மு.மகேந்திர பாபு - சிறு கவிதைகள் / mahendra babu short poems - greentamil.in

 


காலைச் சூரியன்
@ காக்கைகளும் ,நாரைகளும்
தொடர்ந்து கத்திக்கொண்டே
பறக்கின்றன ...
வேறு வழியில்லாமல்
தூக்கத்தைவிட்டு
கண்சிவக்க எழுகிறது
கீழ்த் திசையில் காலைச் சூரியன் .

*********************** ************

மேலே எறிந்த பந்து
கீழே விழுவது
புவி ஈர்ப்பு விசை .
உன்மேல் விழுந்த
எனது பார்வை
திரும்பப் பெறாமலே இருப்பது
உன் விழி ஈர்ப்பு வசை .
மு.மகேந்திர பாபு .

******************* ********************


அவ்வப்போது மாறுகிறேன் நான் .
ஆடு ,மாடாகவும் ,
பூனை ,யானையாகவும் ,
எலி ,புலியாகவும் ,
நாய் ,பேயாகவும் ......
அழும் குழந்தையை
அமைதிப் படுத்தவும் ,
சிரிக்க வைக்கவும் .
மு.மகேந்திர பாபு.

******************** *************************

அடிக்கடி காற்றடைத்து,
சிறு குழந்தைகளைப் பார்க்கும்போது
மகிழ்வாய் அழைத்து ,
வேடிக்கை காட்டி ....
பெற்றோரிடம் அழுது ,
அடம் பிடித்து கையில் வாங்குகையில்
குழந்தையின் முகம் போல்
மகிழ்ச்சியில் மலர்கிறது
பலூன் காரனின் முகம் .
மு.மகேந்திர பாபு


********************* *******************

அனைவரும் கடக்கும் சாலையொன்றில்
ஏதோ ஒரு வாகனத்தில் அடிபட்டு ,
செத்து அழுகிக் கிடக்கிறது எலியொன்று .
கடக்கும் போதெல்லாம்
நாசி பொத்தி நகர்கிறது கூட்டம் .
அப்புறப் படுத்தியது
எங்கிருந்தோ பறந்து வந்த
காகம் ஓன்று .
மு.மகேந்திர பாபு

************************ ****************

நீண்ட .....நேர ,
நீண்ட ....தூர
நடை பயணத் தனிமையில் ,
வெம்மையில்
நடந்தவனைப் பார்த்து
தன்னுள் அனுதாபம் கொண்டது
மரங்களற்ற புழுதிக் காட்டில்
வெட்டப் பட்டுக் கிடந்த மரமொன்று.
மு.மகேந்திர பாபு ******************** **************************

அவ்வப்போது மாறுகிறேன் நான் . ஆடு ,மாடாகவும் , பூனை ,யானையாகவும் , எலி ,புலியாகவும் , நாய் ,பேயாகவும் ...... அழும் குழந்தையை அமைதிப் படுத்தவும் , சிரிக்க வைக்கவும் . மு.மகேந்திர பாபு.

****************** **************************


யாரோ ஒருவரின் 
கை தவறி விழுந்த 
ஒன்றிரண்டு சோளப் பொரிகளும்,
கடலைப் பருப்புகளும் ,
சோற்றுப் பருக்கைகளும் 
சில  நாள் பசியைப் போக்கி விடுகின்றன 
பூங்காவில் உள்ள 
ஒன்றிரண்டு எறும்புகளுக்கு!

   மு மகேந்திர பாபு 

****************** **************************


சில மாதங்களாய் வாழ்வு தந்த கூட்டிற்கும் , சோளக் காட்டிற்கும் நன்றி சொல்லி ...., சிறகு முளைத்த தன் குஞ்சுகளோடு , அறுவடைக்கு முதல் நாள் பறந்து செல்கிறது குருவியொன்று ... தன் இறகினை நினைகூட்டில் உதிர்த்துவிட்டு ...! மு.மகேந்திர பாபு .

****************** **************************


ஆனந்தப் படுவதும் , அனுதாபத்திற்குள்ளாவதும் என அன்றாடம் நடந்து கொண்டுதானிருக்கிறது இல்லற வாழ்வின் தொடக்கத்தில் பிள்ளைகளைக் கொஞ்சும் போதும் , அதே பிள்ளைகளால் முதுமையில் உதாசினப் படுத்தப்படும்போதும், எல்லா அப்பாக்களுக்கும் ,அம்மாக்களுக்கும் மு.மகேந்திர பாபு .

