அப்பா

 


அப்பாஅப்பாதான் என் ரோல்மாடல். கதாநாயகன் அன்றும் இன்றும் என்றும்.


என்னப்பா சொம்போட வந்து நிக்கிற.யார் மகன்டா நீ ?  


மாமா,  செல்லையா மகன் நான்.பால் வேணும் மாமா. தங்கச்சிக்கு முடியல.இந்தாங்க ரெண்டு ரூபா.


சொம்ப இப்டி கொண்டா. 


கறந்த பால் வூட்டுக்குள்ள கூட போகல.சொட்டுத் தண்ணி சேக்கல.நுரை தள்ளி நிறைஞ்சிருக்குது பால் சட்டி. அப்டியே நுரைய ஊதி பாலை சொம்பில் ஊத்தினார்.


ரெண்டு ரூபாய்க்கு மட்டும் கொடுங்க மாமா.


காசு வேணாம் . கொண்டுட்டு போ.வேணும்னாலும் வந்து பால் வாங்கிக்கோ.


இப்படித்தான் யார் வந்து பால் கேட்டாலும் காசு வாங்காமலே கொடுப்பார்.


விசகடினு யார் வந்தாலும் அதைக்குணமாக்கும் வைத்தியமும் அப்பாவுக்குத் தெரியும். வயல் வெளிக்குப் போவார். ரெண்டு மூனு இலைகளைப் பறிப்பார். யாரிடமும் பேசமாட்டார். உள்ளங்கையில் வச்சு கசக்கி சாறு எடுத்து மருந்து கட்டி அனுப்புவார்.


நல்ல நாள் , விசேச நாள் என்றால் வூட்ல பலகாரம் செய்வது அப்பாதான். முறுக்கு , முட்டகோஸ் , சீடை , சப்பாத்தி , சேவு என எல்லாம் அப்பாவுக்கு கை வந்த கலை.


அப்பா நடைக்கு யாரும் ஈடுகொடுத்து நடக்கமுடியாது. அவ்ளோ வேகமாக நடப்பார். எந்த பிடிமானமும் இல்லாமல் தலைகீழாக நிப்பார். இன்றும் சோடா பாட்டில் மூடியை பல்லால் கடிச்சு திறப்பார். 


நல்ல ஓவியர் , நல்ல பேச்சாளர் , அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்டப்பொறுப்பாளர் என பன்முகத்தன்மை கொண்டவர்.


அப்பா படிச்ச பள்ளிக்கூடத்திலதான் நானும் படிச்சேன். சமீபத்தில நடந்த ஒரு விழாவில நான் பேசி முடிச்சதும் , எங்கப்பா கூட படிச்ச மாணவர் என்னை மேடைக்கு கூப்டு ,


இவுக அப்பா கூட நான் பத்தாவது வரைக்கும் படிச்சேன். அவரச் சுத்தி ஒரு கூட்டம் எப்போதும் இருக்கும். புராணக்கதைகள அவர் மாதிரி யாராலும் சொல்ல முடியாதுன்னு சொல்லி , பொன்னாடை போட்டு என்னயக் கௌரவப் படுத்தினாரு.


பள்ளிச் செக்ரட்டரி கூட நான் பேசும்போது . மதுரயிலிருந்து மகேந்திர பாபு பேசுறேன்.பள்ளியின் முன்னாள் மாணவர் , வாத்தியார் என நான் என்னை அறிமுகம் செய்தபோது , 


ஏய் ... நீ பொன்னையாபுரம் முருகன் அண்ணன் மகன்தானப்பா ... அப்பா நல்லாருக்காரா ? நான் கேட்டதா சொல் என்றவுடன் ரொம்ப சந்தோசமாப் போச்சு.


அப்பா , மதுரக்கி வாங்க. எங்கூட வந்து இருங்க நீங்களும் அம்மாவும்னு நான் சொல்றப்பலாம் ,  நான் நல்லாதானடா இருக்கேன். எனக்கு என்ன வயசாயிருச்சு ? 67 தான்டா ஆகுது ? உழைச்சு சாப்பிட தெம்பாதான் இருக்கேன் என படக்கென்று சொல்லிவிடுவார்.


சரிப்பா ... இந்த ஆடு , மாடு , கோழி இதெல்லாம் விட்ருங்க. இன்னும் ஏன் கட்டிக்கிட்டு கெடக்கிங்க ?


இதுவும் எங்க பிள்ளைகதான்டா. இதுக இல்லயின்னா வெறிச்சுன்னு இருக்கும்டா என்பார்.


எங்க வீட்டுக்கு யார் வந்தாலும் தண்ணி கலக்காத கட்டிப்பால் கிடைக்கும். அம்மா டீ போடமாட்டார். பால்தான்.


நல்ல பால் குடிக்கனும்னா முருகன் வீட்டுக்குப் போகலாம்னு சொல்வாங்க. வீட்டுக்கு யார் வந்தாலும் சாப்பாடு போட்டுதான் அனுப்புவார் அப்பா.


மதுரக்கு வரும்போது , நிறைய புத்தகம் படிக்கனும்டா ம்பார். குண்டலகேசி பத்தி உனக்குத் தெரியுமாடா ? ம்பார். கொஞ்சம் கொஞ்சம் என்பேன். நிறைய வாசி என்பார்.ம்ம் என்பேன்.


இன்றும் வீட்டில் ஏதாவது ஒரு புத்தகத்தை வாசித்துக் கொண்டிருப்பார். 


டேய் வாடா ? உன் கையக்காமிடா என கைரேகை சோசியம் பாப்பார். எல்லாருக்கும் பாக்கமாட்டார். எப்பவாவது சொல்வார். அவர் சொன்னால் அது நடக்கும்.


சுத்து வட்டாரத்தில் இன்றும் நான் என்னைச் சொன்னாலும் , பொன்னையாபுரமா ? முருகனைத் தெரியுமா ? அவர் பையன்தாங்க நான். 


ஓ... வாத்தியாரா ?  ஆமாங்க.


இன்னிக்கும் எனது அடையாளம் அப்பாதான். அந்த பழைய கம்பீரம் , நடை , பேச்சு சற்றும் குறைவில்லாத அப்பாதான் என் கடவுள் .


மு.மகேந்திர பாபு.

18 - 06 - 17.

Post a Comment

0 Comments