*பாவேந்தரிடம் ஒரு வினா*
இல்லத்தரசிக்காய்
இனிமையாய்ப் படைத்து
ஒளிரச் செய்தீர்
குடும்ப விளக்கை !
பெண்மையின் திண்மையை
காதலும் வீரமும் இணைத்தே
உரைத்தீர் அமுத ஊற்றாய்
அமுதவல்லியை !
உதாரனனின் உள்ளத்தரசியை
புரட்சிக்கவியில் !
இன்னலை இயல்பாய்
சுமைகளைச் சுகமாய் ஏற்பவளாய்
இல்லம் ஒரு கண்ணாக
இமைத்திடாமல் பணி செய்யும்
பணியிடம் ஒரு கண்ணாக
'இல்லத்தரசி' பதவியை
இராஜினாமா செய்தவளாய்
புண்கள் பலபட்டாலும்
புன்முறுவல் பூத்தவளாய்
பாரெங்கும் நடமாடும்
பணிப்பாவைகளை
மறந்தது ஏனோ?
கணவருக்குப் பிடித்த அவியல்
குறும்புக் குழந்தைக்குப்
பிடித்த பொரியல்
குடும்பத்தாரின் நாவிற்கேட்ப
அறுசுவையும் நயமாய் சமைத்து ,
ஆடைகளைத் துவைத்து ,
காலைச் சிற்றுண்டி தவிர்த்து ,
கடகடவெனப் புறப்பட்டு
கண்ணாய் என்னும்
பணிக்குச் செல்லும்
பணிப்பாவைகளை
மறந்தது ஏனோ?
பணி என்றால் என்ன சொல்வது ?
கல்லுடைப்பது முதல்
நாடாளுவது வரை!
அனைத்திலும்
எத்தனை சகுனிகள்
எத்தனை கூனிகள்
துரியோதனர்கள்
நரகாசூரன்கள்
ஐயகோ அடுக்கிக் கொண்டே
போகலாம்....
தன் கொஞ்சும் மழலையின் முகம் மறந்து
தாய்நாட்டுக்காய் இராணுவத்திலும்.....
ஏன் மறந்தீர் பணிப்பாவைகளை?
அந்த மூன்று நாட்களிலும்
எந்த வலியையும்
காட்டிக் கொள்ளாது
இடுப்பு வலியை
இயல்பாய்த் தாங்கி
கர்ப்ப காலத்திலும்
கால நேரம் பாராது உழைக்கும்
பணிப்பாவைகளை ஏன் மறந்தீர்
பாவேந்தரே ?
திரும்பி வாருங்கள் !
திருத்தி எழுதுங்கள் !
குடும்ப விளக்காய் மட்டுமல்ல
மகரஜோதிகளாய் ஒளிரச் செய்யுங்கள்
பணிப்பாவைகளை !
கவிஞர்.ம.தன்சியா,
தமிழாசிரியர்,
நகரவை பெண்கள் மேல்நிலைப்பள்ளி,
பொள்ளாச்சி
2 Comments
அருமை அம்மா...🤩🤩🤩👏👏👏
ReplyDeleteVera level Amma🤩🤩🤩
ReplyDelete