உலக புகைப்பட தினம்
World photograph Day
19 • 08 • 2022
கண்ணையும் கருத்தையும் கவர்திடும்
காலச் சரித்திர சித்திரங்கள் !
பண்பட்ட வரலாற்று நிகழ்வுகளை
பதிவிடும் பளிங்கு பிம்பங்கள்!
தேன் சுவைக்கும் வண்டென
தேடியலைந்து ஓடிப்பறந்து
கண்டெடுத்து படைக்கும்
நற்காவியம்!
இயற்கை எழிலை ஏந்தி,ஏந்தி
ஏட்டில் பதிக்கும் ஓவியம்!
விட்டு விலகிய நினைவுகளை
தொட்டுப்பேசும் கண்ணாடிப் பேழைகள்!
வார்த்தைகள் வருணிக்க இயலாத ஒன்றை
வடிவங்களாய் வார்த்தெடுக்கும் கவிதைகள்!
வெள்ளி அருவியின் சாரலும்
வெள்ளை முயலின் தேடலும்
பழம் தின்னும் அணிலும்
பாய்ந்து வரும் காளையும்
தேடிய கேமராவின் வரைந்த தூரிகைகள்!
சிரிப்பும் அழுகையும் நிறைந்த
சிறியதொரு மனி வாழ்க்கையில்
விட்டுச் சென்ற தடயங்களாய்
கேமராவில் பட்டுத்தெறித்த படையல்கள் !
நினைவுகளை நிரந்தரமாக்கி
சரித்திரம் காணும் புகைப்படக் கலைஞர்களை
வாழ்த்தி மகிழ்வோம்.!
கடந்த கால நினைவுகளை எந்நாளும் நிலையாக்கும் நிபுணத்துவம் பெற்றவை நிழற்படம்.நீங்கா நினைவுகளை நிலையாக வைத்து இன்பம் தருவது புகைப்படம்.புலரும் நினைவுகளை புதுப்பித்துத் தருவது புகைப்படம். நினைவுகளை,அரிய , நிகழ்வுகளை, ஆனந்த த் தருணங்களை , அற்புத கலைகளை , அன்பின் நினைவுகளை , இயற்கை எழிலை, கொடிய விலங்குகளை,பறக்கும் பறவைகளை,பாமரன் நிலையை,உயர் மலையை, அலைஓயா கடலை,படம் பிடிக்க காத்திருந்து தேடியலைந்து சரியான, நேரத்தில்,தக்கதொருக் கோணத்தில் துயர் பல அடைந்தபோதும் ,நியாயப்படுத்தும் நற்சித்திரமாய் ,அற்புத சரித்திரமாய் கலைபடைக்கும் வல்லுநர்களாம் புகைப்படக் கலைஞர்களின் திறன்களைப் போற்றிப் பாராட்டும் மகிழ்ச்சியான நன்நாளே உலகப் புகைப்படத் தினம்.இந்த நாளில் நினைவு களை மீட்டெடுக்கும் புகைப்பட நிபுணர்களையும்,அவர்களின் திறன்களையும் ஊக்குவிக்கும் விதமாக இந்த நாள் சிறப்பிக்கப்படுகிறது. இக்கலை மேலும் புதிய பரிணாமத்தில் தனது பாதையைச் செம்மைப் படுத்தி சிகரம் எட்ட , புகைப்படக் கலைஞர்களின் ஞானம் வானம் தொட ஊக்குவித்தல் அவசியமாகின்றன.
ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 19- ஆம் நாள் உலக புகைப்பட தினம் கடைபிடிக்கப் படுகின்றன.13 -- ம் நூற்றாண்டில் தொடங்கிய கலைப்பயணம் பல பரிணாமங்களைக் கடந்து பல படி நிலைகளை அடைந்து இன்று உலகைக் கவர்ந்த புகைப்படக்கலையின் புதுமையை , சாதனையைப் பாராட்டும் வாய்ப்பாக அமைகிறது. புகைப்படக் கலையின் ஆர்வலர்கள் ஒன்றிணைந்து தாம் பயன்படுத்தும் முறைகளையும், கருத்துகளையும் பகிர்ந்து, தங்கள் ஐயம் களைந்து பல நுணுக்கங்களையும் அறிந்திட ம் வாய்ப்பாக இந்த தினம் பயன்தரலாம். தொடக்கக் கால முறைகள் ஆச்சரியங்களை அளித்த போதும் தற்காலத்தில் அதன் வளர்ச்சி அபரிமிதமாக உள்ளது.அதாவது அதன் அழகியல் புதுமைகள்,தரம்,கோணம் போன்ற வற்றில் பல பல புதிய பாதையையும் கொண்டு விளங்குகின்றன. இன்றைய டிஜிட்டல் யுகத்திற்கு உயர்ந்த புகைப்படத் துறையில் எண்ணற்ற ஆர்வலர்கள் முனைந்து வருகின்றனர் அனைவரையும் கவர்ந்திழுக்கும் ஆற்றலைக் கொண்ட இக்கலை மொழிகளைக் கடந்தும் பல மெல்லிய செய்திகளை வழங்குகிறது. வார்த்தைகளில் விளக்க முடியாததை வடிவம் ஒன்று உணர்த்துமே ஆர்வம்மிகுந்த புகைப்படக் கலைஞன் நல்லதொரு படத்திற்காக பல மணிநேரம் ,பல நாள்கள் காத்திருந்து ,கவனித்து தன் கண்ணும்,கரங்களும் அள்ளிய அரியக் காட்சியை புகைப்படக் கருவிக்குள் நிறைத்துப் பின் அதன் பிம்பத்தைப் பார்த்துப் பரவசம் கொள்ளும் நேரம் ஆனந்தமான அர்ப்பணிப்பு அல்லவா?