****************** **************************


ஆலயத்தின் வாசலில் யாசகம் கேட்பவனை அலட்சியம் செய்துவிட்டு
உள்ளே சென்று , உண்டியலில் போடுகிறான் பணத்தை ! தான் செய்த தவறுக்கு பிரயச் சித்தமாய் யாசகம் கேட்கா இறைவனிடம் ! மு.மகேந்திர பாபு .

****************** **************************

மின்தடை நேரத்தில் மின்கம்பத்தில் அமர்ந்து , நெடு நேரம் விவாதித்துக் கொண்டிருக்கின்றன மனித மனங்களைப் பற்றி காக்கைகள் . கார சார விவாதத்தில்
கால் இடறி இறக்கை மின்கம்பத்தில் படும் நேரம் மின்சாரம் வந்துவிட , சட்டென சுதாரித்து , அருகில் இருந்த மரக்கிளையில் அமர்ந்து மலங்க மலங்க விழித்த படியே ..... மனித மனம் விளங்க வில்லை பார்த்தாயா ?
ஒரு நாளைக்கு இரண்டு மூன்று மணிநேரமாவது மின்சாரம் வந்து விடுகிறதே என்று ! மு.மகேந்திர பாபு .

****************** **************************


அழகாய் அடுக்கி வைக்கப்பட்ட பொருட்களையும் , பொம்மைகளையும் , சமையலறைப் பாத்திரங்களையும், ஆங்காங்கே சிதறிப் போட்டுவிட்டு , நடுவில் அமர்ந்து அழகாய்ச் சிரிக்கிறது பச்சிளம் குழந்தை.

****************** **************************


தண்ணீர் வற்றி , கண்மாய் அழிந்து , ஊரெல்லாம் மகிழ்ச்சியோடு மீன் பிடித்துக் கொண்டிருக்கையில் , கரையில் கவலையோடு நின்று கொண்டிருக்கிறது ஒற்றைக் காலில் கொக்கு . மு.மகேந்திர பாபு.

****************** **************************


வீட்டாரிடம் அவ்வப்போது வரும் கோபத்தினால் , அடி வாங்குகின்றன கதவுகளும் , ஜன்னல்களும் , பாத்திரங்களும் . மு.மகேந்திர பாபு.

****************** **************************


நெடு நேரம் பறந்து செல்லும் நீர்ப் பறவையொன்று நீர்நிலை தேடி அலைகையில் , நிரம்பி இருக்கிறது கூச்சலும் ,மகிழ்ச்சியுமாய் விளையாடும் சிறுவர்களால் வறண்ட நீர்நிலை . மு.மகேந்திர பாபு .

****************** **************************


மேய்ச்சல் முடிந்து , கட்டுத் தரையில் படுத்து , அசை போட்டுக் கொண்டிருக்கிறது ..... பால்ய காலங்களில் பசும் வயல் வெளிகளில் நெல்லையும் , புல்லையும் மேய்ந்த நிலத்தில் , இன்று கற்களும் ,கம்பிகளும் பிணைக்கப் பட்டிருக்க , தன் சந்ததிக்கு என்னவாகுமோ எதிர் காலம் என்ற கவலையில் முது மாடு ஒன்று. # மு.மகேந்திர பாபு .

****************** **************************

விண் வெளிக்குச் சென்று வந்ததைப் போன்றோ ... விளையாட்டில் வீரச் சாதனை நிகழ்த்தியதைப் போன்றோ ... விடுதலைப் போரில் குதித்ததைப் போன்றோ ... மகிழ்ச்சியோடு கையசைத்து , ஊட கங்களில் முகமலர்ந்து செல்கிறது ஊழல் வாதியொன்று சிறைக்கு .! மு.மகேந்திர பாபு .
****************** **************************


இரவின் நிசப்தம் உடைத்து , திடீரென எல்லோரையும் திடுக்கிட்டு எழச் செய்கிறது தொட்டிலில் அழும் பச்சிளம் குழந்தை . பசியமர்த்தி தூங்கச் செய்த பின்னரும் , தூங்காமலே இருக்கின்றன தாயின் கண்கள் தொட்டிலை பார்த்த படியே ! மு.மகேந்திர பாபு .

************** **************** ***********

கோடையின் வெம்மை தணிக்க குடும்பத்துடன் குழுமுகிறது மக்கள் கூட்டம் மாநகராட்சி நீச்சல் குளத்தில் . குளி(தி )ப்பவரின் வெம்மை தாங்காமல் மேலெழும் நீர் துடித் தடங்குகிறது மீண்டும் குளத்தில். மு.மகேந்திர பாபு.

