கவிதைப் பூங்கா - சுற்றுச்சூழல் கவிதை - ஜூன் 5 உலகச் சுற்றுச் சூழல் தினம் / JUNE 5 WORLD ENVIRONMENT DAY KAVITHAI

 

கவிதைப் பூங்கா 

சுற்றுச்சூழல் கவிதை 

*அஞ்சிலே அடக்கம்*

அஞ்சிலே அடக்கம்

அகிலமெல்லாம்!


அஞ்சிலே ஒன்றைத் தாவினான்

அஞ்சனைப் புதல்வன்

அன்று!

அழைக்கிறேன் அவனை

அதே செயலுக்கு !

வாயுபுத்திரனாயினும்

வாயடைத்து நிற்பான்

கடல்மட்ட உயர்வைக் கண்டு இன்று......


மணாளனின் உயிர்க்கு 

மதுரையைத் தீக்கிரையாக்கிய

பத்தினியை அழைக்கிறேன்,

தீயால் தூய்மையடைந்தது மதுரை அன்று!

இன்றோ

நெருப்பும் தோற்கிறது நெகிழியிடம் ....

கண்ணகியை அழைக்கிறேன்

நெகிழியை அழிக்கும் சக்தியை

நெருப்பிற்கல்ல மனித மனங்களுக்கு அளிக்க! 

 

அன்று, திருமால்,

அழியும் பூமியைக் காக்க

அவதாரம் எடுத்தார் 

வராகமாக...

பூமாதேவிக்குப் பூவும் சூட்டினார் மணாளனாக...

இன்று 

அழைக்கிறேன் ஆழியானை ! 

மனமற்று மடமான மனிதனால் 

நஞ்சு உரத்தால்

மலடாகிக் கொண்டிருக்கும் 

மண்மாதாவைக் காக்க !

மாலும் மயங்கித்தான் போவார் 

மலட்டுத் தன்மை வீரியம் அறிந்தால்! 


தேவர்களுக்கும் மூச்சுத் திணறல்

ஓசோனின் ஓட்டை அதிகரிப்பால் !

வான்மண்டல கிரகங்களே

தன்னிலை மறந்த மாற்றுப் பாதையில்! 

அமிர்தம் கடைந்து அகிலம் காக்க தேவர்களை அழைக்கிறேன்!


தூய காற்றைச் சுவாசிக்க 

ஆக்ஸிஜன் சிலிண்டர் தேடி அழைக்கிறார் 

வாயுபகவான்!


அஞ்சிலே அடக்கம் அகிலமெல்லாம்! 


மறைந்திருக்கும் வலிமைகளை 

அழைக்க மனமில்லை 

மனமுவந்து அழைக்கிறேன் மகாசக்தியை !

ஆம் மானுடசக்தியை !

மானுடமே மனம் திருந்தி வா !

இனியொரு விதி செய்வோம் !

இயற்கையைக் காப்போம்!

அஞ்சிலே அடக்கம் அகிலமெல்லாம்!

இனியொரு விதி செய்வோம் 

இயற்கையைக் காப்போம்!


 கவிஞர்.ம.தன்சியா , 

முதுகலைத்தமிழாசிரியர் ,

நகரவை(பெ)மேல்நிலைப்பள்ளி,

பொள்ளாச்சி.

Post a Comment

1 Comments

  1. அருமை அம்மா...❤️❤️❤️🔥🔥🔥

    ReplyDelete