ஒரு சிறுமியின் ஏக்கம் -( ஒலிபரப்பு -மதுரை வானொலி )

 


ஒரு சிறுமியின் ஏக்கம் -( ஒலிபரப்பு -மதுரை வானொலி )
@ பள்ளிக் கூடம் போகப் போறேன் !
சாயங் காலம் திரும்பி வாரேன் !
@ ஏழை வயிற்றில் பிறந்த எனக்கு
ஏழு வயசாச்சு !
எழுதப் படிக்கத் தெரிவதென்பது
எட்டக் கனியாச்சு !
@ எஞ்சோட்டுப் பிள்ளைக எல்லாம்
ஓசி பஸ்ஸில போகுது !
எந்தம்பியப் பார்த்துக்கிறதே
என் வேலையா ஆகுது !
@ எண்ணெய் இல்லா தலையோட
நான் கிடக்கேன் !
உடம்புல தெம்பில்லாம
தினம் நடக்கேன் !
@ ரெட்டை சடை யுனிபார்ம்
பாக்க பாக்க ஆசைதான் !
படிக்கப் போறேன்னு சொன்னா
அப்பாட்ட கிடைக்கும் பூசைதான் !
@ கிழிஞ்ச சட்டை போட்டு போட்டு
மனசு இத்துப் போச்சு !
தம்பியத் தூக்கித் தூக்கி
சட்டைப் பட்டன் அத்துப் போச்சு !
@ பள்ளிக் கூடம் போற பிள்ளைகளுக்கு
வாங்கித் தின்ன துட்டு !
நான் கேட்டா எனக்கு விழும்
தலையில குட்டு !
@ ரெண்டு மூனு பிள்ளைக சேர்ந்து
படிக்குது பாட்டு !
எழுதிப் படிக்க அவுகளுக்கு
இலவச நோட்டு !
@ புதுசு புதுசா வாங்குறாக
பிள்ளைக பென்சில் பேனா !
பீடி ,சிகரெட் வாங்கத்தான்
அப்பா அனுப்புறார் வீணா !
@ மத்த பிள்ளைகளைப் போல
நானும் பள்ளிக்குப் போவேனா ?
கலர் கலராக் கட்டிப்போற
டீச்சர் போல ஒருநா ஆவேனா ?
@ புதுசா ஏதோ கணக்கு
ஒன்னு எடுத்தாக !
அதுல எம்பேரையும் எழுதி
எஸ் .எஸ் எ... ல கொடுத்தாக !
@ எங்கப்பா அம்மாகிட்ட பிள்ளைய
படிக்க வைங்கன்னு சொன்னாக !
தம்பிய யார் பாத்துக்கிறதுன்னு
ஏக்கத்தோட நின்னாக !
@ தம்பியோட பள்ளிக்கு வரட்டுமுன்னு
சாருக சொன்னாக !
சுகமான சுமையாய் தோளில் பையும்
இடுப்புல தம்பியும் !
@ இனிமே எனக்கு சந்தோசம்தான்
தினமும் பாடம் படிப்பேன் ...
பாட்டுப் படிப்பேன் ....
பஸ்ஸில வருவேன் ...
@ பள்ளிக் கூடம் போகப் போறேன் !
சாயங் காலம் திரும்பி வாரேன் !
மு. மகேந்திர பாபு . ( நன்றி -அ.இ .வானொலி -மதுரை -இளைய பாரதம் நிகழ்ச்சியில் ஒலிபரப்பான என் கவிதை )

Post a Comment

0 Comments