***************** ***************** *********

படிப்பிலும் , வாழ்விலும் முந்திச் செல்லும் நோக்கம் மறந்து , வாகனப் பயணத்தில் முந்திச் செல்ல .... முந்திக் கொண்டு மேலே சென்றன மீதமுள்ள வாழ் நாட்கள் பூமி விட்டு. மு.மகேந்திர பாபு.

***************** **************** *******

நெடு நேரம் பறந்து செல்லும் நீர்ப் பறவையொன்று நீர்நிலை தேடி அலைகையில் , நிரம்பி இருக்கிறது கூச்சலும் ,மகிழ்ச்சியுமாய் விளையாடும் சிறுவர்களால் வறண்ட நீர்நிலை . மு.மகேந்திர பாபு .


மேய்ச்சல் முடிந்து , கட்டுத் தரையில் படுத்து , அசை போட்டுக் கொண்டிருக்கிறது ..... பால்ய காலங்களில் பசும் வயல் வெளிகளில் நெல்லையும் , புல்லையும் மேய்ந்த நிலத்தில் , இன்று கற்களும் ,கம்பிகளும் பிணைக்கப் பட்டிருக்க , தன் சந்ததிக்கு என்னவாகுமோ எதிர் காலம் என்ற கவலையில் முது மாடு ஒன்று. # மு.மகேந்திர பாபு .


விண் வெளிக்குச் சென்று வந்ததைப் போன்றோ ... விளையாட்டில் வீரச் சாதனை நிகழ்த்தியதைப் போன்றோ ... விடுதலைப் போரில் குதித்ததைப் போன்றோ ... மகிழ்ச்சியோடு கையசைத்து , ஊட கங்களில் முகமலர்ந்து செல்கிறது ஊழல் வாதியொன்று சிறைக்கு .! மு.மகேந்திர பாபு .


************** ***************

வெயில் மறந்து , வியர்வைத் துளி சிந்தி விளையாடும் சிறுவர்களிடம் தோற்று , மறைந்து போனது சூரியன் மாலைப் பொழுதில் . மு.மகேந்திர பாபு.

************** ***************

கவிதைக்கான வார்த்தைக்காய் காத்திருக்கையில், பிஞ்சு மொழி பேசி என்னைக் கடந்து சென்றது மழலை ஓன்று கவிதை உருவில் . மு.மகேந்திர பாபு.

************ ************66*6

செய்தி பார்க்கும் போது சினிமாவுக்கு மாற்றுவதும் , விளையாட்டு பார்க்கும் போது விவாதத்திற்கு மாற்றுவதும் , பாடல் பார்க்கும் போது சமையலுக்கு மாற்றுவதும் என கணவன் மனைவிக்கான தொலைக்காட்சிப் போராட்டத்தை எப்படி நிறுத்த என மகள் நினைத்துக் கொண்டிருக்கையில் .... நிறுத்தி விட்டுப் போனது மின்சாரம். மு.மகேந்திர பாபு.

****


************ ********************

@ பட்டுப் போன மரம் துளிர்க்கத் தொடங்கியது பூங்காவில் காதலர்கள் வருகையினால் . @ கொஞ்சல்களும் , கெஞ்சல்களும் , சீண்டல்களும் , சிணுங்கல்களும் சிரிப்புகளும் கண்டு வெட்கிச் சிவந்தன பூக்கள் காதலர் பூங்காவில் ! # மு.மகேந்திர பாபு .

*************************




வன்மம் தலை தூக்கி , சாதியப் பூசல்களோடு வலம் வரும் சுவரொட்டிகளைக் கண்டு முகம் சுழிக்கின்றன நகராட்சியின் சுவர்கள் . மு.மகேந்திர பாபு.


****************** *************

எதிர் காலத்தை நிர்ணயிக்கும் இரண்டரை மணி நேர தேர்வில் தெரிந்த தெல்லாம் எழுதி , தெரியாத வற்றையும் தெரிந்ததைப் போல் எழுதி , பக்கம் பல நிரப்பி , கடைசித் தேர்வு எழுதி முடித்து , தேர்வறை விட்டு வெளியே வருகையில் மகிழ்ச்சித் துள்ளலில் ஓடி மறைகிறது ஓராண்டின் வகுப்பறைச் சூழலும் , பாடச் சுமையும். மு.மகேந்திர பாபு.