19 - ஆம் நூற்றாண்டின் தொடக்கக் காலத்தில் " லூயிஸ்டாகுவேரா" என்பவர் டாகுரியோடைப் எனப்படும் புகைப்படத்தின் செயல்பாட்டு முறையை வடிவமைத்தார் .1839- ஆம் ஆண்டு ஜனவரி 9 - ம் நாள் " பிரான்ஸ் அகாடமி ஆப் சயின்ஸ் " இந்த முறைக்கு இசைவு வழங்கியது.1839- ஆம்ஆண்டு பாரிசில் உள்ள போல்டுவர் கோயிலையும் ,அருகே இருக்கும் படம் பிடித்து வெற்றிப் படியை எட்டினார் லூயிஸ் டாகுரே.
இது தனிமனிதன் முதலில் எடுத்த படமாக விளங்கியது. இதன் விளைவாக ஆகஸ்ட் 19-- ம் நாள் பிரான்ஸ் அரசு டாகுரியோடைப் செயல்பாடுகளை " ப்ரீ டு தி வேர்ல்டு " என அகிலத்திற்கு அறிமுகப்படுத்தியது. இந்த நிகழ்ச்சியை எடுத்துரைக்கும் விதமாக உலக புகைப்பட தினம் கொண்டாடப்படுகிறது. புகைப்படக் கலையை போற்றும் விதமாக பல்வேற் அமைப்புகள் தொடர்ந்து ஊக்குவிக்க, சிறந்த புகைப்படங்களுக்கு பரிசு வழங்கி பாராட்டுகின்றனர். அந்த வகையில் பத்திரிக்கைத் துறையில் சிறந்த புகைப்படங்களுக்கு " வேர்ல்டு பிரஸ் போட்டோ," டைம் இதழ் ,மற்றும் புலிட்சர் " விருது வழங்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து பல படிநிலைகளைக் கடந்து இன்று அத்தியாவசிய தேவைகளுள் ஒன்றாகக் காணப்படுகிறது. புகைப்படக்கலை. தற்கால நிலையில் அனைவரும் புகைப்படம் எடுப்பதில் ஆர்வம் கொண்டவர்களாக உள்ளனர்.அதற்கான காரணம் தற்போது பயன்படுத்தப்படும் டிஜிட்டல் , ஸ்மார்ட் கைபேசிகளின் பயன்பாடாக உள்ளது.வீட்டு சிறு நிகழ்வு கள் மற்றும் குழந்தைகளின் சேட்டை களையும்,செயல்களையும் படமாகப் பதித்து ,சேமிப்பாக பாதுகாத்து மகிழ்கின்றனர். புகைப்படக் கருவியான 'கேமரா' அப்ஸ்குரா முதன்முதலில் பயன்படுத்திய புகைப்படக் கருவியாகும்.இதனைத் தொடர்ந்து நெகட்டிவ்,சில்வர் காப்பர் பிளேட்,பேப்பர் பிலிம் ,டிஜிட்டல்,ஸ்மார்ட் போன் என பல வகையான முன்னேற்றத்தைக் கண்டுள்ளன புகைப்படக் கருவி. வருங்காலத்தில் மேலும் மாற்றம் காணலாம்.வாழ்வில் தவிர்க்க முடியாத
புகைப்படம் மேலும் பல புதிய பரிணாம வளர்ச்சியைக் காணும் என்பதில் மிகையல்ல. ஒளியின் வழியே உன்னத நினைவுகளை ஓங்கி ஒளிரச் செய்யும் புகைப்படக் கலைஞர்களின் ஆர்வத்தைப் போற்றுவோம் !
வண்ண வண்ணக் கோலங்களாக வாழ்வின் பக்கங்களை வகையாக நிலைக்கச் செய்யும் புகைப்படக் கலைஞர்களை மகிழ்ந்து வாழ்த்துவோம்.!
.
0 Comments