வணக்கமையா

 


வணக்கமையா 

-------------------

ஆரம்பப் பள்ளி , நடுநிலைப் பள்ளி , மேல்நிலைப் பள்ளி மற்றும் விடுதியென பதினான்கு ஆண்டுகள் பணி நிறைவடைந்து விட்டன. ஆண்டுதோறும் புதுப்புது மாணவர்களைச் சந்தித்து வருகிறோம்.ஒவ்வொரு நிலையிலும் மாணவர்களின் மனநிலையில் மாற்றங்களைச் சந்தித்து வருகிறோம்.


ஆரம்ப மற்றும் நடுநிலைப் பள்ளி மாணவர்கள் பள்ளியில் ஒரு நாளில் எத்தனை முறை பார்க்கிறார்களோ , அத்தனை முறையும் வணக்கம் சொல்லி திக்குமுக்காட வைத்துவிடுவார்கள்.போதும்பா வணக்கம் சொன்னது என்றாலும் விடுவதாக இல்லை அவர்களின் அன்பு மனம்.


குறிப்பாக 1 - 5 ஆம் வகுப்பு மாணவர்கள் எதிரில் வந்து நின்று , தொடையில் வலது கையால் ஓங்கி ஒரு அடி அடித்து காவல்துறை நண்பர்களைப் போல , வலது கையை நெற்றிக்கருகில் வைத்து சல்யூட் போடும் போது, கள்ளமற்ற பிஞ்சு முகம் பார்ப்பதே நமக்கு ஆனந்தம்தான்.சிலர் கைகூப்பி வணக்கமையா எனச் சொல்வார்கள்.


மேல்நிலைப்பள்ளிகளில் 6-8 வரையுள்ள மாணவர்கள் தங்களுக்குப் பாடம் எடுக்கும் ஆசிரியர்களுக்கு மட்டும் பாரெக்கும் போதெல்லாம் வணக்கம் சொல்லி அன்பைப் பொழிவார்கள்.


9 - 10 ஆம் வகுப்பு மாணவர்கள் தனக்கு எதிரில் வரும் ஆசிரியர்களுக்கு சிறுபுன்னகையோடு வணக்கம் ஒன்றினை உதிர்த்துச் செல்வார்கள்.


11 - 12 ஆம் வகுப்பு மாணவர்கள் பெரும்பாலும் எதிரில் அதிகம் தென்படுவதில்லை.சில நேரம் தென்பட்டாலும் , அழைத்துப் பேசும்போது வணக்கமையா என்பார்கள்.


இன்றும் , எனது ஆசிரியர்களைக் காணும் போது மரியாதை கலந்த பயம் இருக்கிறது.


வணக்கமையா.


மு.மகேந்திர பாபு.

Post a Comment

0 Comments