******************************


ந(எ)டை பயணம் துணி துவைக்கவும் , வீடு சுத்தம் செய்யவும் , சமைக்கவும் ....என இன்ன பிற வேலைகள் செய்யவும் ஆட்கள் வைத்து விட்டு , காலையிலும் , மாலையிலும் சுற்றமும் , நட்பும் ,நாயும் சூழ , கைகள் வீசியபடி போர் வீரனைப் போல் , வியர்த்து ,விறுவிறுக்க எடை குறைக்க நடந்து கொண்டிருக்கிறது நாளும் ஓர் கூட்டம் ** நகர்ப் புறங்களில் நகைப்பிற்குரியதாய் ! மு.மகேந்திர பாபு.

**************** ****


பூங்கா பெரியவர்கள் குழந்தை களாகின்றனர் குழந்தைகள் பெரியவர்களாகின்றனர்... ஊஞ்சலிலும் , சறுக்கு மரத்திலும் உல்லாசம் பீறிட்டு எழ, அனைத்தையும் பார்த்து மகிழ்ந்தாலும் மனசெங்கும் வெறுமையே நிறைந்திருக்கிறது நீயில்லா தனிமையில் ! மு.மகேந்திர பாபு

************* *************

அடுப்பு பற்ற வைக்காமல் நீர் ஊற்றாமல் , அரிசி போடாமல் , ஒரு நிமிடத்தில் சோறாக்கி விடுகிறாள் மகள் ஏதேனும் ஒரு பாத்திரத்தை வைத்துக் கொண்டு ...! மு .மகேந்திர பாபு ( 20 -09 -13 )

*************** ********************


தலைவர்களின் நினைவு நாள்கள் ... நினைக்கவே பயமாய் இருக்கிறது பலருக்கும் நினைவு நாள்களாகிவிடுவதால் ! மு .மகேந்திர பாபு ( 21 -09 -13 )



********************* *******************


முக நூலில் அப்பா மூழ்கியிருக்க , அலைபேசியில் அம்மா ஆழ்ந்திருக்க , தனிமையில் தவித்த குழந்தைக்கு நண்பர்களாயினர் சோட்டா பீமும், சுக்கியும் , காளியானும் , ஜக்குவும் , டோலுவும், போலுவும் ...... மு . மகேந்திர பாபு ( 26 -09 -13 )

*************** ******************6*666


இளமையில் வளமையின் பசுமையாய் இருந்த போது, எப்போதும் இசை என்னிடத்தில் ஒலித்துக் கொண்டே இருக்கும் பறவைகளால் ! இலை உள்பட எவையும் இல்லை இப்போது . பறவைகளை நினைவு படுத்து கிறது கூடு மட்டும் . இடம் -குன்னத்தூர் -வரிச்யுர் மதுரை .


**************    **********&&*&&&&&&


மண்ணெண்ணெய் அடுப்பு எரிவாயு அடுப்பு மின்சார அடுப்பு என அடுத்தடுத்து அடுப்பு மாற்றம் பெற இன்னும் மாறவில்லை என் வீட்டு விறகு அடுப்பு இதுதான் தொடர்கிறது நாளும் ... இத்துப் போய்விட்டது என் தோலும்...! இடம் - கருப்பாயி ஊரணி - மதுரை .

********&&&&****************&&&&&&&&&&

தெருவெங்கும் மணக்கிறது நீ வந்து சென்ற பின்பு ... உன் கூந்தலில் இருந்து விழுந்த ஒற்றை மல்லிகைப் பூவினால் ! மு .மகேந்திரபாபு .

******************* **************-*-*******


வறண்ட மேகம் வானிலை அறிக்கையில் இன்றில்லை மழை. திடீரென மேகங்கள் கருக்கூடின பெரு மழையாய்ப் பொழிந்தன தேவதையாய் நீ ஊருக்குள் நுழைந்த போது...! மு.மகேந்திர பாபு .

****************

பாத்திரத்தில் இட்ட ஐஸ் கட்டியாய் என்னுள் நீ. வெளித்தெரியும் நீர்த் திவலைகளாய் உன் நினைவுகள் . மு.மகேந்திர பாபு .

****************** *******--------**********


நீ திட்டுவாய் எனத் தெரிந்தும் மழையில் நனைந்து வருகிறேன் . முடி கோதும் விரல்கள் உனது என்பதால். மு.மகேந்திர பாபு.

