என் கிராமத்து நினைவுகள்

 


என் கிராமத்து நினைவுகள்
@ காலையிலும் ,மாலையிலும்
கம்மங் கொல்லையில்
குருவிகள் பட படயாய் விழும் .
@ கையிலிருக்கும் பழைய
தகர டின்னை
குச்சி கொண்டு அடித்து ,
பிஞ்சையை ஒரு சுற்றி சுற்றி ,
ஓவென கத்தும்போது
விர்ரென்று மேல்நோக்கி எழும் குருவிகள் .
@ குருவிகள் தின்னது போகத்தான்
நமக்கு என்றாலும் ,
இப்போதே பாதி தின்று விட்டது
கருதினை.
@ காவேலி ஓலையில் தீயிட்டு ,
அவ்வப்போது இளங்கருதுகளை
வாட்டித் திங்கும்போது ,
''அடடா ....என்ன ருசி '' என்று
பல கருதுகள் வாய்க்குள் சென்று விடும் .
@ என் சோட்டுப் பையன்களோடு
டவுசரில் பை திணித்து ,
பள்ளிக்கூட மணியடித்தவுடன் ,
காட்டுக்குச் சென்று ,
இலந்தைப் பழம் கவனமாய்ப் பறித்து ,
இரண்டு சேப்புகளையும் நிறைத்து ,
@ கள்ளிப் பழத்தை முள்குத்தாமல்
பக்குவமாய்த் திருகிப் புடுங்கி ,
நடை பாதையில் போட்டு ,
நன்கு உரசி , முள்ளை உதிர்த்து ,
இரண்டாகப் பிளந்து ,
நட்சத்திர முள்ளை நீக்கி ,
@ வாய்க்குள் போட்டு சப்பியபின் ,
யார்க்கு நாக்கு அதிகம்
சிவந்திருக்கு என
எவ்வளவு வெளியே நீட்ட முடியுமோ ,
அவ்வளவு நீட்டி ...
@ ஆளில்லா மதிய நேரங்களில்
வெள்ளரித் தோட்டம் சென்று ,
பூப் பிஞ்சுகளை எல்லாம்
கிடைக்கும் மட்டும் புடுங்கி ,
துண்டில் பொட்டலமாகக் கட்டி ...
@ நுங்குக் காலத்தில்,
இரவு நேரத்தில்
வெடலைப் பனைகளில் கருக்கு மட்டையில்
கவனமாய் கால்பதித்து ஏறி ,
குலையினை வெட்டி ,
கயிறு கொண்டு கட்டி ,
மெதுவாய் இறக்கி ,
ஓடைக்குள் சென்று ,
செளிக்கமாட்டமல் தின்று ,
பின் பட்டையில் கட்டி .....
@ காவலுக்கு ஒருவனை வைத்துவிட்டு ,
ஊடு சோளம் போட்டிருக்கின்ற
காட்டில் குனிந்து குனிந்து சென்று ,
பாசிப் பித்தான் கைகளையும் ,
தட்டான் காய்களையும் பறித்து ,
அரவமில்லாமல் வந்து ,
பாலத்தின் அடியில் பங்கு போட்டு தின்று .....
@ மழைக் காலங்களில் ,
தானாய் வளர்ந்து கிடக்கும்
கீரைச் செடிகளைப் புடுங்கி ,
சட்டி ஒரு ஆள் ,
எண்ணெய் ஒரு ஆள் ,
வெங்காயம் ஒரு ஆள் ,
கடுகு ,தீப்பெட்டி ஒரு ஆள்
என ஆள் பகுந்து ,
வதக்கி ருசியாய்த் தின்று ....
@ பக்கத்து ஊர்களில்
இரவு நேரங்களில் டிவி போட்டால் ,
நண்பர்களோடு முன் வரிசையில் அமர்ந்து ,
கதாநாயகன் வரும் காட்சிக்கெல்லாம்
பேப்பர்களை சிறு சிறு துண்டுகளாய் கிழித்து ,
டிவி மேல் வீசி மகிழ்ந்து ....
@ விடிந்த பின்னும் அதே இடத்தில்
புரண்டு ,உருண்டு படுத்து,
அழுக்கேறிய சட்டையோடு ,
வீடு வந்து சேர்ந்து ,
அப்பாவிடம் அடி வாங்கி ......
@ அசை போட....அசை போட ....
எவ்வளவு இனிமையான
கிராமத்து நினைவுகள்
இன்னும் என் மனதில் பசுமையாய் .....
மாற்றம் பெறா என் கிராமத்தைப் போலவே ...!
@ மு. மகேந்திர பாபு .

1
விரும்புக
கருத்துத் தெரிவி
பகிர்

Post a Comment

0 Comments