மதுரையின் பெருமை சொல்லும் பாடல்

 

மதுரை

ஆதிமனிதன் பாசம் காண அழகர் கோவில் வாடா
அருகில் நின்னு அன்பாக அன்னம் கொஞ்சம் தாடா
ஆண்டு முழுதும் தீர்த்தமாக ஊத்துதடா நூபுர கங்கை
அகிலத்திலே இதைப்போல இருக்குதாடா வேறு எங்க ?

சைவத்தையும் வைணவத்தையும் சேர்க்குதையா சித்
திரை மாதம்
மதுரை வீதி எங்கும் உலா வருதே அழகரின் பாதம்
ரெட்ட மாட்டு வண்டி கட்டி வரும் ஊரு சனம்
ரெக்க கட்டிப் பறந்திடுமே சிறுவர் மனம்

பாதுகாக் இருக்குதையா பதினெட்டாம் படிக் கருப்பு
பயமும் இல்ல பதட்டம் இல்ல மனசக் கொஞ்சம் திருப்ப
ஆறுபடை வீடு கொண்ட முருகனைப் பாரு
பழமுதிர்ச் சோலையிலே மக்களின் பரவசம் பாரு

நேர்த்திக் கடன நிறைவேத்த இருக்கிறாரே பாண்டிமுனி
சொந்த பந்தம் வந்து சேர விலகிப் போகும் கவலை இனி
கிடாச்சோறு கமகமக்கும் மக்கள் கூட்டம் அலை மோதும்
அங்காளி பங்காளி அத்தனை பேரும் அன்பில் நனையுமடா

வானம் தொட்டு நிக்குதடா மீனாட்சி அம்மன் கோபுரம்
நம்ம வாழ்க்கை தொடப் போகுதடா வெற்றி எனும் கோபுரம்
நம்ம வள்ளுவரும் குறள் தந்த கோவில் தானடா
கல்யானையும் கரும்பு தின்ன அதிசயம் இங்கதானடா

கடம்ப மரமும் மருதமரமும் மதுரைக்கே சொந்தமடா
கட்டடக் கலையை உலகுக்கே சொல்லும் எங்க ஊரடா
புத்தகங்கள் புரட்டிப் பார்க்க புதுமண்டபம் போகலாமே
பொக்கிஷமாய்இருக்கின்ற கற்சிலையும் காணலாமே !

பாரம்பரியம் சொல்லுதடா நம்ம விளக்குத் தூணு
பக்கம் பக்கம் நின்று உயர்ந்து பத்துத் தூணு
கருப்பட்டியும் கடுக்காயும் கலந்து கட்டிய மகாலு
அன்னாந்து பார்த்து வியக்குரானே வெளிநாட்டு ஆளு

கலைகளும் மலைகளும் கணக்கின்றி இருக்கு
பரங்குன்றம் பசுமலை யானை மலை  அரிட்டாபட்டி
அனைத்திலும் சமணப்பள்ளி இருக்கு
பாறையில படிச்சவன்டா பண்பாட்டைக் குடிச்சவன்டா

இருகரை தொட்டு ஓடும் வைகை நதி பாரு
இளைஞர் கூட்டம்  துள்ளிக் குதிச்சிடுமே பாரு
தண்ணி ஓடும் காலமெல்லாம் டைவ்தானே அடிப்போம்
வத்திப் போனா கிரிக்கெட்டு மட்டைதானே பிடிப்போம்.

உலக  அதிசயத்தில ஒன்னு தானே எங்க வைகை நதி
வைகை கடலிலில்தான் கலக்கலையே நீயும் மனசில் பதி
பரமனும் மாறினான்டா பிட்டுக்குத் தினக்கூலி
பாடுபடும் விவசாயிதான் எங்க மதுரைக்கே வேலி

கோட்டு சூட்டு போட்டு வந்தார் மகாத்மா
ஆடம்பர ஆடையை அகற்றியது நம்ம ஆத்மா
வேட்டி துண்டு கட்டிக்கிட்டுப் போனாரடா
வெளிநாட்டிலும் வேட்டியோட பவனிதானே வந்தாரடா

கல்வி கற்க நம்ம காமராசர் பல்கலை
கவலை இன்றி உயர்ந்திடுமே உன் நிலை
ஆங்கிலேயன் பேரச் சொல்லும் ஏவி பாலம்
ஆற்றலிலே குறையவில்லை ரொம்ப காலம்

குற்றாலம் போலவொரு குட்லாடம் அருவி
குளுமை காண வருகின்ற மனிதரெல்லாம் குருவி
கத்திச் சண்டை வாள் சண்டை ரொம்ப ரொம்ப பழசு
எங்க ஊருச் சேவல் சண்ட இப்ப ரொம்ப புதுசு

அலங்கா நல்லூர் ஜல்லிக்கட்டு வீரத்தப் பாரு
மதுரை போல மாடுபுடி வீரன் வேற யாரு
காளை அடக்கும் காளை எங்க மதுரக்காரன் தானடா
காலந்தோறும் வெற்றிக்கொடி நட்டுவோம் நாங்கடா

சங்கம் வைத்து தமிழ் வளர்த்த தங்கமான பூமி
மண்ணும் மொழியும் எங்களுக்கு ரெண்டு கண்ணு சாமி
முத்தமிழும் முழுசாக இங்கதானே இருக்குது
கேட்கும் போதே மனசுக்குள்ளே மத்தாப்பு பறக்குது

பழமையான நகரம் மதுரை நகரம் தானங்க
இப்ப புதுமையான நகரும் மதுரை நகரம் தானங்க
தூங்கா நகரத்திலே இசைக்குதடா குத்துப் பரோட்டா சத்தம்
மூக்கத் துளைக்குதடா அம்மா மெஸ் அயிரமீனு குழம்புச் சத்தம்

ஜில்ஜில் ஜிகர்தண்டா மதுரையோட சிறப்பு
அதக் குடிச்சிப்புட்டு கொண்டாட்டம் போடுதே இளவட்ட நெருப்பு
வீரத்திலும் பாசத்திலும் வெற்றி கண்ட ஆளு
மதுர மண்ணின் பேரக்கேட்டா விசிலு பறந்திடுமே தூளு.

பாடலாக்கம்

மு.மகேந்திர பாபு
பேச - 97861 41410

Post a Comment

0 Comments