உலக குரல் நாள் / இனிமையான குரல் வளம் பெற ஆலோசனைகள் / WORLD VOICE DAY - 16 - 04 - 2022

 

                 உலக குரல் நாள்

                    ( World Voice Day )

                          16 • 04 • 2022

உயிர்களின் தேவைகளை நிறைவேற்ற வேண்டிய மகத்தான செயல்பாடே குரல்.குரல் என்பது எத்தனை அழகான இசை. எண்ணங்களை வெளிப்படுத்த , ஆணையிட , கருனைமிக்க செயல்களை செம்மையாக்க என குரலின் தேவை இன்றியமையாதது. குரலில் தான் எத்தனை, எத்தனை வகைகள் இன்பக்குரல், இனியக் குரல் , மாயக்குரல், மயக்கும் குரல் , போராட்டக் குரல் , உரிமைக்குரல் , உன்னதக் குரல், இன்னும் குரலின் ஒலி நீண்டுக் கொண்டேதான் இருக்கிறது. இந்த குரலைகக் காக்க ஓர் நாள், குரல் நாள். ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 16 -- ஆம் நாளை உலக குரல் தினமாக கடைபிடிக்கப்படுகிறது.குரல் என்பது அனைத்து மக்களின் அன்றாட வாழ்வில் ஒரு மகத் தான இன்றியமையாமையைப் பெறவேண்டிய நோக்கில் பிரேசிலியின் காது , மூக்கு, தொண்டை மற்றும் குரல் ( Brazilian Society Of Laryngology) சங்கத்தால், 1999 -- ஆம்ஆண்டு முதன்முதலாக இத்தினம் தொடங்கப் பட்டது.

                 அதனைத் தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 16 - ம் நாள் குரல் தினம் கடைபிடிக்கப்படுகிறது.குரல் மனிதனின் தனிப்பெரும் அடையாளமானது. ஒருவரை நினைவில் கொள்ள அவரது குரலே அடையாளமாகிறது. பிறந்த   குழந்தையின் வெற்று அழுகை வேறு வடிவம் கொண்ட சிரிப்பொலி யாக வளர்ச்சியடைந்துப் பின், ம்... என்னும் முனகலாகி அம்மா என ஒலிக்கும் குரலால் அகிலம் ஆனந்த பரவ சம் அடைகிறது. திக்கித் தினறி ஒலிக்கும் குரல் திரும்பத் திரும்பக் கேட்டும் , சொல்லியும் பழகி , பதிலாகி, கேள்விக் கணையாக்கி... குழந்தையும் , குரலும் , மொழியும் வளர்ந்த பேச்சுக் கலையே பிரதானம் எனத் தொடங்கும் மனித வாழ்க்கை . பேசுவது அதிமுக்கியமான நிகழ்வாகும்.குரலின் மகத்துவம்  மனித வாழ்வின் வளர்ச்சியில் .... ஆசிரியர்களாக ,பேச்சாளர்களாக, பாடகர்களாக அடிவைக்கும் போது அந்தக் குரலின் அருமையை உணர்ந்தவராகின்றார். இனிமையான,   மென்மையான, ஊடுருவும் குரலைக் கொண்டவரின் பேச்சைக் கேட்பதற்காக மக்கள் எப்போதும் தயாராக இருக்கிறார்கள்.

