கறிச்சோறு

 


கறிச்சோறு


யார்ரா இவன் கூறு கெட்ட பய ? கொஞ்சமாச்சும் அறிவு இருக்காடா ? சாப்புடும் போது இப்டியாடா அடிக்கடி தண்ணிய குடிக்கிறது ? இப்பவே ஏழாட்டி குடிச்சிட்ட. பிறகு எப்படிடா கறிச்சோற திம்ப ?   அப்பாவப் பாத்தியா , தண்ணி குடிக்கிறேனா ? சும்மா அவக்கு அவக்குனு அள்ளிப் போடனும்டா சோற...


தன் மகனுக்கு புத்தி சொன்னார் பொன்னையா.


ஏ ... சின்னையா , பள்ளிக்கொடத்துப் பயலப்  போயி பயங்காட்டிக்கிட்டு இருக்க.ஆட்டுக்கறி  நமக்கே உரைக்குதே ! அதான் தண்ணிய குடிக்கிறான் .இதுக்குப் போயி ...


எலேய் ... பேசாம சாப்புடுறா. சும்மா நசநசனுக்கிட்டு ...


வாடா தம்பி. எப்ப வந்த ?  மதுரயிலதான் இருக்கியா ?


ஆமா சித்தப்பா. 


சாப்புடுப்பா.


நீங்கலாம் சாப்புட்டபிறகு , இருந்தா சாப்புடுவம்பா.


அட கோட்டிக்காரப் பயல.அங்ன போயிப் பாரு. ஒலப்பாய விரிச்சு சோறு மழ மாதிரி குமிச்சு இருக்கறத.நம்ம ஊர்த்திருவிழாவுல எத்தன கெடா வெட்டி சோறு போடுறோம். இல்லாமப் போகுமா சோறு ? 


நாஞ்சும்மா சொன்னே சித்தப்பா. சாப்புடுறேன்.


எலே ... வாளில என்னடா ?


உனக்கு என்ன வேணும் ? 


எலும்ப போடுடா.


அப்படிக் கேளு.போடுறேன்.


கூட்டத்தில அப்டி கேக்கப்புடாதுடா. நாள பின்ன எலும்பெல்லாம் நானே தின்னேனு சொல்றதுக்கா ? சரி சரி , கொஞ்சம் அரிச்சுப் போடுறா.


போதுமா ?  


இப்ப போதும்.பிறகு கூப்டுதேன் வா. 


ஏப்பா ... இதென்னா வயிறா ?  கம்மா விருவுக்குள்ள தண்ணி போற மாதிரி போய்க்கிட்டே இருக்கு.


தம்பி கண்ணு வைக்காதே ! பெறகு ஓன் தடத்து மண்ணத்தான் சுத்திப் போடணும்.கேள்வி கேட்டவனை மடக்கினான் பொன்னையா.


ஒரு எலும்பெடுத்து , இலையில் ஒரு தட்டு தட்டி வாயில் வச்சு , தம்பிடிச்சு உள்ளிழுத்து , இப்டித்தான்டா எலும்ப உறியணும்னு மகனுக்கு சொன்னான்.


மகன் தலயாட்டிக் கொண்டிருந்தான் பலியாடாக. 


எலும்புகளை உறிஞ்சு ஓரங்கட்டிவிட்டு ,  எலே மாப்ள அந்த வாளில என்னடா என்றான் பொன்னையா.


மு.மகேந்திர பாபு.

Post a Comment

0 Comments