே. ரமணி பிரபா தேவி - தொடர்புக்கு: ramaniprabhadevi.s@thehindutamil.co.in

Post a Comment

0 Comments