                 அவர்களுடைய தொழிலின் அடிப்படையில் , நிறைய பேச வேண்டியவர்களுக்கு ஒரு அழகான நீடித்த குரல் மிகவும் இன்றியமையாதது. பேசுபவர்கள் முன் வைக்கும் செய்திகள் எவ்வளவு பயனுள்ளதாகவும், சுவாரஸ்யமாக இருந்தாலும், பேச்சாளர்கள் அவற்றை ஒரு தெளிவற்ற சலிப்பான, பலமற்ற , விவரிக்க இயலாத குரலில்  பேசும்போது , அதைகேட்பவர்களால் உணர இயலாது.இயற்கையாகவே இனிய மெல்லிசைக் குரல் அனைவருக்கும் வாய்ப்பதில்லை.ஆனால் விரும்பி முயற்சித்து, வலுவான உந்துதல் மற்றும் விடாமுயற்சி, மருத்துவ நிபுணர்களின் உதவியை நாடி தங்கள் குரலை மேம்படுத்தி அவற்றை இனிமையாக மாற்ற முடியும்.இவ்வாறாக இயற்கையாக உருவான குரலால் தினமும் பேசத் தொடங்கிபேரின்பத்தைப் பகிரவும் , துயரத்தைக் குறைக்கவும், கட்டளை யிடவும் பயன்படுத்துகிறோம்.ஆனாலும்  பல வழிகளில் இக்குரல் பாதிப்புக்குள்ளாகிறது. மழை, பனி போன்ற குளிர்ச்சியான சூழல் , வெப்ப நேரத்தில் குளிர்பானங்கள் மற்றும்     ஐஸ் ( குளிர்ந்த தண்ணீர் ) குடிப்பது, இரவு தூங்கும் முன் குளிர்ந்த உணவுகளை உட்கொள்வது போன்ற காரணங்களால் தொண்டை பாதிப்புக்குள்ளாகி குரல் வளம் பாதிக்கப்படுகிறது.மேலும் தேவையற்ற புகைப்பழக்கம் மிக குளிர்ந்த மற்றும் சூடான உணவுகளை உட்கொள்வது போன்றவையும்  காரணமாகிறது. இவ்வாறு செய்து தன் உடற்கூறுகளை பழுது படுத்திக் கொள்கிறான் மனிதன் , இது தொண்டை பாதிப்பை ஏற்படுத்தி குரலை பாதிக்கும் என அச்சம் தெரிவிக்கின்றனர் மருத்துவர்கள். எனவே இந்த நிலைப்பாட்டை நினைவுபடுத்தி , குறைகளைக் களைந்து விழிப்புணர்வை ஏற்படத்தவே , இத்தினம் உலக குரல் தினமாக அனுசரித்து குரல் கொடுத்து குரலைக் காக்க மருத்துவர்கள் முயற்சிக்கின்றனர். மனதில் தோன்றும் எண்ண அலைகள் வெளிப்படுத்தும்   அவதாரமே குரல்.இக்குரலுக் கென தனி உறுப்பு கிடையாது.குரலை உருவாக்க குரல்வளை  மற்றும் குரல் நாண்கள் ஆகியன முக்கியப் பங்கு வகிக்கின்றன. அதாவது நுரையீரலில் இருந்து வெளியேறும் காற்றானது குரல் நாண்களில் அதிர்வுகளை ஏற்படுத்தி தொண்டை , மூக்கு   ஆகியவற்றிலும் அதிர்வுகளை ஏற்படுத்திய பின் மேல் அன்னம் , நாக்கு , பற்கள், மற்றும் உதடுகள் வழியாகப் பட்டுத் தெறித்து வெளிவரும் காற்றானது குரலாக உருவம்பெறுகிறது.

இவ்வாறு வெளிவரும் காற்று மென்மையாக பயணித்து, பருவ வயதை அடையும் போது ஹார்மோன்களின் ஆட்சியால் பருவகால மாற்றம் கொண்டு ஆண்களுக்கு ஆழமான குரலும் , பெண்களுக்கு மெல்லிய குரலுமாக மிளிர்வது இயற்கை அளித்துள்ள கொடையாகும். எனவே இவற்றை பேணிக்காப்பது நம் அனைவரின் தலையாய கடமையாகிறது.குரலை   பாதிப்பில்லாமல் பாதுகாக்க வேண்டும். பாதிப்பு  ஏற்படின் திடமான நம்பிக்கையுடனும் , மருத்துவ வல்லுநர்களின் ஆலோசனையின் படி , விடாமுயற்சியுடன் முயன்றால் தமது குரலை மேம்படுத்தி இனிமையாக மாற்ற முடியும்.


இனிமையான குரலைப் பெற..

உரக்கப் பேசுவதால் தொண்டையின் குரல் அளவை பாதிக்கும். மேலும் கட்டைக் குரலாக மாறிவிடும் எனவே கத்திப் பேசுவதை தவிர்க்க வேண்டும்.மேலும் குரல் இனிமையாக வைத்துக்கொள்ள நவீன மருத்துவம் மட்டுமின்றி நமது வீட்டில் உள்ள உணவுப் பொருள்களைக் கொண்டே நலம் காத்து பயன் பெறலாம்.

* அதிமதுரம் , பனங்கற்கண்டு , திப்பிலி ஆகிய மூன்றையும்சம அளவு எடுத்து இடித்து காலை மற்றும் மாலை நெல்லிக் காய் அளவு சாப்பிட இனிமையான குரலைப் பெறலாம்.

* வல்லாரைக் கீரையை தினமும் உட்கொள்வதன் மூலம் இனிமை குரலைப் பெறலாம்.

* மாவிலை நான்கு எடுத்து 200 மில்லி தண்ணீரில் கொதிக்க வைத்து குடித்தால் இனிமை குரலைப் பெறலாம்.

* சின்னவெங்காயத்தை நறுக்கி ஒரு ஸ்பூன் வெண்ணெய் சேர்த்து வதக்கி சாப்பிட இனிமையான குரல் கிடைக்கும்.

* நிதமும் காலையில் இளஞ்சூடான நீரில் மலைத்தேன் கந்து குடிக்க தொண்டையில் உள்ள கர கரப்பு நீங்கி குரல் இனிமை தரும்.

ஒரு மனிதனை அடையாளப் படுத்த அவனது குரலே முதன்மையாகிறது. எனவே குரலைக் காக்கும் வழியறிந்து வளமான குரலைக் காப்போம்!!



Post a Comment

0 Comments