சிறப்பு தரும் சித்திரைத் திருநாள் - சித்திரை மாதத்தின் சிறப்புகள் / HAPPY TAMIL NEW YEAR

 


சிறப்பு தரும்  சித்திரைத் திருநாள்

                       14 • 04 • 2022


தமிழன் போற்றும் திருநாள்!, சிந்தை மகிழ ஒரு நாள்!,

வசந்த கால பெருநாள் !, வாழ்வு வளம்கூட்டும் கலை நாள்!

இளவேனிலுடன் கைகோர்த்து இனிமையை வழங்க சதிராடி வருகிறாள் சித்திரைத் திருமகள். ஒவ்வொரு வருடமும் இளவேனில் காலத்தின் வருகையை , வசந்த ராகம் பாடி அழைக்கும் வசந்த அழைப்புகளே இந்த சித்திரைச் செல்வியின் வரவாம்!. தமிழ் நாள் காட்டியின் காலக்கணிப்பின் படி இராசி சுழற்சியில் பயன்தருவது சூரிய நாள் காட்டியாகும். இதன்படி பன்னிரண்டு இராசிகளில் முதலாம் இராசியான மேஷத்தில் பகலவன் பாதம் பதிக்கும் காலமே சித்திரைத்திங்கள் முதல் நாளாகக் கருதப்பட்டதென ஆய்வுகள் கூறுகி ன்றன. 

         அதாவது சங்க இலக்கியங்கள் சில சான்றுகளை தருகின்றன அதன் படி " தலை நாள் பூத்த பொன் இணர் வேங்கை " -- என மலைபடுகடாமும், " கணிவேங்கை நன்னாளே நாடி மலர்தலால்" - என பழமொழி நானூறும் இளவேனிலின் இனிய வருகையை சித்திரையென சரித்திரமாக்கி , தலைநாளாக,முதல் நாளென மொழிந்து அருந்தமிழ் நாட்டின் ஆண்டுக் கணக்கில் ஒரு தொடக்கத்தைக் உருவாக்கிய தாகச் சொல்லப்படுகிறது . திருவிழாக்களை பண்பாடாக்கும் தமிழன் , சித்திரை மகளைச் சீராட்டும் விதமாக, தமிழர் மரபிற்கே பொருந்தும்  படியான முறையில் தம்மையும் , தம் இல்லத்தையும் துப்புறவு செய்து தூய்மையாக்கி, அலங்கரித்து விளக்கேற்றி, முக்கனியின் சுவைகூட்டி , வெற்றிலை , பாக்கு நெல் , அணிகலன்கள் முதலான செழிப்பைத் தரும் மங்கலப்பொருட்களைக் குங்குமச் சிமிழோடு வழிபாட்டறையில் , முந்தைய நாளே வைத்து,பின் சித்திரைத் திங்கள் முதல் நாள் அதிகாலையில் காண்பது தங்களின் பெரும்பேறாகக் கருதினர்.

               பின்பு இல்லம் தூய்மையாக்கி, மாக்கோலமிட்டு மகிழ்ந்த மக்கள் ,கோயில் சென்று இறைவழிபாடு முடித்து , உறவுகளுடனும், நட்புகளுடனும் நலம் பாராட்டி , பதார்த்தம் பகிர்ந்து ஆனந்தம் அடைவர்.பல மன வேறுபாடுகள் இருப்பினும் இந்த நட்புப்பாராட்டலின் விளைவு விட்டுக் கொடுத்தல், பகிர்ந்துண்ணல் , வேற்றுமை மறத்தல் ,சமமாக மதித்தல் , எல்லாவற்றிற்கும் மேலான விருந்தோம்பல் போன்ற தமிழரின் தலையாயப் பண்புகளின் மரபுத் தொடர்ச்சியாக மிளிர்கிறது. எனவே இங்கு விட்டுக் கொடுத்தலும் , சகிப்புத் தன்மையும் தமிழர் ஏற்றுப் போற்றும் விதத்தை விளக்கவும் , இன்ப துன்பங்கள் இரண்டறக் கலந்ததுவே வாழ்க்கை என்பதை நினைவுப்படுத்தவும் சித்திரை முதல் நாளன்று சிறப்பும் , மேன்மையும் தரும் உணவான  வேப்பம்பூ மற்றும் மாங்காய் பச்சடிகளை உண்டும் , உண்பித்தும் உலகிற்கோர் உன்னத உதாரணமாக விளங்குகிறான் தமிழன். இவை வழிவழியாக கடைபிடிக்கும் மரபு சார்ந்த நிகழ்வாகவும் திகழ்கின்றன. எனவே அகிலமெங்கும் பரவியிருந்த போதிலும் மரபு மாறா தமிழன் தன் மகத்துவம் கண்டு ஆனந்தம் கொள்கிறான். அந்த ஆனந்தம் பெருகிட!, பல வளங்களை வழங்கிட !,வசந்தத்துடன் வருகிறாள்   சித்திரையாள்! 

 சிந்தை மகிழ வாழ்த்தி வரவேற்போம்!

அனைவருக்கும் சித்திரைத் திருநாள் வாழ்த்துகள்!



Post a Comment

0 Comments