**************** ***********************


வழக்கம் போல் இந்த மாதமும் வந்து விட்டார் தபால் காரர் முதியோர் வுதவித் தொகையினை மூதாட்டியிடம் தர . நலம் விசாரிக்க வந்து விட்டனர் மூதாட்டியின் மகன்களும் , மகள்களும் . மு. மகேந்திர பாபு .

****************** ************************


சிறு கயிறு ஒன்றிற்கு கட்டுப் பட்டு இருக்கும் காளை போல் என் மனம் கட்டுப்பட்டு இருக்கிறது உன் அன்பிற்கு. மு.மகேந்திர பாபு.

************* ****************************


புல் தரையில் நடக்கிறாய் நீ. பாதம் பட்ட வுடன் தலை அமுங்கி , நீ கடந்த பின் தலை தூக்கிப் பார்க்கின்றன புற்கள் ... தன்னை ஒரு பூ அணைத்ததாய் நினைத்து ! மு.மகேந்திர பாபு .



********************* **********************



இரவின் நிசப்தம் கிழித்து கிண்டலும், கேலியுமாய் சிரித்துப் பேசி மகிழ்கிறது பெண்கள் கூட்டம் ஒன்று. வீட்டு முற்றத்தில் மெகா தொடர்களை மறந்து மின்தடை நேரத்தில். மு.மகேந்திர பாபு.


*********************** ********************



அப்பா தந்த அத்தனை பிஸ்கட்களையும் தின்று விட்டேன்மா என மகள் சொல்ல... மகிழ்வோடு வாசல் வந்து பார்க்கிறாள் அம்மா. நன்றியோடு வாலாட்டி நா நீட்டி பார்த்துக் கொண்டிருக்கிறது மகளை நாயொன்று. மு.மகேந்திர பாபு.


******************** ***********************


காடாக ... வீடாக இருந்த என்னை நாடாக மாற்ற நினைக்கும் மனிதா ! கேடாகும் உனக்கு என்னை இழக்கும் போது ! எச்சரிக்கிறேன். இப்படிக்கு மண்ணின் மைந்தன் மரம்.

******************* ***********************


காலாற நடந்து காடுபல கடந்து வயிறாற உண்ட காலம்தான் கடந்திருச்சே ! விளை நிலங்கள் விலை போக , கண்மாய்கள் கட்டடமாக காஞ்சத திங்கேன் கட்டுத் தறியில தினமும் ஓன் நல்ல நாளில் நான் கறியாக ! மு.மகேந்திர பாபு.

*************** *************************

உலக தண்ணீர் தினம் இன்று. வைகையின் இருகரை தொட்டு வெள்ளம் புரண்டோட , மக்கள் கூட்டம் மகிழ்ச்சியில் திளைக்க , ஆங்காங்கே மீன்கள் நீரில் துள்ளி விழ , நிலமெங்கும் நீர் சூழ ... பெரு மூச்சொன்றை உதிர்த்து மகிழ்ச்சியோடு முடிக்கிறாள் மகள் தன் ஓவியத்தை ! மு.மகேந்திர பாபு.

******************** ********************

ஏமாற்றம் அவமானம் நம்பிக்கை துரோகம் இருட்டடிப்பு புறக்கணிப்பு என எல்லாம் தாங்கி முட்டி மோதி மண் கிழித்து வெளிவந்து கொண்டிருக்கிறது என் நம்பிக்கைச் செடி நாளைய மரமாக ... மு.மகேந்திர பாபு. ்

****************** **********************

லைக்கும் கமெண்டும் கிடைக்கப்பெறின் முகநூலில் உள்ளம் துள்ளுமே உணர். மு.மகேந்திர பாபு.


நெட்டும் செல்லும் இல்லையேல் வாழ்வில் விட்டுப் போகுமே மகிழ்வு. மு.மகேந்திர பாபு.

***************** *********************

எப்போதாவது வருவாய் சில நிமிடங்களில் சென்றுவிடுவாய். ஏனோ இன்றும் என்னுடனே இருக்கிறாய் நேற்று வந்த நீ என் மேல் ஏதோ இரகசியம் முணுமுணுத்தபடியே என் ப்ரிய மழையே ! உன் இருப்பை விரும்பும் மண்.

************



நான் இருக்கும் வரை மகிழ்ந்திருப்பாய். நானில்லாத போது எல்லாவற்றையும் இழந்திருப்பாய். இப்படிக்கு...மரம். வருமான வரித்துறை ஆணையர் திரு.கிருஷ்ண சாமி IRS மற்றும் NCBH மண்டல மேலாளர் திரு.கிருஷ்ண மூர்த்தி சார் அவர்களுடனான மகிழ்ச்சியான நேரம்.

