கிணறு கிடங்கானது

 


ஒரு கிணறு கிடங்கானது...



இன்னிக்கு டூ இன் ஒன் , த்ரி இன் ஒன் , பைவ் இன் ஒன்னுன்னு எத்தனையோ வந்திரிச்சி. பால்யத்தில பள்ளிக்கொடம் போகும்போது எங்களோடு டூ இன் ஒன் வேப்பங்குச்சிதான். இப்ப உள்ள டூத்பேஸ்ட்ல பத்து சிகரெட்ல இருக்கிற நிக்கோடின் ஒரு பேஸ்ட்ல இருக்குனு சொல்றாக. 


மழ காலங்கள்ல கம்மாயிலயும் , கோடயில பம்பு செட்லயும் போயி குளிச்சிட்டுப் பள்ளிக்கூடம் போவோம். அப்ப வேப்பங்குச்சியும் , கருவேலக் குச்சியும் , ஆதாளச் செடியும்்தான் எங்களோட டூத்பேஸ்ட். சிலருக்கு செங்கப்பொடியும் , சிலருக்கு குறுமணலும் என பல்பொடியாக் கிடைக்கும். மார்ச் , ஏப்ரல்ல கம்மாயில தண்ணி வத்திப்போக வயல்ல உள்ள கிணற்றுப் பம்புசெட்லதான் குளியல்.


எங்கூர்லெ மொத்தம் நாலஞ்சு கிணறு.எப்படியும் ஏதாச்சும் ஒன்னுல மோட்ரு ஓடிக்கிட்டு இருக்கும்.கோட விவசாயமா வெண்டி, பருத்தி , கத்தரினு ஏதாச்சும் போடுவாக.


சீனிப் பெரியா கிணத்துல நல்ல ஊத்து இருக்கும். தொடந்து அஞ்சாறு மணிநேரம் மோட்ரு ஓடும். காலயில போட்டா மதியம்தான் நிப்பாட்டுவாரு. குளிக்க , துவைக்கனு எந்தப் பிரச்சனையுமில்ல. வெத்து மோட்ரா ஓடினதும் இல்ல.


கோடையில வயித்துப் பசிய போக்குனு கிணறு இப்ப இருக்கிற நெலமயப் பாக்கணுமே ! ரெம்ப நா கழிச்சு ஊருக்குப் போயி வயல் பக்கம் போன போது , நீர்முள் செடி முள்ளு நெஞ்சுல குத்துன மாதிரி இருந்துச்சு. ஆமா நூறடிக்கு மேல இருந்த கிணறு மண்மூடி இப்ப ஏழெட்டு அடிதான் இருக்குது. அதில தேங்குன தண்ணிய மருந்தடிக்க எடுத்திட்டுப் போறாக. மனுசப்பயதான் வயசாகி மண்ணுக்குள்ளாற போறான்னா , சம்சாரிய சந்தோசப்படுத்தின கிணறுமில்ல மண்ணுக்குள்ள போயிருச்சு. அட பாதகத்தி மக்கா என்னேனு சொல்ல.  எத்தனையோ பேர குளிப்பாட்ன கிணறு இப்டி குத்துயிரும் , கொலையுருமா கெடக்கே ? இனி வயலோட வயிறு விவசாயத்தால எப்டி நெறயும் ?!


மு.மகேந்திர பாபு.

Post a Comment

0 Comments