சேரன் பாண்டியனும் செருப்படியும்

 


சேரன் பாண்டியனும் செருப்படியும் ...


               திடீரென முழிப்புத் தட்டிய போதுதான் ஞாபகம் வந்தது. அடடா ! இன்று நம்பியாரத்தில் ( மேலநம்பியபுரம் ) ஏதோ ஒரு விசேசத்திற்கு டெக் எடுத்துப் படம் போடுறதாகச் சொன்னாங்களே பசங்க . எப்படி மறந்தேன் ? மணி இப்ப என்னவா இருக்கும் ? 


                 எங்க ஊரில் ( பொன்னயாபுரம் - எட்டயபுரம் அருகில் ) சொவர்க்கடியாரம் உள்ள வீடுகளில் ஒன்று தொரச்சாமி மாமா வீடு. சன்னல் வழியாப் பாத்தாலே டைம் தெரியும். மற்ற வீடுகளில் தெரியாது. 


        ஊரே தூக்கத்தில் இருக்குது. உள்ளுக்குள்ள படம் பாக்கனும்னு சிந்தனை ஓடுது. சரி மணி என்னனுதான் பாப்போம்னு அரவமில்லாம , பொத்திப் படுத்திருந்த அம்மா சேலையோட நடக்கேன். அங்கின ஒன்னு இங்கின ஒன்னுனு நாய்க லேசா உறுமிட்டு படுத்துக்கிருச்சுக  . தெரு விளக்குகளின் உபயத்தில்  நடந்து  போய் தொரச்சாமி மாமா வீட்ல மணிய பாக்கேன். டிம் லைட் வெளிச்சத்தில் மணி சரியா நைட் பன்னெண்டு. புதுசா கல்யாணம் முடிச்சவுக போல சின்ன முள்ளும் பெரிய முள்ளும் இருக்கு.


               இந்த நேரத்தில சேக்காளிக எவனும் வூட்ல இருக்கமாட்டாங்க. படத்துக்குப் போயிருப்பாங்க. என்ன பண்ணலாம் என யோசிக்க , மனம் படத்துக்குப் போனு சொல்லுது. 


                 எங்க ஊர்க்கும் நம்பியாரத்துக்கும் இடையில் ஒன்னரை கிலோமீட்டர் தூரம்தான். நடுவுல கம்மா. ரோட்ல போனா நடுவுல தட்சிணாமூர்த்தி சாமி கோவில். அடுத்து சுடுகாடு. அடுத்து ஆறு கண் பாலம். அடுத்து ஊருதான்.


                  ஏதோ ஒரு குருட்டுத் தைரியத்தில சேலையப் பொத்திக்கிட்டு நடக்கத் தொடங்கினேன். ரோடு வரை ஒன்னும் தோணல. ஏன்னா அங்க வரைக்கும் டீப்லைட் வெளிச்சம். அடுத்து கெச இருட்டு. கையில டார்ச்சும் இல்ல. டார்ச்சுன்னா பேட்டரி லைட் கிடையாது . சிரட்டை ஓட்டையில் குச்சியச் சொருகி மெழுகுவர்த்தியப் பொருத்தி வச்சி அந்த வெளிச்சத்தில  நடப்போம்.


                 நல்ல அமாவாசை இருட்டு. தார்ரோடு போடுவதற்காக கற்கள் ரோட்டோரத்தில் குமிச்சு வச்சிருக்காக. அதுப் பக்கத்தில அஞ்சடி உயரத்தில தார் பேரல். திடீர்னு பாத்தா பயம்தான். ஏற்கனவே தெரியும்ங்கிறதால தட்டுத்தடவி நடக்கிறேன். தட்சிணாமூர்த்தி கோவிலுக்கு வந்துட்டேன். குண்டு பல்பு வெளிச்சத்தில அவரு தெரியுறாரு. சாமி எப்படியாச்சும் டிவி போடுற இடத்துக்குப் போக துணை செய்னு கும்பிட்டுட்டு நடக்கேன். அடுத்து சுடுகாட்ல பொணம் எரியும் புகை வாடை. பயம் அல்லயப் பிரட்டுது. படம் பாக்கறது    முக்கியமானு  தோணுது. இனி திரும்புனா அசிங்கம். முன் வச்ச கால பின் வைக்கக்கூடாது.


