கல்வி தந்த காமராசர் - பாடல்

 


கல்வி தந்த காமராசர் -  ( பாடல் )  - மு.மகேந்திர பாபுஊரெல்லாம் பள்ளிக்கூடம் கட்டி வச்சதாரு ?

பார் முழுதும் சொல்லுகிற காமராசர் பாரு.

பள்ளிப் படிப்பை முடிக்காத மேதை தானே !

பட்டறிவால் நாட்டை ஆண்ட மேதை தானே !


எத்தனையோ தலைவர்க்கு பிறந்த நாட்கள் வருகுது

காமராசர் பிறந்த நாளில் பள்ளிக்கூடம் மகிழுது

காலம் கடந்தும் நமக்குள்ளே  வாழுகின்றார்

கல்வியாலே மக்கள் மனதை ஆளுகின்றார்.


ஆகட்டும் பார்க்கலாம் என்பதுதான் அவர் பேச்சு

ஆனமட்டும் எல்லாமும் செய்திட்டதே அவர் மூச்சு

விருதுப் பட்டி தந்திட்ட வீர மகன்தான்

அறியாமை இருள் உடைத்த தீரன் அவன்தான்


மதிய உணவு தந்திட்ட மாண்புடையான்

மாணவர் மனம் நிறையும் அன்புடையான்

அணைகள் கட்டி பாசனத்தை வளர்த்தவன்தான்

அரசியலில் எல்லோருக்கும் குருவானவன்தான்


எத்தனையோ திட்டங்களைக் கொண்டு வந்தான்

ஏழைகளின் பங்காளனாய் இருந்து வந்தான்

கர்மவீரன் போல கக்கன் போல யாருமுண்டோ ?

கறைபடியா கரங்களுக்கு சொந்தக்காரர்கள் அன்றோ ?


ஆண்டுதோறும் ஜூலை 15 திலே ஆடிமகிழ்வோம்

ஆண்டவனாம் காமராசர் புகழ் பாடுவோம்

உலகம் உள்ள நாளெல்லாம் நாங்களும்தான்

உன் பெருமை பாடிப்பாடி உயர்ந்திடுவோமே !


மு.மகேந்திர பாபு.

Post a Comment

0 Comments