குரங்குகளும் நானும் பாம்பும்

 


குரங்குகளும் , நானும் , பாம்பும்...


ஏற்காட்டிலிருந்து இரண்டு மணி நேரம் கீழ்நோக்கி நடக்க வேண்டும் நான் ஆசிரியப் பணி செய்த  மலைக்கிராமமான குண்டூருக்கு.ஆசிரியப் பணியில் சேர்ந்த ஐந்தாவது மாதத்தில் அது எனக்கு மூன்றாவது பள்ளி.எங்கெல்லாம் சின்ன வாத்தியார் ( உதவி ஆசிரியர் )  இல்லையோ , அங்கெல்லாம் என்னைத் தூக்கிப் போடுவதென்ற உயர்ந்த எண்ணத்திற்கு நானும் உறுதுணையாக  இருந்தேன்.


ஏற்காட்டின் ஏரியிலிருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் சமவெளிப் பகுதி. அதாவது சாலை உள்ள பகுதி.நன்கு நடக்கலாம். அதன்பின்பு காபித் தோட்டம்.சாலை வசதியோ , பேருந்து வசதியோ கிடையாது.முண்டுக் கல் பதிக்கப்பட்டு இருக்கும்.கவனமாக நடக்க வேண்டும்.இல்லையென்றால் கால் , கல்  இடறி விழ.நேரிடும்.


காணும் இடமெங்கும் பசுமை.இரண்டு மணி நேரம் நடப்பதும் மகிழ்ச்சிதான். அவ் வாறு நடக்கும் போது பேச்சுத் துணைக்கு ஆட்கள் யாரும் இருக்க மாட்டார்கள்.சூரிய ஒளி உட்புகாத அடர் மரங்கள் உள்ள வனம். தனிமையில்தான் நடக்க வேண்டும்.நடந்தேன் ... நடந்தேன் ... நடந்து கொண்டேதான் இருந்தேன்.


 கரிசக் காட்டின் வெயிலில் நடந்து பழகி

ய எனக்கு , மலைப்பிரதேசத்தில் நடப்பது புது அனுபவமாக இருந்தது. சற்று ஓய்வெடுத்துவிட்டு மீண்டும் நடந்தேன்.சில இடங்களில் குறுக்குப் பாதைகள் உண்டு.அதில் நடந்தால் தலைகூட வெளியில் தெரியாது.காபிச் செடிகள் மறைத்து விடும்.   


கையில் பிஸ்கட்டும் 

, தண்ணீர் பாட்டிலுமாய் நடந்த எனக்கு திடீரென கேட்ட சத்தம் நிலைகுலையச் செய்தது.ஆம் , ஒரு பத்துக் குரங்குகள் என்னை ரவுண்டப் செய்து விட்டன.வாய்திறந்து பற்களைக் காட்டி அவைகள் இட்ட சத்தத்தில் எனக்குள் இரத்தம் உறைவதைப் போன்ற உணர்வு. குளிரிலும் முகம் வேர்க்கத் தொடங்கியது.நிராயுதபாணியாக நின்றேன். 


தங்களுக்குள் ஏதோ சொல்லிக்கொண்டன குரங்குகள்.முன்னோர்களின் மொழி தெரியாததால் , என் முழி பிதுங்கத் தொடங்கியது.கையிலிருந்த பிஸ்கட்டையும் , தண்ணீர்  பாட்டிலையும் கீழே வைத்துவிட்டு ஒதுங்கிக் கொண்டேன். அவைகள் ஆக்ரோசமாக அவற்றை எடுத்த அதே நேரத்தில் ,  பாதுகாப்பிற்காக நீள கம்பொன்றினை எடுத்துக் கொண்டேன்.சற்றுநேரம் என்னைப் பார்த்துவிட்டு , இனியும் இருந்தால் பாடம் எதுவும் எடுத்து விடுவானோ என்ற அச்சத்தில் குரங்குகள் வேறு மரத்திற்குச் செல்ல ஆரம்பித்தன.


நீண்ட பெருமூச்சினை விட்டுவிட்டு நடந்த எனக்கு அடுத்த அதிர்ச்சி.பாதை முழுவதும் சருகளால் நிறைந்திருப்பதால் ,  ஏதோ கால் வழுக்குவதைப் போன்ற உணர்வு. சுதாரிப்பதற்குள் பெரிய பாம்பு ஒன்று சரசரவென சத்தம் கொடுத்து மிதிபட்டு ஊர்ந்து சென்றது  பாம்பினை மிதித்திருக்கிறேன். .அடக்கடவுளே ! இதென்ன எட்டயபுரத்தானுக்கு வந்த சோதனை என நினைத்து பயந்த படியே பள்ளி வந்து சேர்ந்தேன்.


அந்த வனாந்தரம் விட்டு வந்து ஒரு வனவாச காலம்  ( 14  ஆண்டுகள்  )  ஆகிவிட்டது.இதே போன்று ஒரு நவம்பர் மாதத்தில்தான்  அப்பள்ளிக்கு மாற்றப் பட்டேன்.  ஏதோ நேற்று நடந்ததைப் போல் இருக்கிறது நினைவுகள் நெஞ்சில்.

மீண்டும் நுழைய வேண்டும் அந்த வனாந்தரத்தினுள் பேச்சிலராக ! 


மு.மகேந்திர பாபு.

Post a Comment

0 Comments