குழந்தைகள் தினம் - நவம்பர் 14 - நேரு பிறந்தநாள் - சிறப்புக்கட்டுரை / NOVEMBER 14 CHILDRENS DAY - NEHRU BIRTH DAY


   குழந்தைகள் தினம் - சிறப்புக் கட்டுரை

                           14 • 11 • 2022

      

வெள்ளைச் சிரிப்பில் கொள்ளைக் கொள்ளும் ,கிள்ளைகளை போற்றும் வகையில் உலகம் முழுவதும் நவம்பர் 20- ஆம் நாள் சர்வதேச குழந்தைகள் தினமாக கொண்டாடப்   படுகிறது. இந்தியாவில் மட்டும் ,குழந்தைகள் மீது அதீத அன்பும்,அக்கறையும் கொண்ட தலைவர் ஜவஹர்லால் நேரு. எனவே அவரைப் போற்றும் வகையில் அவரது பிறந்த நாளான நவம்பர் 14- ஆம் நாள் குழந்தைகள் தினமாக கொண்டாடப்படுகிறது.

                             அந்நிய ஆட்சியால் அடிமைப்பட்டு,சிக்கி சிதறுண்டு   சோர்வும்,இயலாமையும் நசுக்க, அயர்ந்து உறக்க நிலையில் களைத்த சமூகத்தை, தன் எழுச்சியால் தட்டியெழுப்பிய உன்னத சக்திகள் பலவுள் தனிப்பெரும் சக்தியாக உச்சம் தொட்டு,உலகை விஞ்சும் வல்லரசாக வழிக்காண பாதை அமைத்த மேதை, மனிதருள் மாணிக்கம்,ஜவஹர்லால் நேரு .சுதந்திரம் பெற்று சுத்தமான பாரதத்தை பார் வியக்க பண்படுத்தி ,தான் ஆளுகின்ற சிங்காதனத்தை அழகுறச் செய்தவர் நேரு.பாரத தேசமெங்கும் இவரது நினைவுகள் பல சக்திகளாக ,சாதனைகளாக மிளிர்ந்துக் கொண்டிருக்கிறது.வருங்காலத் தூண்களாம் இந்திய அரும்புகளின் இனிய உறைவிடமாகத் திகழ்கிறார். மழலைகளிடம் பாசம் வீசி நேசக்கரம் தொடுத்து ஆக்கம் பலக் காண ஊக்கம் தந்தவர்.

தனது சிந்தனை உளியைக் கொண்டு சிறந்த தேசத்தை செதுக்கிய யுகச்சிற்பி.இவரது பிறந்த நாளே குழந்தைகள் தினமாகக் கொண்டாடப்படுகிறது. எதிர் காலத்தை வடிவமைத்து ஆளப்போகும் குழந்தைகளைக் கொண்டாடி மகிழும் விதமாக இத்தினம் கொண்டாடப்ப டுகிறது.பாரத தேசமெங்கும் ஆண்டுதோறும் இத்தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

            1889 - நவம்பர் - 14 - ஆம் நாள் உத்தரப்பிரதேசத்தின் அலகாபாத்தில் மோதிலால் நேரு - சொரூப ராணி ஆகியோரின் அழகிய குடும்பத்தில் அதிசயப் பேரொளியாக, இந்தியாவின் விடிவெள்ளி உதயமாகியது. அந்த நாளே குழந்தைகளை நேசித்த ஒரு உன்னத குழந்தை ஜவஹர் லால் நேரு பிறந்த தினம்.இது சிறப்புமிக்க நாளாக கொண்டாடப் படுகிறது.மோதிலால் நேரு - சொரூபராணி இணையரின் முதல் குழந்தையாக நேரு பிறந்தார். பிறப்பிலேயே செல்வந்தரான அக்குழந்தை , இந்தியக் குழந்தைகளை நேசிக்கவும்,அவர்களின் வளமான வாழ்விற்கு வகுத்ததிட்டங்கள் மிகப்பல. நேருவுக்கு இந்தி, சமஸ்கிருதம் போன்ற மொழிகளும், இந்தியக் கலைகளும் கற்பிக்கப் பட்டு , செம்மை படுத்தப்பட்டார்.நேருவின் தந்தையான மோதிலால் நேரு இந்தியக் குடிமக்களுக்கு சேவையாற்றிட ,தன் மகன் தகுதி பெற வேண்டிய மகத்தான விருப்தினால், நேருவை   இங்கிலாந்திலுள்ள " ஹாரோவிற்கு " அனுப்பினார். அங்கு பள்ளிப் படிப்பை முடித்த நேரு அவர்கள் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக நுழைவுத் தேர்வினை 1907 - ஆம் ஆண்டில் எழுதி டிரினிட்டி கல்லூரி சென்று இயற்கை அறிவியல் படித்தார்.