               ஒரு வழியா நம்பியாரம் பஸ்ஸ்டாப் வந்துட்டேன். ஊரு பெரிய ஊரு. எந்தத் தெருவுல படம் போடுறாகனு தெரியலயே. சரி. சத்தத்த வச்சுப் போவோம்னு நடக்கேன். 


அப்பாடா ! வந்தாச்சு. டெக் எடுத்துப் படம் போடும்தெருவுக்கு  வந்துட்டேன். 


                 கவுண்டமணி , செந்திலிடம் , கிரீஸ் டப்பாவ எடுத்துக்கொடுனு சொல்ல , செந்தில் அதக் காலால எத்தி விடுவார். அந்த சீன்தான் நான் போகும் போது டிவில ஓடுது. நம்ம டப்பா டான்சாடப் போகுது அப்பத் தெரியாது.


           அப்ப நான் ஆறாப்பு படிக்கேன். அது அனேகமா 1991 ஆம் வருசம்னு நினைக்கேன். இன்னிக்கு 30 வருசத்துக்கு முன்ன நடந்த சம்பவம் இது.


                      படம் பாத்துட்டு காலயில சேக்காளிகளோட எங்க வூட்டுக்கு வாரேன். அப்பா வூட்டுப் படியில உட்கார்ந்திருக்கார். 


உள்ளுக்குள்ள பயம். தோல உரிச்சுருவாரோன்னு. அம்மா பக்கத்தில இருந்தா தப்பிச்சுரலாம். இல்லனா நம்ம கத கந்தல்தான் னு நெனச்சிக்கிட்டே போறேன்.


             அடுத்த செகண்ட்ல வெட்டரிவா பறந்து வருது. அருவா பிடங்கியப் பிடிச்சுக்கிட்டு என் மேல வீசுறாரு அப்பா. கண்ணிமைக்குற நேரத்தில டக்குனு குனிய அருவா குறிதப்பி கீழ விழுகுது.


                கோவம் இன்னும் கூடுது அப்பாவுக்கு. அடுத்த  வினாடி செருப்ப எடுத்து வீசுறாரு. இந்தத் தடவ குறி தப்பல. ஓடவும் முடியல ஒளியவும் முடியல. அடின்னா அடி இன்ன விதம்தான்னு இல்ல. 


              இனிமே எந்த ஊர்ல டெக் எடுத்துப் படம் போட்டா போவயால னு கேட்டுக்கிட்டே செவுள்ள இருக்குறாரு. மாட்டம்பானு சொல்றேன். அம்மா வந்து தடுத்து காப்பாத்துனாங்க. 


         அதிலிருந்து டெக்னு ஒன்னயே மறந்துட்டேன். அப்ப ஊர்ல டிவி கிடையாது. இப்ப நம்ம வீட்ல பெரிய டிவி இருக்கு.24 மணி நேரமும் படம் போடுறாங்க. மனம் ஏனோ ஒன்ற மாட்டிக்குது.சாப்பிடும் போது மகட்ட , பாப்பா செய்தி வைப்பா அப்டினு சாப்டுற நேரம் மட்டும் பாக்குறேன் . அது ஒரு காலம். என்ன நான் சொல்றது ?


( குறிப்பு - டெக் என்பது ஊரில் நல்லது கெட்டது என்றால் அப்ப வந்த படங்களை விளாத்திகுளத்தில் உள்ள கலர் டிவியை வாடகைக்குப் பேசி ஊரில் போடுவது ) அனுபவம் தொடரும்.


மு.மகேந்திர பாபு.

Post a Comment

0 Comments