மருதம்

 


மருதம்




அலையடிக்கும் நெல் வயல்களை வருசா வருசம் பாத்துப் பழகிய எனக்கு , இந்த வருசம் பெருத்த ஏமாற்றத்தைத் தந்தது. இதென்னடா மருத நெலத்துக்காரனுக்கு வந்த சோதன என நெனச்சிக்கிட்டு வயல் பக்கம் காலாற நடந்தேன்.


இந்த ஊர்ப் பயபுள்ளகளுக்கு ஏக்கர் கணக்குல வயல் இருந்தாலும் , வரப்பச் சொரண்டற வேலய மட்டும் விடமாட்டானுகெ என நெனச்சிக்கிட்டு அரையடி அகலம் கூட இல்லாத வரப்பில் நடக்கத் தொடங்கினேன்.


இந்நேரமெல்லாம் நெல் பரிஞ்சு , கதிர் சாஞ்சிருக்க வேண்டும். ஆனால் வானம் வஞ்சித்து விட்டது. மறுகால் பாய வேண்டிய கம்மாய் , உடைச்ச தேங்காயிலிருக்கும் தண்ணியப் போல இத்தணூண்டு சேத்து வச்சிரிக்குது. 


அங்கொன்றும் , இங்கொன்றுமாய் பருத்தியும் , எங்கோ ஓரிடத்தில் வெண்டையும் , மக்காச் சோளத் தட்டையும் நின்று கொண்டிருந்தது.


சனங்க , செதுக்கியால் கள  வெட்டிக்கொண்டிருக்க , நான் நடந்து பக்கத்தில வர , யாரது  பாவா ? என ஒரு குரல் கேட்க , 


ஆமா சித்தி நான்தான் . நல்லாருக்கிகளா ? என்றேன். 


நல்லாருக்கோம்பா. முழுக்கால் சட்டெ போட்டு வரவும் கிராமன்சு னு நெனச்சோம். பருத்தியதான் பாக்க வாராக போலனு என்றார். 


என்ன வெசயமா ? 


நஷ்ட ஈடு.ஏதாச்சும் கொடுப்பாகனுதான்.


அட கொடுமய. எந்நாளும் ஒழச்சி சோத்துக்கான அரிசி தரக்கூடிய ஒரு மகத்தான கூட்டம் நஷ்ட ஈட்டுக்காக காத்திருக்கா என நெனக்கும் போது , ஏதோ ஒரு புழு வேரோடு சாய்ப்பதைப் போலிருந்தது என்னை.


கொஞ்சம் நடந்தேன்

  

யாரது ?  மாப்ளயா ? 


ஆமா மாமா . 


என்னயா இம்புட்டுத் தூரம் ? 


ஒங்களயெல்லாம் பாத்துட்டுப் போகலாம்னுதான் வந்தேன் மாமா. என்ன ஒருத்தரு கூட நெல்லுப் போடலெ ? 


 அங்கிட்டு இங்கிட்டுப் பேஞ்ச மழ நம்மூர்ல போக்குக் காட்டிப் போயிருச்சு. கம்மா நெறயல.காகம்மாதான் தண்ணி இருப்பு. அதான் பருத்தியப் போட்டாச்சு. முன்ன மாறி இல்ல மாப்ள. தரிசா போட மனசு வரலெ. அதான் . ஏதோ பாடு சோலி ஓடியடையுது. வாங்கியடிக்கிற மருந்துச் செலவு போக , ஏதோ வந்தா சரிதான் எனச் சொல்லிவிட்டு செதுக்கியால் களைகள வெட்டத் தொடங்கினார். 


மழை மறந்த அந்த மருத நெலத்தப் பாக்கையில் மனசெங்கும் விரிசல் ஓடத்தொடங்கியது எனக்குள்.


மு.மகேந்திர பாபு.

Post a Comment

0 Comments