காக்கைக் காலம் - ஆடி மாதத்தில் காகம் விருந்தினர் / Kavithai kaakkai kaalam - Aadi kavithai

 


*~காக்கைக்காலம்* 

ஆறுமாதக் குழவி

ஆறாப் பசியில் கதறினாலும்....

பதறாமல் படப்பில் பறிமாறப்பட்டது

 சைவத் தாத்தாவிற்கு

சைவப்படையல்.


அசைவப் பாட்டிக்கு

ஆட்டுக்கறி படையல்.

ஆசாமிக்குப் பிடித்த 

ஆரஞ்சு வண்ணப் புடவை....

 சாமியாய் மாறிய மாமியாருக்கு...


குண்டுக் கணவர் அளவிற்கு 

அழகான வேட்டி சட்டை 

எலும்புத்தோல் மாமனாருக்கு.....


தேங்காய் உடைக்கப்பட்டு

ஆடிமாதக் கடமை முடிந்தது .

தாத்தா பாட்டிக்கு உணவளிக்கும்நேரம்

சிறப்புவிருந்தினராக

காக்கை.....

செண்டைமேளச் சத்த வரவேற்பாக 

ஒருமித்த குரலில் குடும்பமே

 வரவேற்கிறது சிறப்பு விருந்தினரை 

காக்க்க்கா....காக்காக்காக்காக்கா..க்காக்கா....

ஓரிரு நிமிடங்களில் விருந்தினர் வருகை


படப்பைப் பார்வையிடுகிறார்..

தன் சுற்றத்தை அழைத்துக் 

காத்திருந்த தருணம்.


அம்மாவின் குரல்

'எச்சில் படாததுதான் சாப்பிடுங்க அத்தை'.....

மொழியறியாக் காக்கையின் 

நினைவில்  வந்துபோகிறது

முந்தைய நாள் 

குழந்தையின் உணவில் 

இறுதிக் கவளம் தலைச்சுற்றி 

தாயின் துப்பல்களோடு 

தூக்கியெறியப் பட்ட உணவு.....


யானைக்கு ஒரு காலம் 

 பூனைக்கும் ஒரு காலம் 

ஆடிமாதங்களில் 

ஆன்மாவாய் மாறும் காக்கைக்கும் உண்டு

காக்கைக்காலம்......

🐦‍⬛🐦‍⬛🐦‍⬛

 ம.தன்சியா

தமிழாசிரியர்,

நகரவைப் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, பொள்ளாச்சி

Post a Comment

0 Comments