மூரா எனும் முன்னத்தி ஏர்
சரித்திரம் படைத்த ஜக்கம்பட்டி நாயகன்
' ஆற்றல் ஆசிரியர் ' விருது விழாவில் கவிஞர் மூரா அவர்களின் வாழ்த்துரை.
' படிக்கும் காலம் பொற்காலம்
பண்பை வளர்க்கும் நற்காலம் ' என்பார் கவிஞர் ஆலந்தூர் கோ.மோகனரங்கன் ஐயா அவர்கள். படிக்கும் காலத்தில் என் மனதில் இடம்பிடித்த மாபெரும் பேச்சாளர் கவிஞர் மூரா அவர்கள். அவர் முகம் அறியாத காலத்தில் , பள்ளிப் பருவத்தில் அவர் பேச்சின் மீது கொண்ட பற்று என்பது அளப்பரியது.
பேருந்துப் பயணத்தில் , திருவிழாக்களில் என திரும்பும் திசையெங்கும் பட்டிமன்றம் டேப்ரிகார்டரில் ஒலித்த காலம் அது. பழைய பாடலா ? புதிய பாடலா ? , தாயா ? தாராமா ? , கண்ணதாசானா ? பட்டுக்கோட்டையா ? காதல் பாடல்களா ? தத்துவப்பாடல்களா ? என செவிக்கும் சிந்தைக்கும் விருந்தளித்த காலம். நடுவர் திண்டுக்கல் ஐ.லியோனி அவர்கள். மதுரை ராம்ஜி ஆடியோ கேசட் வெளியீட்டில் பட்டிதொட்டி எங்கும் பட்டையைக் கிளப்பிய காலம் அது.
வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் கேசட் வாங்கி டேப்ரிகார்டரில் போட்டுப்போட்டு ரசித்த காலம் . அதிலும் குறிப்பாக கவிஞர் மூரா அவர்களின் பேச்சினைத் திரும்பத் திரும்ப போட்டுக் கேட்டு ரசித்திருக்கிறேன். இப்படியொரு மாபெரும் ஆளுமையை நாம் பின்னாளில் சந்திப்போம் என அன்று நினைக்கவில்லை.
2003 அல்லது 2004ஆம் ஆண்டாக இருக்கலாம். மதுரை சிம்மக்கல் மாவட்ட மையநூலகத்தில் நடந்த ஒரு விழாவிற்குப் பார்வையாளனாகச் சென்றிருந்தேன். அப்போது வருகை தந்தவர்களிடம் கையொப்பம் வாங்க நோட் ஒன்று அனைவரிடமும் சென்று வந்தது. என்னிடமும் வந்தது. அப்போது எனக்கு முன்பு இருந்த பெயர் கவிஞர் மூரா. எனக்கு அருகில் அமர்ந்திருந்த நண்பரிடம் கவிஞர் மூரா நீங்களா ? எனக்கேட்டார். அவரும் ஆமாம் என்றார்.
எனக்குள் மீண்டும் ஒரு கேள்வி எழுந்தது. சார் , பட்டிமன்றத்தில் பேசுவாரே கவிஞர் மூரா அவரா நீங்கள் என்றேன் வியப்புடன். அவரும் , ஆமாம் நான்தான் கவிஞர் மூரா என்றார்.
மகிழ்வும் வியப்பும் ஒருசேர என் மனதில் ஒட்டிக்கொண்ட தருணம் அது. கும்பிடப் போன சாமி குறுக்கால வந்து நின்ன மாதிரி என்பார்களே ! அந்தத் தருணம் அது.
முதல் சந்திப்பே முத்தாய்ப்பாய் அமைந்தது. பின்னர் அடிக்கடி சந்தித்துப் பேசும் வாய்ப்பு அமைந்தது. எங்களது இளமனூர் அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளியில் இலக்கிய மன்ற விழாவிற்கு அண்ணன் அவர்களை சிறப்பு விருந்தினராக அழைத்தேன். வருகை தந்து விழாவைச் சிரிப்பும் சிந்தனையுமாய்க் கலகலக்க வைத்தார்.
அதன்பின் அண்ணன் - தம்பி என்ற நிலையில் என்மீது அன்பு பாராட்டினார். எனது ஒவ்வொரு செயல்பாட்டையும் ஊக்குவித்தார்.
இந்த ஆண்டு நானும் அன்புத் தம்பி சென்னை கூத்துப்பட்டறையின் நிறுவுநர் இரா.முத்துசாமியும் இணைந்து சிறப்பாகப் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு ' ஆற்றல் ஆசிரியர் ' என்ற பெயரில் விருது வழங்க நினைத்தோம். எங்களது பெரும்புலவர்.திரு.மு.சன்னாசி ஐயா அவர்கள் விருது வழங்க அந்நிகழ்வில் வாழ்த்துரை வழங்க கவிஞர் மூராவை அழைக்கலாம் என எண்ணினேன்.
விழாவிற்கு ஓரிரு நாட்களே இருந்த நிலையில் , அண்ணா , எங்கள் பள்ளியில் செப்டம்பர் 5 அன்று சிறப்பாகப் பணிபுரியும் ஆறு ஆசிரியர்களிக்கு ' ஆற்றல் ஆசிரியர் ' என்ற பெயரில் விருது கொடுக்கலாம் என நினைத்துள்ளேன். தாங்கள் நிகழ்விற்கு வந்து வாழ்த்துரை தந்தால் விழா முழுமை பெற்றதாக நான் உணர்வேன். வர இயலுமா ? ' ்என்றேன்.
தம்பி , நீங்க கூப்பிட்டு நான் வராம இருந்திருக்கிறேனா ? நிச்சயம் வருகிறேன் என்றார். மனதிற்கு மிகவும் மகிழ்வாக இருந்தது. அதுமட்டுமன்று , தம்பி , என்னுடைய பங்களிப்பாக நான் என்ன செய்ய வேண்டும் ? என்றார். அண்ணா நீங்கள் வந்து வாழ்த்தினாலே போதும் என்றேன்.
விழாப்பேருரையாற்ற உள்ள எங்களது தமிழாசான் ஐயா பெரும்புலவர்.திரு.சன்னாசி அவர்களிடம் . கவிஞர் மூரா வாழ்த்துரை வழங்க இசைவு தெரிவித்துள்ளார் ஐயா என்றதும் , ஐயா அவர்கள் மகிழ்ந்து சொன்னார். தம்பி , கவிஞர் மூரா வாழ்த்துரை தருவது ஆகப்பொருத்தம் தம்பி. நாடறிந்த நல்ல பேச்சாளர். அவர் வருவது நிகழ்விற்கு கூடுதல் பெருமை என்றார். மேன்மக்கள் என்றும் மேன்மக்களே !
' ஆற்றல் ஆசிரியர் ' விருது விழா இனிதே தொடங்கி மகிழ்வாக நிறைவுற்றது. எனக்கும் அன்புத் தம்பி முத்துசாமிக்கும் பொன்னாடை அணிவித்துச் சிறப்புச்செய்து வாழ்த்தினார் அண்ணன் கவிஞர்.மூரா அவர்கள்.
பள்ளிப் பருவத்தில் நான் வியந்து நேசித்த ஒரு மாமனிதரை பக்கத்தில் இருந்து பார்த்து இரசிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. எத்தனை பேருக்கு அமையும் இப்படியொரு வாய்ப்பு ?
பசுமைக் கவிஞர்.மு.மகேந்திர பாபு ,
தமிழாசிரியர் , இளமனூர் , மதுரை .
பேச - 97861 41410
***************** *********** *************
0 Comments