மு.மகேந்திரபாபு - காதல் சிறு கவிதைகள்

 


காலியான பின்னும்

மிச்சமிருக்கிறது

கூடையில் பூவின் வாசனை...

நீ

பிரிந்த பின்னும்

நினைவுகள் மிச்சமிருக்கிறது

என் நெஞ்சினில் !


மு.மகேந்திர பாபு.


******************   ********************


கோடையின் வெப்பத்தில்

உருகி ஓடுகிறது

தார்ச்சாலை.

உன் நினைவுத் 

துள்ளலில்

நிரப்பப் படுகின்றன

கவிதைகளாய்த் தாள்கள்.


மு.மகேந்திர பாபு.

சுடும் பாலைவனத்தில்
நடப்பவனுக்கு
துளிநீர் கிடைத்த
மகிழ்ச்சியை
எனக்குத் தருகிறது
உன் ஒற்றைப் பார்வை.

*************    ***************   *********

மலர்க் கண்காட்சி

எந்த மலர் அழகு ?

அனைத்திலும் வெற்றி பெற்றது 

உன் முகம்.


மு.மகேந்திர பாபு.


*********************    ********************


சூரிய ஒளிபடாத

முளைப்பாரி செடியென

வளர்ந்து உயர்ந்திருக்கிறது

உன்மீதான என் பிரியம்.

எப்போது தலையில்

தூக்கிவைத்துக் கொண்டாடப் போகிறாய் ?


மு.மகேந்திர பாபு.


********************    *****************


நுங்கு வண்டியில்

சொருகப்பட்ட 

பனையோலையென

தடதடக்கிறது மனது

நீ எதிரில் வரும்போது !

 

மு.மகேந்திர பாபு.


*****************    *******************


உன்னை நனைத்த பின்பு

தன்னைச் சுத்தமாக்கிக்

கொண்டது மழை நீர்.


மு.மகேந்திர பாபு.


****************     **********************


நெட்டென்ப நித்தம் சேட்டன்ப இவ்விரண்டும்

இதமென்ப இளசுகளின் மனதிற்கு.


மு.மகேந்திர பாபு.


ஒத்த விழிப் பார்வையிலே

செத்ததடி ஏன் உசிரு

உள்ளுக் குள்ளே இராட்டினமாய்

சுத்துதடி ஏன் மனசு


பார்த்துப் பார்த்துப் போகும்போது

வேர்த்து வேர்த்துப் போகிறேனே !

அக்கம் பக்கம் வரும்போது

வெக்கம் வந்து வேகுறேனே !


(பட உபயம் - முகநூல் )


மு.மகேந்திர பாபு.


என் அருகில்

நீ இருக்கும் போது

உன் பிரியங்களைச்

சேமித்து வைத்துக் கொள்கிறேன்

ஒரு இன்வெர்ட்டரைப் போல !


நீ இல்லாத போது

நினைவு வெளிச்சம்  எடுத்து

நீந்த விட்டுக்கொள்கிறேன்

என்  இதய அறைகளுக்குள் !


மு.மகேந்திர பாபு.



உன் வருகைக்காய்

காத்திருந்த போது

வார்த்தைப் பூக்கள்

கவிதை மாலையாக்கக் கெஞ்சின.

நீ வந்த பின்பு

பார்க்கலாம் எனச் சொல்லி

நிராகரித்தேன்.

நீ வந்த பின்பு 

தேடினேன் வார்த்தைகளை! 

அவைகள் தொண்டைக் குழிக்குள்ளே மரித்துவிட்டிருந்தன

உனைக் காணும் தைரியமற்று !


மு.மகேந்திர பாபு.


கதைக்குள் கதையாகவும் ,

கிளைக் கதையாகவும் வரும்

பஞ்ச தந்திரக் கதைகள் போல்,

சொல்லிக் கொண்டிருக்கின்றாய்

தாமதத்திற்கான காரணங்களை

மிக நேர்த்தியாய் !

உன்னை இரசித்துக் கொண்டிருக்கிறேன் நான்.


மு.மகேந்திர பாபு.


மண் வாசனையோடு

உன் வாசனையும்

கலந்து வருகிறது காற்றில் !


மு.மகேந்திர பாபு.


உன்னைப் போல்தான்

இந்த மழையும்.

நீ நினைத்து நினைத்துப்

பேசுகிறாய்.

மழை நினைத்து நினைத்துப்

பெய்கிறது.


மு.மகேந்திர  பாபு.

மழை இல்லாப் பொழுதிலும்

வானவில் வருகிறதே !

எதிரில் நீ .

நீ கோவப்பட்டுப் பார்க்கிறாய்.
கோவம் உன்னிடத்தில்
வர தயங்கி நிற்கிறது.
தேவதைகளிடத்தில்
நான் எப்படி
வருவேனென்று !

மு.மகேந்திர பாபு.

உன்
காந்தக் கண்களைக்
கண்ட பின்தான்
என்
கந்தக மனவயலில்
கவிதை நெருப்புகள்
எரியத் தொடங்கின.

காற்றுக்கும்

நீ இருக்குமிடம்

தெரிந்து விட்டதோ ?!

உனை நோக்கி

நகர்த்திச் செல்கிறதே

மழை மேகத்தை !


மு.மகேந்திர பாபு.

அழகெல்லாம்

ஒன்றுகூட்டி

அதற்கிட்டனர் உன்பெயரை .


மு.மகேந்திர பாபு.

அப்படிப் பார்க்காதே !
வார்த்தைகள்
என்னில் எழவும் இல்லை.
கீழே விழவும் இல்லை.
உன் கண்ணைக்கண்டு
மண் பார்க்க மறுக்கின்றன.
இமை மூடித் திற.
அவைகள் வெளியே வரட்டும்.
வந்தபின் மோட்சம் பெறட்டும்
உன்னால்
உன் கண்ணால் ஒரு கவிதையாக.

நிலவு முகம்.

உன்னில்  நீந்துகிறது

என் அகம்.

வில் புருவம்

விழி உயர்த்தச் செய்கிறது

உன் உருவம்.

முத்தத்திலும்

மொத்தத்திலும் 

நீ ஒரு தேவதை.

உன்னால் , உன்

கண்ணால் எனக்குத்

தேவை வதை.


மு.மகேந்திர பாபு.




 புல்லாங்குழலின் 

இசையைவிட 

இனிமையாக இருக்கிறது உன்பேச்சு.

நீ தோள் சாயும் போதுதான் என் இதயம் நிரம்புகிறது  உன்மீதான அன்பில்.

காற்றினை அசைக்கும் உன் கீதம்

காலம் முழுமைக்கும்

என் மனம் உன்னில் சேதம்.


மு.மகேந்திர பாபு 


ஓவியம் -  முகநூல்.



உன் ப்ரியத்தைப் போல்தான்

விடாமல் பொழிந்து கொண்டிருக்கிறது

இன்றைய கோடை மழை.


மு.மகேந்திர பாபு.


என் மனசைக் 

கடத்திப் போகும்

உன் கண்ணைப் போல்தான் ,

இந்த மழை மேகத்தைக்

கடத்திச் செல்கிறது

மாலைக் காற்று.


மு.மகேந்திர பாபு.

Post a Comment

0 Comments