அப்பா 2

 


தவமாய் தவமிருந்து ...ஒவ்வொரு தடவையும் ஊருக்குப் போகும்போது , நான் பஸ்சிலிருந்து இறங்குமுன் எனக்காக அப்பா டிவிஎஸ்50 யில் காத்திருப்பார் முத்துலாபுரம் பாலத்தில். எங்கூர்ல டிவிஎஸ் பிப்டி வாங்குன முதல் ஆளு எங்கப்பாதான்.


வண்டியில போற அந்த ஏழு கிலோமீட்டர் தூரத்தில நிறைய பேசிக்கொண்டே போவோம். எங்கள் பேச்சிற்கு தடையின்றி வண்டியும் மிகமெதுவாகவே போகும். ரோட்ல தமிழ் எண்கள் , எழுத்துகள் போலெல்லாம் குழிகள் இருக்கும்.


ஒரு தடவ கூடப்போகும் போது ஐம்பெருங்காப்பியங்கள்ல குண்டலகேசி பத்தி உனக்குத் தெரியுமா ? ஏன் அந்தப் பேரு வந்துச்சு சொல்லு பாப்பம்னார்.

எனக்கு கொஞ்சம்தான் தெரியும்னு சொல்லி சமாளித்தேன். ஆனால் எனக்கு அப்போது குண்டலகேசி பத்தித் தெரியாது.


மறுநாளே NCBH சென்று ஐம்பெருங்காப்பியங்கள் புத்தகம் வாங்கிப் படித்தேன். எங்கப்பா படிச்ச பள்ளிக்கூடத்திலதான் நானும் படிச்சேன். 20 வருசம் கழிச்சு இலக்கிய மன்ற விழாவுக்கு சிறப்பு விருந்தினரா நான் பேசப்போனப்போ , பழைய மாணவர் என்ற  முறையில் அப்பாவையும் கூட்டிப்போனேன். 


ஒருசில நிமிடங்கள் பேசுவார் என அப்பாவை பேசக்கூப்பிட , இராமாயணத்திலிருந்து ' குகப்படலத்தில் ' சில பாடல்களை அள்ளித் தெளித்துக் கொண்டிருந்தார். நான் அரண்டும் , ஆச்சர்யப்பட்டும் போனேன். 


அடுத்து நான் பேசும்போது அப்பாவிற்கு வயது 67 ஆகிறது . இன்றும் அவரது நினைவாற்றல் என்னை வியக்க வைக்கிறது எனச் சொல்லி முடிப்பதற்குள் , 


பொறுடா ! எனக்கு வயசு 71 என்றார். இன்றும் சோடாப்பாட்டில் மூடியை தன் பல்லாலே கடித்து திறந்து விடுவார். வயசாயிருச்சில்லபா , என்கூட மதுரக்கி வந்திருங்களேன் எனச் சொன்ன போது , உழைக்கிற காலத்தில ஓங்கூட வந்துட்டா ? எனச் சொல்லி மேற்கொண்டு பேச விடமாட்டார். 


அப்பா நல்ல பேச்சாளர் , ஓவியர் , மருத்துவர் என பல்துறை வித்தகர். தவமாய் தவமிருந்து பெற வேண்டியது பிள்ளைகளை மட்டுமல்ல. பெற்றோர்களையும்தான். என்ன நான் சொல்றது ?


மு.மகேந்திர பாபு.

29 - 12 - 17.

Post a Comment

0 Comments