கள எடுப்பு

 


காப்பரிட்சை , அரப்பரிட்சை லீவப் போல முழுப்பரிட்சை லீவு அவ்வளவு சந்தோசம் தருவதில்லை. காப்பரிட்ச லீவுல கள எடுக்கப் போகலாம். அப்ப கள எடுப்புக்கு சம்பளம் 16 ரூபா. எஞ்சோடு பசங்க கூட மொத்தமாச் சேந்து தெக்காட்டிற்கு கள எடுக்கப் போவோம். ஆறாப்பு , ஏழாப்பு படிச்சிக்கிட்டிருந்த காலமது.


காலைல ஏழுமணிக்கு ஊர் மந்தைக்கு வந்திரணும். அங்கிருந்து கள எடுப்புக்கு எங்க போகணுமோ அங்க  கூட்டிட்டுப் போக ஒருத்தர் இருப்பார். அவர் வேலயே ஆள கூட்டிட்டுப் போறதுதான்.மதியம் ரெண்டு மணிக்கு வேல முடிஞ்சிரும். இடையில காபித்தண்ணி.


ஏ... தம்பிகளா நெர புடிச்சு எடுக்கணுமப்பா. களய மொறிச்சு விடக்கூடாது. குறிப்பா கோரய நல்லா புடுங்கணும். அருகு இருந்தாலும்தான். சரணத்திய புடுங்கிப் போட்டு மூடிட்டுப் போயிரக்கூடாது. நெரயில பின் தங்குனா கூட பரவாயில்ல.என்ன நான் சொல்றது சரிதான ?


சரிதாண்ணா. அதெல்லாம் நாங்க நல்லாப் புடுங்குவம்ணே.கொறயே சொல்ல முடியாதுண்ணே !


ஆமா ! அப்பனாத்தான் நாள பின்ன உங்ளக் கூப்பிடுவன்.


இருபது பேர் , முப்பது பேரோட போறதால அலுப்புத் தட்டுவதில்லை. எல்லாம் கைக்களைதான். செதுக்கிக்கள இல்லை. மழ பெஞ்ச ஈரம் இருப்பதால் , டபக் டபக்குனு புடுங்கலாம்.


வேல முடிஞ்சதும் அப்பவே சம்பளம். 15 ரூபா வூட்டுக்கு. ஒரு ரூபா எங்களுக்கு. வேல செஞ்சு முடிச்சோடனே நேரே கம்மாயிலதான் போய் விழுவோம். ஒரு மணி நேரம் அங்க கிடையாய் கெடப்போம். நிலா நீச்சல் , முங்கு நீச்சல் , எம்சியார் நீச்சல் , சாதா நீச்சல் , தண்ணிக்குள்ள எறிபந்து , தொட்டுப்புடிச்சு வெளயாடுறதுனு நேரம் போறதே தெரியாது.  


எலேய் ... கண்ணு செவந்திருக்கா பாரு. ஆமாலே ... செவந்திருக்கு. வூட்ல தேடுவாக. உதட்டோரத்தில காக்காபி வந்திருச்சிடேய். கெளம்புவோம் னு சொல்லி டவுசர மாட்டிக்கிட்டு கடைக்குப் போவோம் . 


சித்தப்பா ... ஒத்த ரூவாய்க்கு துட்டு மிட்டாய் கொடுங்க.


இந்தா ... நீயே எடுத்திக்க.


துட்டு இருக்கும் மிட்டாயத் தேடி எடுப்போம். பத்து பைசா , அஞ்சு பைசா மிட்டாய் சற்றே புடைப்பாய் இருக்கும். இருபது பைசா மிட்டாய் எல்லை மீறி இருப்பதால் ஈசியாக் கண்டு பிடிச்சரலாம்.


அம்மா இந்தாங்க துட்டு. 


ஒன்னய கள எடுக்க போகச்சொன்னாமா ? நம்ம காட்ல போயி எடுக்கலாம்ல.


ஒத்தயா போனா போரடிக்குமே ! இங்க நாங்க பசங்களா ஜாலியாப் போயிட்டு வாரோம். 


என்னமோ பண்ணு.


அன்று வாங்கிய அந்த 16 ரூபா சம்பளம் அடேங்கப்பா ! எவ்வளவு சந்தோசம். உழைச்சு வாங்கிய காசில ஒத்த ரூவாக்கி வாங்கித் திங்கறதும் எவ்வளவு சுகம். 


என்னதான் ஏடிஎம் ல போயி ஆயிரக் கணக்குல பணம் எடுத்தாலும் ஆறாப்பு படிக்கும் போது வாங்கிய அந்த பதினாறு ரூபாய்க்கு ஈடாகுமா ? 


மு.மகேந்திர பாபு.

Post a Comment

0 Comments