கீர

 


கீர


கூதக் காய்வது போல ரவுண்டாக உக்காந்து கொண்டாக அஞ்சுபேரும்.

எலே ! சொன்ன மாதிரி ஆளுக்கொரு சாமானாக் கொண்டாந்தாச்சாடா ? 


ம்ம் ... கொண்டாந்தாச்சு எனச் சொல்லியபடியே சொக்கடா தன் டவுசர் பைக்குள் இருந்து கோட்டர் பாட்டிலை  எடுத்தான்.


கொண்டாடா ... எனச் சொல்லி , மிக்கேல் மூடியத் திறந்து மோந்து பாத்தான்.

அட ஆக்கங்கெட்ட மூதி... என்ன கொண்டு வந்திருக்கான் பார்ரா ... எலே கலரப் பாத்தாலே தெரியலயாடா ?  என்றான் மிக்கேல்.  

அட ... ஆமாடா , அவசரத்தில எங்கம்மாவுக்குத் தெரியாம எடுத்ததில பாட்டல மாத்தி எடுத்திட்டன்டா ...


சரி சரி  ... பரவால்ல , நானும் கொண்டாந்திருக்கேன் எனச்சொல்லி , தன் டவுசர் பைக்குள்ளிருந்து மிக்கேலும் ஒரு கோட்டர் பாட்டிலை எடுத்து வெளிய வச்சான். ஒவ்வொருத்தரும் ஏற்கனவே சொன்னமாரி ஆளுக்கொரு பொருளாய் எடுத்து வச்சனர்.


டொணக்கு தன் டவுசரிலிருந்து கைய விட்டு எடுக்கும் போது , சேவும் மிச்சரும் வெங்காயத்தோடு சேந்து வந்தது.


கடுகயும் , சீரகத்தையும் கருப்சாமி எடுத்து வச்சான்.ஓயண்டா வடசட்டியும் , கரண்டியும் வச்சான். ஆடு மேய்க்க கொண்டுப் போகும் ரெண்டு லிட்ரு வாட்டர் கேனில் தண்ணியும் , தாளில் மடித்திருந்த கல் உப்பையும் வச்சான் தவக்கள.


எல்லாம் இருக்குபா.வேலய ஆரம்பிப்போம் எனச்சொல்லி  மூனுகல் வச்சி அடுப்பு தயார் செஞ்சனர். சில்லாடை , ஓல , பூமுள்ளப பிரக்கினாங்க. தீப்பெட்டி எடுத்து பத்த வைத்தான் ஓயண்டா. 


சருவத்தாளிலிருந்த கீரைய வட சட்டியில் போட்டு , தண்ணி ஊத்தி கழுவினான் தவக்கள. ஏற்கனவே கம்மாயில வச்சு நல்லா கழுவியாச்சு. திரும்ப சருவத்தாளில் போட்டுவிட்டு சட்டிய அடுப்பில் வைத்தான்.


மிக்கேல் கொண்டுவந்த கோட்டர் பாட்டிலில் இருந்து கடல எண்ணெய ஊத்தினான்.கடுகு வெடித்த பின் வெங்காயத்தப் போட வேண்டும்.கருப்சாமி கம்பரக் கத்தியால் வெங்காயத்த நறுக்கி தயாராய் வைத்தான். வட சட்டிக்குள் வேகத் தொடங்கியது வெங்காயம். பட்ட வத்தலும் தன்பங்குக்கு உள்ளே சென்று வெங்காயத்தோடு படுத்துக் கொள்ள  மெல்ல கரண்டியால் கிண்டினான் மிக்கேல். 


எலே டொணக்கு ... அடுப்பு ஆடுதுடா ,துண்ட வச்சு லேசா பிடிச்சுக்கோ கிண்றவரைக்கும் என்றான்.பாதி வேக்காட்டுக்குப் பின் கீரயப் போட சுரீர் என்ற சந்தோச கூச்சல்  போட்டது சட்டி.


லீவுனால்லே சந்தோசம்தான்.கள எடுக்க போயிட்டு , வரும்போது கீரயப் புடுங்கி , கம்மாயில குளியலப் போட்டு இதோ யாருக்கும் தெரியாம தாவுப் பிஞ்சயின் அடர்ந்த வேலிக்குள் உக்காந்து ஆறாப்பு படிக்கும் அஞ்சு பேரும் பிஞ்சுப் பாண்டவர்களாய் கீரய வதக்கிக் கொண்டிருக்கின்றனர்.


எலே , வெந்துரிச்சானு பார்ரா என்றான் மிக்கேல் உப்புக் கல்ல பரக்க தூவிக்கொண்டு.


நான் பாக்கறேன் என்றா சொக்கடா . .நீ ஒன்னும் பாக்க வேணாம். ஓயண்டா நீ தின்றா.


லே , அவனே தின்னு சொல்லட்டும்டா ...


அவன் உப்பு பாக்கறன் , உப்பு பாக்கறேனே பாதிய தின்றுவான்டா.கடல எண்ணய எடுத்துட்டு வாடான்னா ,  தேங்கா எண்ணய கொண்டாந்துருக்கான்.


சரி சரி . வுடு. நல்லா வெந்திரிச்சுடா. துண்டால இறக்கி சுட சுட வாயில் போட்டான் கருப்சாமி.


அட பப்பெடுத்தவனே ! ஒரு நிமிசம் பொறுடா என்றான் மிக்கேல். சில நிமிசத்தில வட சட்டி கழுவியது போல ஆகிப்போச்சு.சரி சரி நடயக் கட்டுங்கடா வீட்டுக்கு.அடுத்தவாரம் திண்போம்.


( நகரத்தில் இருக்கும் ஒவ்வொரு கிராமத்தானுக்குள்ளும் ஒளிந்து கெடக்கிறது பால்யத்தில் செய்த சேக்காளிகளுடனான  மொத கீர சமயல்  )


மு.மகேந்திர பாபு.

Post a Comment

0 Comments