      இளம் வயதிலேயே காந்தி அவர்களின் வழிக்காட்டுதலில் காங்கிரஸின் தலைவரானார் நேரு. ஆகஸ்டு-15, 1947- ஆம் ஆண்டு புதுடெல்லியில் சுதந்திர இந்தியாவின் கொடியை ஏற்றும் தனிச் சிறப்புப் பெற்றார் நேரு. இந்திய சுதந்திரத்திற்காக தான் பெற்ற போராட்ட அனுபவங்களையே பெரும் சாதனைகளாக மிளிர ச்செய்தன, இச்சாதனையே முன்னேற்றத்திற்கான காரணமாக விளங்கின. நேருவின் சீரிய சிந்தனைகள் ,கொள்கையாக உருபெற்று இந்திய நாட்டை உலக நாடுகள் உற்று நோக்கும் நிலையை அடைந்தது.இவரது அயல் நாட்டுக் கொள்கை தெளிவாக வகுக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டது. நாட்டின் அனைத்துப் பிரச்சனைகளையும் பிரதமர் திறம்பட தீர்வுகாணலானார். நமது பிரதமரின் "அணிசேராக் கொள்கையும்", "பஞ்சசீலக் கொள்கையும் இந்தியாவின் பெருமையை உச்ச நிலைக்குக் கொண்டு சென்றன என்றால் மிகையல்ல. 

நாட்டின் வறுமையை ஒழிக்கவும், சமதர்மம் காணவும் ,பொருளாதார பிரச்சனையை சீர்செய்யவும் திட்டமிடலையே துணைக்கொண்டு தீர்வாக்கினார். இவற்றைச் செயல்படுத்த திட்டக்குழுவை உருவாக்கினார். இதன்மூலம் முதல் ஐந்தாண்டுத் திட்டத்தை 1951 - ஆம் ஆண்டு தொடங்கினார். இத்திட்டமானது அரசு தொழிற்சாலைகளின் முதலீடு மற்றும் விவசாயத்தை மேம்படுத்துவதற்காக அமைந்தது. மற்றும் தொழில்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்துதல் ,கலப்புப் பொருளாதாரத்தை உருவாக்குதல், அவற்றின் மூலம் மக்கள் பயன்பெற சில நுண்ணிய நுணுக்கமான தொழிற்சாலைகள் தனியாரிடம் செல்வதைத் தடுத்து அரசே நடத்தவும் வழி கண்டார். 


* மேலும் நில மறு பங்கீட்டை முதன்மை படுத்தினார். 

* விவசாயக் கிணறுகள் ,அணைகள் கட்டும் திட்டத்தை அமல்படுத்தினார்.

* பெரிய அணைகள் கட்டியதோடு அல்லாமல் விவசாயம்,நீர்,மின்சாரம் ஆகியவற்றை ஆதரித்து திட்டம் தீட்டினார்.

* அணு ஆற்றலில் இந்திய நாடு சிறந்திட திட்டங்களை செம்மைப்படுத்தினார். 

கல்விக்கான சீர்திருத்தம்:

இந்தியாவின் எதிர்கால முன்னேற்றம் சிறக்க வேண்டுமாயின் ,இந்தியக் குழந்தைகள் மற்றும் இளைஞர்களின் கல்வியை மேம்படுத்தும் அவசியத்தை உணர்ந்தார்.கல்வி வளர்ச்சியில் பெரும் அக்கறை கொண்டிருந்தார்.எனவே உயர் கல்வி நிறுவனங்களை அமைந்து முன்னேற்றப் பாதையைக் கண்டது நாடு. அவற்றில் அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகம் ,இந்திய தொழில் நுட்பக் கழகம் ,இந்திய மேலாண் மைக் கழகங்கள் ,தேசிய தொழில்நுட்ப கழகங்கள் போன்றவை அமைக்கப்பட்டு வளர்ச்சியடைந்தது. இவரது ஐந்தாண்டு திட்டத் தின் மூலம் குழந்தை களுக்குப் பால் மற்றும் மதியஉணவு வழங்கும் திட்டமும்,கட்டாய தொடக்கக் கல்விக்கான உறுதியும் அளிக்கப்பட்டது. இதனால் ஆயிரக்கணக்கான பள்ளிகள் கட்டப்பட்டன.எனினும் இன்றைய நிலையில் குழந்தைத் தொழிலாளர்கள் அதிகமாகக் காணப்படுவது வருத்தத்திற்குரிய செய்தியாக உள்ளது. இன்றைய குழந்தைகள் நாளைய தலைவர்கள் என்பதைக் கருத்தில் கொண்டு ,நாட்டின் எதிர்கால வளர்ச்சி,முன்னேற்றம் காண நெறிக்கண்ட அடிப்படை ஆற்றல்மிக்க சக்திகள் குழந்தைகள்.எனவே வருங்காலம் வளம்காணஜவஹர்லால் நேருவைப் போற்றியும், குழந்தைகளைக் கொண்டாடியும் மகிழ்வோம்.!!

Post a Comment

0 Comments