கையெழுத்தா ? ரேகையா ?

 


கையெழுத்தா ? ரேகையா ?


நேற்றைய வாக்குப் பதிவின் போது 80 வயது மதிக்கத்தக்க பாட்டி ஒருவர் தன் ஜனநாயக கடமையைச் செய்ய கம்பூண்டிய படி.வந்தார்.

அவரது முதுமையை எண்ணி காக்க வைக்காமல் வரிசையிலிருந்து அழைத்து வந்து அருகிலிருந்த  ஆசிரியையிடம் நிற்கச் சொன்னேன்.அவரும் கொண்டு வந்த சிலிப்பை பெற்று , பெயர் வாசித்த பின் பக்கத்திலிருந்த ஆசிரியையிடம் சென்றார்.


அதற்கு முன்புவரை 50 வயதுடைய ஆண்களும் , பெண்களும் கட்டை விரலால் ரேகை வைத்துச் சென்றார்கள் கையெழுத்துப் போடத் தெரியாமலும் , சிலர் தெரிந்தும் நேரம் அதிகமாகும் எனக் கருதியும் ரேகை வைத்துச் சென்றார்கள்.


அதனால் ஆசிரியை அந்தப் பாட்டியின் கட்டை விரல் பிடிக்க , பாட்டியோ பேனா கொடுங்க என்றார்.சற்றே ஆச்சர்யப் பட்டு , இந்தாங்க பாட்டி என்றேன்.பக்கத்திலிருந்த முகவர்கள் ரேகைப் போட வேண்டியதானே ! என்க , பாட்டி கையெழுத்தே போடட்டும் என்றேன்.


கைவிரல்கள் ஆடிக்கொண்டிருக்க தன் பெயரை எழுதினார். மய என எழுதிவிட்டு , ஒரு எழுத்த விட்டுடென் போல என்றார். பரவால்ல .. மீதிய எழுதுங்க என்றேன்.காள் என எழுத , எழுத்துகள் எல்லை தாண்டின.


அவரது பெயர் மாயக்காள்.துணை எழுத்தை விட்டுவிட்டார்.யார் துணை இன்றியும் வந்ததாலோ என்னவோ !


 பின், வாக்குப் பதிவு செய்யும் இடம் அழைத்துச் சென்றேன்.சின்னங்களையும் , பட்டனையும் சொன்னேன்.அழுத்தி விட்டு மகிழ்ச்சியோடு கம்பூண்டி நடக்கத் தொடங்கினார் அந்தப் பாட்டி.ஜனநாயகம் நிமிரந்து நிற்க.இன்னும் பல தேர்தல் பார்க்க வேண்டும் பாட்டி என நினைத்துக் கொண்டேன்.

Post a Comment

0 Comments