திரு.சகாயம் ஐ.ஏ.எஸ். அவர்களின் பாராட்டு


 

பிரமாதம்

------------


"இலஞ்சம் தவிர்த்து நெஞ்சம் நிமிர்த்து "  என்ற வாசகத்தைப் பார்த்துக் கொண்டே , முதன்முதலாக மதுரை மாவட்ட ஆட்சியரின் அறைக்குள் மனுக்களோடு வரிசையில் நின்றவர்களின் பின்னால் நானும் , எங்கள் இளமனூர் மாணவர் விடுதிப் பணியாளர் பால்பாண்டி அண்ணன் அவர்களும் ஆட்சியர் திரு.சகாயம் இ.ஆ.ப.அவர்களைச் சந்திக்க நின்றுகொண்டிருந்தோம்.


தங்கள் கோரிக்கைகளை ஒவ்வொருவரும் கூற , உடனடியாக நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுக்கொண்டிருந்தார்.என்முறை வந்தது.


உங்களுக்கு என்ன வேண்டும் ?


அய்யா , நான் இளமனூர் விடுதியின் காப்பாளர் என அறிமுகப் படுத்திக்கொண்டு , கையில் வைத்திருந்த விடுதிச் செயல்பாடுகள் அடங்கிய நாளிதழ் தொகுப்பினை அவரிடம் காட்டினேன்.புரட்டிப்பார்த்தவாறே ,நான் என்ன செய்யவேண்டும் ? என்றார்.


அய்யா , நாளை நீங்கள் எங்கள் விடுதிக்கு அருகிலுள்ள அன்னை சத்யா நகர் கிராமத்திற்கு வருவதாக கேள்விப்பட்டோம்.அங்கிருந்து எங்கள் விடுதி ஒருகிலோமீட்டர். அந்த விழாவினை முடித்துவிட்டு எங்கள் விடுதிக்கு வந்து மரக்கன்றுகள் நட்டுவைத்தால் நாங்கள் மிகவும் மகிழ்வோம் அய்யா என்றேன்.


அப்படியா ? நாளைய சூழல் எப்படி அமைகிறதெனப் பார்க்கலாம் எனக்கூறி , நாளிதழ் தொகுப்பினைப் பார்த்துப் பாராட்டினார்.


மறுநாள் மரக்கன்றுகளோடு மனம் பறக்க  மகிழ்வோடு அவர் வருகையை எதிர்பார்த்துக் காத்திருந்தோம்.


அன்னை சத்யா நகரில் பார்வைத் திறனற்ற நண்பர்களுக்கு ,ஒரு தொண்டு நிறுவனம் மூலம் கட்டப்பட்டிருந்த புதிய வீடுகளைத் திறந்து வைத்து அருமையான உரை ஒன்றினை நிகழ்த்தினார்.விழா நிறைவு பெற்றது.தனது வாகனத்தில் அமர்ந்து விட்டார்.


அய்யா , நான் இளமனூர் விடுதிக் காப்பாளர்.நேற்றுத் தங்களிடம் எங்கள் விடுதியில் மரக்கன்று நடுவதற்காக  வந்து பார்த்தோம் என்றேன். ஆமாம் நினைவு இருக்கிறது.ஆனால் , இப்போது வர நேரமில்லையே !


அய்யா , ஒரு ஐந்து நிமிடங்கள் ஒதுக்கித் தாருங்கள்.இங்கிருந்து ஒரு கிலோமீட்டர்தான் எனச்சொல்ல , எனக்கு ஐந்து நிமிடங்கள் காணாது ,அரைமணி நேரம் வேண்டும்.இப்போது , வங்கிப் பணியாளர்கள் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள ஒப்புக்கொண்டு விட்டேன்.அடுத்த முறை அவசியம் வருகிறேன் எனச்சொல்லிச் சென்றுவிட்டார்.சற்று ஏமாற்றமாக இருந்தாலும் , அடுத்துச் சந்திப்போம் என பணியாளர்களிடம் சொல்லிவிட்டேன்.


எங்கள் விடுதியில் புதிதாக ஆரம்பித்த " பசுமைக் கிராமம் " என்ற திட்டம் பற்றி நேர்காணல் செய்ய , தினத்தந்தி நாளிதழின் மூத்த நிருபர் திரு.செந்தில் குமார் அவர்கள் வந்திருந்தார்.விடுதியில் செயல்பட்டு வரும் பசுமைக்கான திட்டங்கள் பற்றி விளக்கிக் கொண்டிருந்தேன்.


அப்போது ,விடுதிப் பணியாளர் திரு.பால்பாண்டி அண்ணன் என்னிடம் ,  அண்ணே , கலெக்டர் அய்யா சௌந்திர பாண்டியன் நகருக்கு சாட்டையடி மக்களைச் சந்திக்க வந்திருக்காரு.கூப்பிடலாமா ? என்றார்.


