பொங்கச் சாட்டியாச்சு. இந்த வாரச் செவ்வாக் கெழம பொங்கச் சாட்னா , அடுத்த வாரம் செவ்வாக் கெழமயிலிருந்து பொங்கல் திருவிழா.செவ்வா , புதன் , வியாழன்னு மூனு நாளும் கொண்டாட்டம் , குதூகலம்தான்.
கெழச்சாத் தாத்தா வைக்கப் போரில் உக்காந்து கொண்டார். அரையடி நீளமுள்ள வேப்பங்குச்சியை இரண்டு கைகளிலும் பிடித்துக் கொண்டு கொஞ்சம் வைக்கோலை நடுவில் வைத்து சுத்தினார். ஒருத்தன் கொஞ்சம் கொஞ்சமாய் வைக்கோலை சொருவ , பிரி தயாரானது. இதோ காப்பு கட்டுவதற்கு வைக்கப்பிரி ரெடி.
கோயில் வேம்பிலிருந்து வேப்பங்குச்சுகளை பிடிங்கி , பிரியின் நடுவில் சொலுகினோம். போஸ்ட் மரத்திற்கும் எதிர்ப்புறமுள்ள வீட்டின் பனை விட்டத்திற்கும் இணைப்பு உருவாகி காப்பு கட்டப்பட்டது.
காப்பு கட்டிட்டா ஊருக்குள்ள யாரும் செருப்பு போட்டு நடக்கக் கூடாது. கையில எடுத்துக்கிட்டு ஊரெல்லை தாண்டினதும் கால்ல போட்டுக்கிரலாம்.
தலைக்கு இருநூறு என வரி போடப்பட்டது.
ஏப்பா ... கொட்டுக்கு ஒருத்தர் பொறுப்பேத்துக்கோங்க. ரெடியா செட்டுக்கு ஒருத்தர் , பந்தக்காலுக்கு ஒருத்தர்னு நீங்களா வந்து பொறுப்பெடுத்துக்கோங்க என்றார் ஊர்க்குடும்பர்.
நாலு காசு பாக்கலாம்னு நெனக்காதிங்கபா. இது சாமி விசயம் .ஆமா சொல்லிப்புட்டேன்.
எப்பா இந்த வருசம் கலர்ச்சட்ட எடுத்துக் கொடுங்கபா திருவிழாவுக்கு.
கலர்ச்சட்ட எடுத்து எந்த ஊர்க்குப் போறிகளோ. இந்த வருசமும் ஊதா கலர் டவுசர் , வெள்ளக் கலரு சட்டதான்.
சரிப்பா . எடுக்கும் போது என்னயும் கூட்டுப் போங்க. விளாத்திகொளத்துக்கு வாரேன்.
எடுத்து , தக்கப் போட்டாச்சு.
எப்பமா அப்பா எடுத்து தக்கப் போட்டாரு.
போன வாரமே போட்டாச்சுடா.
அளவு ?
சடம்ப வச்சு ஓன் இடுப்பளவு எடுத்தாச்சு. வழக்கம் போல தக்கிற நம்ம பொன்முடி டெய்லர்ட்ட கொடுத்தாச்சு.
எத்தன செட்டுமா ?
எத்தன செட்டா ? ஏழு செட்டா எடுக்கப் போறோம். ஒன்னு தான்டா.
சரிம்மா.
அப்பலாம் வூட்ல என்ன எடுத்துத் தாராகளோ அதான். கலர்ச்சட்டயும் , டவுசரும் அத்தி பூத்தாப்போலதான். பத்தாம் வகுப்பு வரை டவுசரும் , சட்டயும்தான்.பேண்ட் வேணும்னா பதினொன்னாம் வகுப்பு போகும் போது பாக்கலாம் . இதான் பதில்.
வருசம் வருசம் பால் பெரிப்பா அக்காதான் மொளப்பாரிக்குப் பொறுப்பு . மொளப்பாரி பானையில அவுகஅவுக பேர எழுதி கொடுத்திருவாக. ஒரு வாரத்தில நல்லா வளந்திரும். ஆம்பளக யாரும் அவுக வீட்ட எட்டிக்கூட பாக்கக் கூடாது. பாத்தா செடி வளராதாம்.
