தமிழ்நாடு நாள் உருவானது எப்படி ? ஜூலை 18 / TAMILNADU DAY - JULY 18 - SPECIAL ESSAY

 

          தமிழ் நாடு நாள்

              18 . 07 . 2023

 "கருவியும் காலமும் செய்கையும் செய்யும்

அருவினையும் மாண்டது அமைச்சு 

          (  குறள் - 361 )

ஒரு செயலைச் செய்வதற்கு வேண்டிய தகுந்த கருவியும்,உகந்த நேரமும்,செய்யவேண்டிய செயலும்,செயல்பட வேண்டிய முறையும் உடையதே நிர்வாகம்.என்னும் வள்ளுவப் பெருந்தகையின் எண்ணத்திற்கு ஏற்ப தகுந்த வடிவமாக, விளக்கமாக செயல்பட்டு தாயகம் தலைநிமிரச் செய்தார் பேரறிஞர் அண்ணா அவர்கள்.அண்ணாவும்,அவரது ஊக்கமும்,உழைப்பும்,அஞ்சாமையும், உறுதியும்,ஆளுமையும் தமிழ் உள்ள வரை தனிச்சிறப்புற்றிருக்கும் என்பது திண்ணம்.


1947- இந்திய விடுதலைக்கு முன்னும்,பின்னும் மொழிவாரி மாகாண பிரச்சனைகள் தொடர்ந்த வண்ணமே இருந்தது.

மெட்ராஸ் மாகாணத்தில் இருந்த 

ஐதராபாத், திருவித்தாங்கூர், பெல்லாரி போன்றவை ஆந்திரா,கேரளா,கர்நாடகம் போன்றவற்றுடன் இணைந்தன.பெருவாரியாக மொழிப்பேசும் மக்கள் வாழும் பகுதி அம்மொழிப்பேசும் மொழிவாரி மாகாணமாகக் கொள்ளப்ப்டது.ஐதராபாத்,திருவித்தாங்கூர், பெல்லாரி போன்றவை பிரிந்து சென்ற பிறகு சென்னை மாகாணம் என்ற பெயரை  தமிழ் நாடு என மாற்றக் கோரினர்.தமிழ் நாடு என்ற பெயரை சூட்டக் கோரி விடுதலைப் போராட்ட வீரர் சங்கரலிங்கனார் 1957- ஆம் ஆண்டு சாகும் வரை உண்ணாவிரதம் இருந்தார்.மா.போ.சி, அண்ணா, கக்கன் போன்றோர் உண்ணாவிரதத்தைக் கைவிடச் சொல்லியும் கைவிடவில்லை. இறுதியில் 76- நாட்கள் தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்து இறந்தார். இதனைத் தொடர்ந்து 1962 ஆம் ஆண்டு பெயர் மாற்றக் கோரி போராட்டம் தீவிரம் அடைந்தது. அதனைத் தொடர்ந்து தீர்மானம் இயற்றப்பட்டு,பின்பு அவை நிராகரிக்கப் பட்டது.


அறிஞர் அண்ணாவின் சாதுர்யப் பேச்சு:


         1962- ஆம் ஆண்டு இக்கோரிக்கையை வலியுறுத்தி நாடாளும‌ன்றத்தில் பேசிய பேரறிஞர் அண்ணாவிடம் "தமிழ் நாடு என்ற பெயர் மாற்றத்தால் என்ன சாதித்து விடப் போகிறீர்கள் ? என்ற கேள்வி எழுப்பப்பட்டது ."  Lower House - என்பதை லோக் சபா என்றும் Upper House - என்பதை இராஜ்ஜிய சபா என்றும் மாற்றி விட்டதால் நீங்கள் என்ன சாதித்தீர்களோ அதைத் தான் நாங்கள் சாதிக்கப் போகிறோம் என்று பதில் அளித்தார்.


               அறிஞர் அண்ணாவின் இந்த கோரிக்கைக்கு மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்த கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி யான பூபேஷ் குப்தா ஆதரவு அளித்தார்.ஆனாலும் இந்த கோரிக்கை அன்றைய அரசால் ஏற்கப்பட்டவில்லை என்பது வேதனைக்குரியது.


தொடர்ந்த போராட்டம்:

                     1964- ஆம் ஆண்டு தமிழ்நாடு பெயர் மாற்றத் தீர்மானத்தை சட்டச்சபையில் திமுக எம்.எல் ஏக்கள் கொண்டு வந்தனர்.இருப்பினும் இக்கோரிக்கையை காங்கிரஸ் கண்டுக்கொள்ளவில்லை. தமிழ்நாடு என்ற பெயர் மாற்றம் கோரி திமுக கொண்டுவந்த தீர்மானம் நிராகரிக்கப்பட்டது.


         1967- ஆம் ஆண்டு பேரறிஞர் அண்ணா தலைமையில் ஆட்சி அமைந்தது.அப்போதைய முதலமைச்சரான பேரறிஞர் அண்ணா அவர்கள் 1967- ஆண்டு ஜுலை 18- ஆம் நாள் சென்னை மாகாணத்தின் பெயர் " தமிழ்நாடு" என்று மாற்றிச் சாதனைப் படைத்தார்.எனவே ஜுலை 18- ஆம் நாள் தமிழ்நாடு நாள் என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.அதன்படி 2022- ஆண்டு முதல் ஜுலை 18- ஆம் நாள் தமிழ்நாடு நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது.

அத்திருநாளைப் போற்றி வணங்குவோமாக!

Post a Comment

0 Comments