அவருக்கு நேரம் கிடைக்கும் எனச்சொல்ல முடியாது.அவர் வந்தால் மகிழ்ச்சிதான் எனச்சொன்னேன்.ஒரு பத்து நிமிடத்தில் அரசு வாகனங்கள் அணிவகுத்து எங்கள் பள்ளிக்குள் வந்தன.ஒரு ஐந்து நிமிடம் பள்ளி ஆய்வுக் கட்டிடத்தைப் ( லேப் ) பார்த்துவிட்டு , விடுதியின் முன் வந்து நின்றது கார்.


எங்களது மாவட்ட நல அலுவலர் , சார் இந்த விடுதி எங்கள் துறையின் சிறந்த விடுதி.காப்பாளர்  கடந்த சுதந்திர தினத்தன்று தங்களிடம் விருது பெற்றவர் என அறிமுகம் செய்துவைத்தார்.


வணக்கம் அய்யா.

நீங்கதான் இங்க காப்பாளரா ?

ஆம் அய்யா.ஏற்கனவே தங்களை சிலமுறை சந்தித்துப் பேசியுள்ளேன்.


ஆம்.நினைவிருக்கிறது.மரக்கன்று நட கூப்பிட்டிருந்தீங்க என்றார்.ஆம் என்றேன்.


விடுதி முகப்பில் , " இப்படிக்கு மரம் " என்ற தலைப்பில் ,  மரம் பேசுவதாக ஒரு கவிதை எழுதி , பேனரில் தொங்கவிட்டிருந்தோம்.


கவிதை முழுவதும் படித்துவிட்டு , " பிரமாதம் " என்றார். மாணவர் குழுக்கள் , முன்னாள் மாணவர் சங்கம் ,  திரு.அப்துல்கலாம் அவர்களின் பத்து உறுதிமொழிகள் என பேனர்களில் இருந்தவற்றைப் பார்த்து மகிழ்ந்தார்.


விடுதிக்குள் வந்தார்.குறள்களும், பாடல்களும் , தலைவர்களின் படங்களுமென விடுதிச் சுவர்களின் அணிவகுப்பு கண்டு மகிழ்ந்தார்.


அய்யா ,  இங்கே ' அண்ணல் அம்பேத்கர் மாணவர் நூலகம் ' ஒன்றினை உருவாக்கியுள்ளோம் எனக்கூறி ,நூலக அறைக்கு அழைத்துச் சென்றேன்.


எப்படி உருவாக்கினீர்கள் ?


நன்கொடையாளர்களிடமிருந்து புத்தகங்கள, இருக்கைகள் , அலமாரிகள் பெற்றோம்.சுமார் ஆயிரம் புத்தகங்கள் உள்ளன என்றேன்.


அப்படியா ?  பிரமாதம் என்றார்.


உணவு அறையைப் பார்வையிட்டார். மாணவர்கள் சாப்பிட்டாங்களா ? 

ஆம் அய்யா.

சாப்பிட்டதற்கான சுவடே இல்லையே ! சுத்தமாக இருக்கிறதே என்றார். எப்பொழுதும் இப்படித்தான் அய்யா  என்றேன். பிரமாதம் என்றார். காப்பாளர் அறைக்கு வந்தார். அங்கிருந்த படங்களும் , எனது சிறுவர் பாடல்களும் , பச்சை வண்ணமும் அவரை மகிழ்ச்சிப் படுத்தியது.


விடுதியில் செயல்படும் பசுமைத் திட்டங்கள் பற்றிக் கூறி ,விடுதி வளாகத்திலுள்ள சுமார்  400 செடிகள் , மூலிகைகள் , மரக்கன்றுகள் பற்றிக் கூறினேன்.


இதென்ன செடி , என மூலிகைச் செடிகளைப் பற்றிக் கேட்டார்.இந்த கற்றாழை இந்த மண்ணில் வளர்கிறதா ?  என்றார். பதில் சொல்லச் சொல்ல பிரமாதம் என்றார். 


எங்கள் அலுவலரிடம் ,  அனைத்து விடுதிக் காப்பாளர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பி , இந்த விடுதியை முன்மாதிரியாகக் கொண்டு செயல்படச் சொல்லுங்கள் என்றார். எல்லா அரசுப் பள்ளிகளும் , நிறுவனங்களும் இந்த விடுதிபோல் பசுமையாக இருக்க வேண்டும் என அவர் சொன்னது , மறுநாள்   THE HINDU  நாளிதழில் செய்தியாக வந்தது.


என் ஆசிரியப் பணியில் நான் மகிழ்ந்த ,  நெகிழ்ந்த தருணம் அது.


15 -08 -11 அன்று எனது விடுதிக்காப்பாளர் பணிக்காக விருது பெற்ற விலை மதிப்பற்ற தருணம்.


நன்றி.


மு.மகேந்திர பாபு.

Post a Comment

0 Comments