**************** ********************


முகநூல் மொழி பதிவிடு விருப்பமிடு கருத்திடு பகிர்ந்திடு மகிழ்ந்திடு மு.மகேந்திர பாபு.

**************** **********


பாடம் சொல்லிக் கொடுத்தா படிக்கிறதில்ல எழுதச் சொல்லிக் கொடுத்தா எழுதறதில்ல பாடச் சொல்லிக் கொடுத்தா பாடறதில்ல ஆடச் சொல்லிக் கொடுத்தா ஆடறதில்ல நீங்க சுத்த வேஸ்ட் என்கிறாள் கோபமாக என்னிடம் மகள். மு.மகேந்திர பாபு.

****************** *********************6

அழும் குழந்தையை தொட்டிலில் இட்டு ஆட்டி ஆராரோ பாடுகிறாள் மனைவி. முன்பை விட வீறிட்டழுகிறது. செல்போனில் " ஜிங்குன மணி " பாடலைப் போட அழுகுரல் அடங்கி தூக்கத்தில் தொலைகிறது குழந்தை. மு.மகேந்திர பாபு.

****************** **************************


வாடகை இன்றி வசிக்கிறோம் மரம் தருவதைப் புசிக்கிறோம் கிளையில் ஊஞ்சலாடி இலையில் மறைந்தாடி மகிழ்வாய் செல்லும் நாட்கள் மனிதா ! உன் காலடி காட்டினுள் படாதவரை ! மு.மகேந்திர பாபு.

****************** **************************



சாதிகளையும் மதங்களையும் பகுத்துப் பார்த்து சண்டையிடும் பகுத்தறிவு எங்களிடம் இல்லாததால், இருக்கிறது ஒற்றுமை. உ(கு)ரைக்கின்றோம் வேற்றுமையில் ஒற்றுமை நாங்களென்றே ! மு.மகேந்திர பாபு.


****************** **************************



மழையில் நனைந்து மழையை வரவேற்கிறாள் மகள். குழந்தையாகி மகளை வரவேற்கிறார் குழந்தைகள் நல மருத்துவர். மு.மகேந்திர பாபு.

****************** **************************


இரு சக்கர வாகனப் பயணத்தில் அறிமுகமில்லா நண்பரொருவர் பக்கவாட்டில் விரைந்து வந்து, சைடு ஸ்டாண்ட எடுத்து விடுங்க எனச்சொல்லி புன்னகைத்துச் செல்லும் போது பூக்கத் தொடங்குகிறது இந்நாளிற்கான மனிதம். மு.மகேந்திர பாபு.

****************** **************************


கூட்டம் நிறைந்த பேருந்தில் அமர இடங்கிடைக்காதா என ஏங்குகிறது மனசு. கூட்டமில்லாப் பேருந்தில் எங்கே அமர என அலை பாய்கிறது மனசு. மு.மகேந்திர பாபு.

****************** **************************


புறவழிச் சாலை தவிர்த்து நகரத்திற்குள் செல்கிறது பேருந்து. இறங்குபவர்களை இடித்துக் கொண்டு உள் நுழைகிறான் விடுமுறையில் பள்ளிச் சிறுவன் வெள்ளரிப் பிஞ்சுகளை கையிலேந்தியபடி. மடியில் வைத்துவிட்டு காசிற்காய் எதிர்பார்த்து நிற்கிறான். வெள்ளரிப் பிஞ்சைவிட வாடிப் போயிருக்கிறது அவன் முகம். மு.மகேந்திர பாபு.

****************** **************************


உள்ளங்கைக்குள் மண் ஒரு பிடி உள் ஒரு செடி உலகிற்குத் தேவை மரம் உணரட்டும் நம் மனம். மு.மகேந்திர பாபு.

****************** **************************


சிறு குழந்தைகளின் எழுத்தாற்றலையும், ஓவிய ஆற்றலையும் வளர்க்கும் முதல் களமாகத் திகழ்கின்றன நம் வீட்டுச் சுவர்கள். மு.மகேந்திர பாபு.

****************** **************************


பள்ளிக்குத் தாமதமாய் வரும் ஒவ்வொரு மாணவனிடத்திலும் புதைந்து கிடக்கின்றன குடும்பப் பிரச்சனைகள். மு.மகேந்திர பாபு.