திங்கக் கெழம ராத்திலியில் கோவில்பட்டியிலிலுந்து செல்வம் ரேடியா செட் வந்து விட்டது. சின்னப் பசங்க ஆளுக்கொரு குழாய் ரேடியாவ தூக்கிக்கிட்டு , அலோ அலோ மைக் செட் ஒன் டூ திரி என திருணையில் படுத்திக் கெடக்கும் கிழடு கட்டககளின் காதில் வச்சுப் பேசு ,
யார் மகன்டா இவன் , தாயோளி அப்பன மாரியே குசும்பு புடிச்சவனா இருக்கான் என கட்ட வெளக்க மாத்த எடுக்க , சிட்டாப் பறக்கும் சின்னப் பசங்க கூட்டம்.
நெறஞ்ச குளத்தத் தேடி வரும் கொக்க போல ஒவ்வொரு வருசமும் திருவிழாவுக்கு , வளயல் , ஊசி , பாசி விற்பவர்கள் வந்துருவாங்க.
அண்ணே ! கண்ணாடி எவ்ளோ ?
ரெண்ட் ரூவா.
கொடுங்கணே !
பச்ச , சிவப்பு , மஞ்சள் என கலர் கலரா இருக்கும் அந்தக் கண்ணாடியப் போட்டவுடன் கதாநாயகன் நெனப்புதான்.
என்ன மாப்ள ... கண்ணு தெரியாதவங்க மாதிரி நடக்கறிங்க.
இல்ல மாமா ! கண்ணாடிய மாட்னதும் மேடெல்லாம் பள்ளமாத் தெரியுது. பள்ளமெல்லாம் மேடாத் தெரியுது. அதான் தட்டுத் தடவி நடக்கற மாதிரி இருக்கு.
கொட்டுகாருக வந்தாச்சுடோய்.
அண்ணே ! ஒரு தடவ ஊதிக்கிறவா ?
வேணாம் தம்பி.
தவில்கார அண்ணே ! ஒரு தடவ தட்டிக்கிறவா .
வா தம்பி. இந்தா அடிச்சுப்பாரு.
டங் டங் .அண்ணே சூப்பரா இருக்குணே ! இதானணே உருமி.
ஆமா பா.
விநாயகனே ! வெவ்வினையை வேரறுக்க வல்லோய் ...
செல்வம் ரேடியோ செட்டின் முதல் பாடல் செவிப்பறையில் விழுந்தது. கிராமங்களின் விழாக்களில் விநாயகனுக்குத்தான் எப்போதும் முன்னுரிமை.
ப்பி ... ப்பி
தொட்டு நக்கு நக்கு நக்கு
தொட்டு நக்கு நக்கு
மேள காரர்கள் சரிபண்ண , எங்களுக்கு சிரிப்பாணியாக இருந்தது.
டேய் மாப்ள ..
அவரு ப்பி ப்பி ன்றாரு.
இவரு தொட்டு நக்குன்றாருடோய் எனச்சொல்ல , கொட்டுக்காரர் தன் தலையை ஆட்டி தவில அடிக்க , அவரது தலமுடி அவரது கண்ணில் விழுந்து மேலெழுந்தது. ஏதோ மாயாஜாலம் செய்வது போலிருந்தது அவரது தலையாட்டல்.
மாப்ள ...
என்ன மாமா ...
இப்ப பாரேன் நாதஸ்வரத்தோட நெலமய எனச் சொல்லிக்கிட்டே ,,
முழு புளியம் பழத்த எடுத்து அவர் முன்னாடி வாயில் விட்டுச் சப்ப , அவருக்கு எச்சில் ஊறத் தொடங்கியது. ரெண்டு நிமிசம்தான். அவரது குழாயிலிருந்து எச்சில் வடியத் தொடங்க , ஏல நாறப்பயகளா ! குழல் ஊதுரவர் முன்னாடியாடே புளியம் பழம் திங்கறது என பெரியவர் அதட்ட ,
அவரதுதான் குழாய ஊத எங்களுக்எஉத் தரலயில்ல என்றான் குட்டயன்.
