மழ.
ஊருக்குள்ள ஒரு சுடுகுஞ்சியும் இல்ல. மழன்னா மழ ... அப்படியொரு மழ.தென்மேற்கு மூலயில மழ பேஞ்சா அதாவது எட்டயாபுரத்தில மழ பேஞ்சா எங்க ஊர்க் ( பென்னையா புரம் ) கம்மா நெறஞ்சிரும்.
அப்டிதான் இன்னிக்கு மழ பேஞ்சது. சிறுசு , பெருசு எல்லாம் கம்மாயப் பாக்கப் போகுது.ஊரே வெறிச்னு கெடக்கு.
வேலித்தூர்ல கோழியும் குஞ்சுகளும் பம்முதுக. ரெக்கய கொட மாதிரி வளச்சு தாய்க்கோழி அரவணைக்குது.
ஓட்டுத்தண்ணி வீதிவர , அந்தத்தண்ணில சேமியா நனைஞ்சு உப்பலாகி நீந்திவந்தா எப்படி இருக்குமோ அப்படி நீள நீளமா மண்புழு நெளிஞ்சு வளஞ்சு வருது.
வேப்ப மரத்துகிட்ட ஆள் வரும்போது கொப்ப ஆட்டி சடசடனு இலைத்தண்ணிய விழுகவச்சு வேடிக்க காட்டுது எளவட்டக் கூட்டம்.
ஏ ... கரையேறும் போது பாத்து ஏறுங்கப்பா. நல்லா வழுக்குது. கால் கட்டை விரல நல்லா அழுத்தி மிதிச்சு ஏறுங்க. இல்லாட்டி வழுக்கி விழுந்து பிட்டாணி தெரிச்சுறப் போகுது என சிரித்துக்கொண்டே சம்முகம் மாமா சொன்னார்.
எட்டயபுரம் , ராசாப்பட்டி , நம்பியாரம் கடந்து மழத்தண்ணி எட்டுக்கண் பாலத்தில சலசலனு அடிச்சு ஓடி வருது. ஓடையில கெடந்த முள்ள கவைகவையாச் சுருட்டி, தார்ப்பாயச் சுருட்ற மாதிரி சுருட்டிக் கொண்டு வந்து எட்டுக்கண் பாலத்தில அடைக்குது. இதனால பாலத்த முக்கி மேல நுரைநுரையா ஆர்ப்பரிச்சு ஓடுது தண்ணி.
நாங்க நாலஞ்சு பேர் கம்மா தலயில நிக்கோம். அதாவது கம்மாக்குள்ள வர்ற மொத தண்ணிய யாரு பாக்குறதுனு ஒரு போட்டி.
விப்பு , விருசல் எல்லாத்தையும் நெரப்பி கம்மாகுள்ள கால் வைக்குது தண்ணி. கும்மாளம் , ஆர்ப்பாட்டம் , ஆர்ப்பரிப்பு , சன்ன சத்தம்னு கம்மாவே சத்தத்தில வெடிச்சு சிதறுது.
விப்புக்குள்ள இதுநா வர குடியிருந்த பூரானும் , சேடானும் பூச்சிகளும் கதிகலங்கி ஓடுதுக.
இதமாரி இன்னு ஒரு மழ. தாயோளி அடிச்சு ஊத்துச்சுன்னா ரெண்டு போகம் எடுத்திரலாம் ... ஊர்ப்பெருசு சந்தோசத்தில சொல்றாரு.
எலேய் ... எள வட்டங்களா ? எட்டு மடையும் கிச்சுனு இருக்கனும்டா. தேவையில்லாம மடய ஒரு பயலும் தெறக்கப்படாது. தண்ணிய சிக்கனமா பாச்சி வெள்ளாமய வூடு கொண்டாந்து சேக்கனும்.
சரிங்கப்பு. நாங்க பாத்துக்கிறோம். ரெண்டாமடதான் கொஞ்சம் கசிவு இருந்துச்சு. அதயும் களிமண்ண உருட்டி கிச்சுனு அடச்சிப் புடுவோம்.
ஆமாப்பா.கொஞ்சம் பாத்துக்கோங்க.
கரயெங்கும் மனுச தலகள். அது வியர்வ சிந்தி உழைப்பை மட்டுமே கொடுக்கும் மருதநிலத் தலகள்.
மு.மகேந்திர பாபு.
0 Comments