****************** **************************


நாக்கை நீட்டி, எச்சில் ஒழுக புர்ர்ர்ரென்று வண்டி ஓட்டிக் கொண்டிருக்கிறாள் மகள். நிறுத்தங்கள் ஏதுமின்றி, பயணக் களைப்புமின்றி சென்று கொண்டிருக்கிறது புர்ர்ரென்று ! மு.மகேந்திர பாபு.

****************** **************************


இருந்த போது சிரிக்காத தாயும் தந்தையும் இறந்த பின்பு சிரிக்கிறார்கள் மகன்களால் நினைவஞ்சலி போஸ்டர்களில் ! மு.மகேந்திர பாபு.

****************** **************************


அருகருகே வீடுகள் இருந்தும் அந்நியராய் வாழும் மனித மனங்கள். சுற்றுச் சுவர் தாண்டி கைகுலுக்கிக் கொள்கின்றன மரங்கள். மு.மகேந்திர பாபு. / விகடன் - 25 - 12 - 23 அனுப்பப் பட்டது.

****************** **************************

தலைமுடியை கொத்தாய்ப் பிடித்து இழுத்தும் , காலால் நெஞ்சில் உதைத்தும், விரல்களால் கண்ணை நோண்டியும்் இன்ன பிற சேட்டைகளையும் இரசித்துக் கொண்டிருக்கிறது மனசு மழலை மகளிடம் ! மு.மகேந்திர பாபு.

****************** **************************


வீட்டுக்கு வந்து செல்லும் நண்பர்களுக்கு டாட்டா போட்டு வழியனுப்பி வைக்கும் மகள் , வானில் பறக்கும் விமானத்திற்கும் டாட்டா காட்டி வழி அனுப்புகிறாள். #குழந்தை #மனசு. மு.மகேந்திர பாபு.

****************** **************************


அடுக்கி வைத்திருந்த போது அழுத பொம்மைகள் குழந்தை சிதறி விளையாடிய போது சிரிக்கத் தொடங்கின. மு.மகேந்திர பாபு.

****************** **************************

அஞ்சறைப் பெட்டிகளும் , அரிசிப் பானைகளும் பணத்தைப் பாதுகாக்கும் வங்கிகளாக இருந்தன அன்றைய அம்மாக்களுக்கு ! மு.மகேந்திர பாபு.


வெடித்ததில் பிடித்தது காட்டுப் பருத்தியும், வெள்ளரிப் பழமும். மு.மகேந்திர பாபு.



கடித்ததில் பிடித்தது திருடித் தின்ற மாங்காயும் , கோவிலில் உடைத்த தேங்காயும். மு.மகேந்திர பாபு.

குடித்ததில் பிடித்தது. பனையோலையில் குடித்த பதனீரும் தாகம் தணித்த இளநீரும். மு.மகேந்திர பாபு.


அப்பா , நான் ஒளிந்து கொள்கிறேன் . என்னைக் கண்டுபிடிங்க எனச்சொல்லிவிட்டு ஒளிந்து கொள்கிறாள் மகள் என் முதுகுக்குப் பின்னால் ! மு.மகேந்திர பாபு.


பள்ளி நாட்களின் இடையில் வரும் விடுமுறையால் பிள்ளைகளைவிட அதிகம் மகிழ்கின்றன பூங்காக்கள். மு.மகேந்திர பாபு.


தெருக்களைக் கடந்து வரும் ஏதோ ஒரு வீட்டின் சமையல் வாசனை நினைவுபடுத்துகிறது ஊரில் இருக்கும் அம்மாவை ! மு.மகேந்திர பாபு.



மரங்களையெல்லாம் வெட்டிவிட்டு, மழைவேண்டி பிள்ளையாரைப் பிரார்த்தித்தான் ஒருவன். கண்விழித்த பிள்ளையாரின் கண்ணுக்கெட்டியவரை மரம் ஒன்றையும் காணவில்லை. பிள்ளையாரால் பிழைத்தது அவரது அரசமரம் மட்டுமே ! கண்மூடி சிந்தித்தார் பிள்ளையார் அனைத்து மரத்தின் அடியிலும் அமர்ந்துவிடவேண்டுமென்று ! மு.மகேந்திர பாபு.



பேருந்துகளின் பேரிரைச்சல்களைக் கடந்து செவியை வருடுகின்றன புல்லாங்குழல் ஊதுபவனின் பாடல்கள். ஆவலாய் காத்திருக்கின்றன வாங்குவோருக்காக புல்லாங்குழல்கள். மதுரை - பாண்டிகோவில். மு.மகேந்திர பாபு.