சில எளவட்டங்கள் தண்ணியப் போட்டு சலம்பினார்கள்.
கொட்டுக் காரண்ணே ! என் ஆட்டத்தகுந்தவாறு அடிங்க.
சரிண்ணே !
என்னதான் அடிச்சும் திருப்தியில்ல.
என்னயா கொட்டு அடிக்கிறிங்க.
அண்ணே ! எங்க அடிக்குத் தகுந்த மாதிரி நீங்க ஆடுங்க ...
குசும்ப பாத்தியா ...
ஏதோ ஆடினார்கள் போதை தெளியும் வரை.
கலோ கலோ ஆங்காங்கே உள்ள கொமரிப் பிள்ளைக மந்தையம்மன் கோவில் திடல் முன் வந்து மொளப்பாரி அடிக்க கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.
தன்ன னன்னே னான னன்னே
தன்னே ன்னே னானே
தன னன்னே னன்னே னானே !
செல்லப்ப பெரியப்பாவின் கணீர் குரல் ஓங்கி ஒலிக்க பெண்களின் வளைக் கரங்கள் கும்மியடிக்கத் தொடங்கினார்கள்.
ஏப்பா பள்ளிக்கூடத்தில வரிக் கறி கொடுக்கிறாக . போய் வாங்கிக்கோங்க.
மைக் செட்டில் அறிவிப்பு வந்தது. சருவச்சட்டிய தூக்கிக்கிட்டு அங்கொரு கூட்டம் போனது.
ஏ ஏ சுத்தி வா. மாப்ள விடாத.நல்லா ஓடிருச்சு . இனிமே ஓட முடியாது. தகிப்பாறுது. தரத்த எடுத்துக்கோயா.ஓங்கி ஒரே குத்து. பாப்போம் எளவட்டத்தோட தெறமய என வேலிக்குள் போய் பம்மிய பன்றிய பிடிக்கும் நடுத்தர வயதொத்த கூட்டம் ஒன்று உறுமிக் கொண்டலைந்தது.
ஊர்ப் பொது மக்களுக்கு அன்பான அறிவிப்பு. இன்று இரவு புரட்சித் தலைவர் எம்சியார் நடித்த மகாதேவி என்ற திரைப்படமும் , படகோட்டி திரைப்படமும் திரையிடப் படுவதால் மக்கள் அனைவரும் கண்டுகளிக்க விழாக்கமிட்டியினர் சார்பாக கேட்டுக் கொள்கிறோம்.
மதுரையிலிருந்தும் , சென்னையிலிரிந்தும் பிழைப்புத் தேடிச் சென்ற இளைஞர் கூட்டம் திரைப்படத்மிற்கான செலவை ஏற்றுக் கொண்டதாக மைக்கில் அறிவிக்கப்பட்டது.
எங்கு வாழ்ந்தாலும் , எப்படி வாழ்ந்தாலும் திருவிழா அன்று தாயின் மடியில் கெடப்பதைப் போன்று ஊரில் கிடப்பார்கள்.
இந்திரன் இளைஞர் அணி சார்பில் மாபெரும் மின்னொளி கபாடி போட்டி .முதல் பரிசு ரூ.பத்தாயிரம்.வழங்குபவர் என மைக்கில் அறிவிக்கப் பட்டுக்கொண்டிருந்தது.
சுத்து வட்டாரம் முழுவதும் கபடி போட்டியைப் பாக்கவும் , விளையாடவும் வர கூட்டம் கடுமையாக இருக்கும்.மகிழ்ச்சின்னா அதான்.
ஹலோ அப்பா ... இந்த வருசம் திருவிழா எப்போ ? என செல்லில் கேட்டேன்.
இந்நேரம் பொங்கச் சாட்டியிருக்கனும்டா. நம்ம எலி மகன் செத்துப் போயிட்டான்டா.அதான் திருவிழாவ தள்ளி வச்சிருக்காங்க. பொங்கச் சாட்னதும் சொல்றன்டா என்றார் அப்பா.
மு.மகேந்திர பாபு.
0 Comments