சேக்காளிகள் ( நண்பர்கள் ) தினம்
---------------====--------------------
காதறுந்த மஞ்சள் பையில் சிலேட்டையும் , புத்தகத்தையும் தோளில் போட்டு , நண்பன் கைப்பிடித்துச் சென்றதொரு காலம்.
ஒன்னுக்கா மணிக்கு வீட்டிற்கு ஓடிச்சென்று , பருத்தியை டவுசர் பைக்குள் தினித்து , கடையில் டபுள் எடைக்குப் போட்டு அவித்த பலாக் கொட்டை வாங்கிச் சேக்காளிகளோடு தின்று மகிழ்ந்ததொரு காலம்.
சவ்வு மிட்டாயை நூலாக்கி , அதிக நீளமாக்கி , பின் அதை உருட்டி கைக்கடிகாரமாக்கி , நண்பனோடு பாதிபாதியாய்த் தின்றதொரு காலம்.
சாப்பாட்டு மணி நேரத்தில் வாத்தியார் சாப்பிட்டுக் குட்டித் தூக்கம் போட, பக்கத்திலுள்ள பிஞ்சையில் பாசிப்பித்தான் காய் பிடுங்கி அகப்பட்டு , வாத்தியார் முன் பாவமாய் நின்றதொரு காலம்.
லீவு நாட்களில் நண்பர்களோடு தேன்தட்டு எடுக்க , வேலிப்புதருக்குள் செல்ல , கண்ணாம் பட்டையில் தேனீ கொட்ட , கண்ணே தெரியாமல் வீங்கிக் கிடந்ததொரு காலம்.
கள்ளிப் பழம் பிடுங்கி , தரையில் போட்டு தேய்த்து , நட்சத்திர முள்ளை எடுத்துவிட்டு , நாக்கைக் காளியாத்தா போல் நீட்டி , யாருக்கு அதிகம் சிவந்திருக்கு எனப் போட்டி போட்ட காலம்.
நண்பர்களோடு வாடகைச் சைக்கிள் எடுத்து, குரங்குப் பெடல் போட்டு வெயில் , மழை பாராதுஓட்டிய காலம்.
கண்மாயில் நண்பர்களோடு முங்கு நீச்சல் , நிலா நீச்சல் , எம்.ஜி.ஆர் நீச்சல் , சாதா நீச்சல் என சந்தோசமாய் அடித்து மகிழ்ந்த காலம்.
பள்ளி விட்டுப் பிரிகையில் , நண்பர்களின் ஏதோவொரு நோட்டில் கவிதையெழுதி கையெழுத்திட்டு , முகவரி எழுதி ,ஊரிலிருந்த ஒரே ஒரு போன் நம்பரையும் கொடுத்து போன் பண்ணுடா எனச்சொல்லி கண்ணீரோடு விடை பெற்றதொரு காலம்.
ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் அரட்டை அடித்து , வாழ்வின் நெளிவு சுழிவுகளை அறிந்து தன்னைத் தயார் படுத்திக் கொண்ட காலம்.
நட்புக் காலத்தைத் திரும்பிப் பார்க்கையில் அதன் முடிவெல்லை கண்ணுக்குத் தெரியவில்லை.நீண்டு கொண்டே செல்கிறது.
நட்பை ஒரு தினத்திற்குள் அடக்க முடியாது.தினம் தினம் நண்பர்கள் தினம்தானே ?!
மு.மகேந்திர பாபு.
0 Comments