நிஜ வாழ்க்கையைவிட அதிக எதிர்பார்ப்புகளை ஏற்படுத்திச் செல்கின்றன தொலைக்காட்சி நெடுந்தொடர்கள் தினமும் ! மு.மகேந்திர பாபு.

சரியான உச்சரிப்புடன் தேன்தமிழ் உரையாடல்களைக் கேட்டும் , பார்த்தும் மகிழ்கின்றனர் குழந்தைகள் போகோ தொடர்களிலும் , பிற மொழிப் படங்களின் தமிழாக்கத்திலும் ! மு.மகேந்திர பாபு.

தாத்தாவும் பாட்டியும் கதை கேட்டுக் கொண்டிருக்கின்றனர் முதியோர் இல்லத்தில் இன்னொரு தாத்தா பாட்டியிடம். மு.மகேந்திர பாபு.

ஆண்டு முழுவதும் அக்டோபர் இரண்டாகவே இருந்தால் குடும்பம் இரண்டாகாது என நினைக்கிறாள் தன் கணவனின் குடியால் குதுகலம் இழந்த குடும்பத் தலைவி. மு.மகேந்திர பாபு.


விடுமுறை நாட்களைவிட பள்ளி நாட்களில் வரும் மழையே குழந்தைகளுக்கு மிகவும் பிடித்துள்ளது திடீர் விடுமுறை கிடைப்பதால் ! மு.மகேந்திர பாபு.


செடிகளுக்கு இடையே வளரும் களைகளைப் போல்தான் முடிகளுக்கு இடையே உள்ள வெள்ளை முடிகள் வெறுப்பாகப் பார்க்கப் படுகின்றன. மு.மகேந்திர பாபு.



அப்பாவின் ஞாபகம் தலைமுடியைக் கொத்தாகப் பிடித்து மாவாட்டுவதைப் போல ஆட்டும்போதும் , நெஞ்சில் பிஞ்சுக் காலால் உதைக்கும்போதும் , கண்ணுக்குள் விரல்விட்டு நோண்டும் போதும் , அவ்வப்போது அபிஷேகம் பண்ணும்போதும் செல்ல மகளால் நினைக்கத் தொடங்குகிறேன் என் தந்தையின் தங்க மனதை ! மு.மகேந்திர பாபு.

குழந்தையாகும் தருணம் இனிமையானது. வன்மம் வளர்ப்பதைக் காட்டும் சின்னத்திரை தொடர்களை விட , பொம்மைத் தொடர்களால் உண்மையிலே மகிழ்ச்சிப்படும் குழந்தைகளால் நானும் மாறிக் கொண்டிருக்கிறேன் குழந்தைகளோடு குழந்தையாக ! மு.மகேந்திர பாபு.


காத்திருப்பது சோகமாகவோ , சுமையாகவோ தெரியவில்லை. கையில் ஆண்ட்ராய்டு அலைபேசி இருக்கும் போது ! மு.மகேந்திர பாபு.


அடித்து நொறுக்கப்பட்ட சேதாரம் என்றாலும் , தினமும் தொண்டை கிழிய கத்தி கீரை வியாபாரம் செய்பவள் மகளின் கல்யாணத்திற்காக சிறுகச் சிறுக நகை சேர்க்க தொடங்க நினைத்தாலும் கைக்குள் அடங்கமறுக்கிறது கல்யாண நகைகள் கீரை விற்ற காசைப் போல. மு.மகேந்திர பாபு.



இந்த உலகின் மிகச்சிறந்த மொழிபெயர்ப்பாளர் தன் மழலையின் மொழியினை மொழிபெயர்க்கும் அம்மாதான். மு.மகேந்திர பாபு.


எழுபதைத்தொடும் அப்பா எழுவதற்கு கை ஊண்டியதில்லை. அவரது உழைப்பு அப்படி. இப்போதெல்லாம் எழுவதற்கும் , அமர்வதற்கும் என்னையறியாமலே கை தரைநோக்கிச் செல்கிறது. இனி நம்ம வீட்டிலும் ஒரு காளியான் என கிண்டல் செய்கிறாள் மகள் என்வயிறைக் காட்டி. மு.மகேந்திர பாபு.


குடையென நின்று குளுமை தந்தது குடிசைக்கு. பெருவெளியினில் மனிதனால் வெட்டப்படாத ஒற்றை மரம். மு.மகேந்திர பாபு.

Post a Comment

0 Comments