துட்டு மிட்டாய்

 


துட்டு மிட்டாய்


எல்லா மிட்டாயும் துட்டுக் கொடுத்துதானே வாங்க முடியும் ?  அதென்ன துட்டு மிட்டாய் ?


ஆறாப்பு , ஏழாப்பு படிக்கும் போது சனி , ஞாயிறு லீவு நாட்களில் சேக்காளிகளோடு வடகாடு அல்லது தெக்காட்டிற்கு கள எடுக்கப் போவோம். அப்ப சம்பளம் பதினஞ்சு ரூவா. பசங்களோட போறதால மலப்பு தெரியாது. ஒம்போது மணிக்கு நெற பிடிச்சு ஆரம்பிச்சா ரெண்டு மணிக்கு வேல முடிஞ்சிரும்.


கைக்கள தான். கோர , சாரனத்தி , கீர , அருகுனு கள மண்டிக் கெடக்கும் காடு.இடயில கடுங்காப்பியும் , சேவும் திங்கக் கிடைக்கும்.கொஞ்சம் தைப்பாறி திரும்பவும் கள புடுங்கனும்.


சும்மா மொறிச்சுப் போடாம வேரோடு களகளப் புடுங்குறதால பசங்க மேல எந்தக் கம்ப்ளெயின்டும் வராது.வேல முடிக்க கையில காசு உடனே வந்துரும்.


பதினஞ்சு ரூவால , பத்து ரூவா வீட்டுக்கு.அஞ்சு ரூவா வாங்கித் திங்க.ஒரு வாரத்துக்கு வீட்லெ காசு கேட்கத் தேவயில்லை.


கள எடுத்திட்டு கம்மாயில நல்லா  முங்கிக் குளிச்சிட்டு கடக்கி வந்து துட்டு மிட்டாய் வாங்குவோம்.ஒரு மிட்டாய் கால்ரூவா. துட்டு இருக்கிற மிட்டாய் கொஞ்சம் வெயிட்டா , விளிம்பு அகலிச்சு இருக்கும்.இருபது காசுனா பப்பரப்பானு வெளியில தெரியும்.மிட்டாய் கருஞ்சிவப்பா ரவுண்டா சருவத்தாளு சுத்தி இருக்கும்.

வாயில போட்டு ஒதுக்கித் திங்கறதுல அவ்ளோ சொகம்.துட்டும் மிட்டாயுக்கிள்ள  இருந்தா ரொம்ப சந்தோசம்தான்.


கண்ண மூடித்தறக்கிற மாதிரிதான் இருக்கு.பல வருசம் ஓடிப்போச்சு.என்னதான் ஏடியெம் கார்டச் சொருகிப் பணம் இன்னக்கி எடுத்தாலும் , களிமண் கையோட கள எடுத்த கையில வாங்கின அந்தப் பதினஞ்சு ரூவா பால்யச் சம்பளத்துக்கு ஈடாகுமா ?! 


மு.மகேந்திர பாபு.

Post a Comment

0 Comments