மதுரை நகைச்சுவை மன்றத்தின் 27 - வது ஆண்டுவிழா

 


மதுரை நகைச்சுவை மன்றத்தின் 27 - வது ஆண்டுவிழா

மதுரை என்றாலே நம் மனதில் பூப்பது மல்லிகைப் பூதான். மல்லிகைப்பூ பூக்கும் ஊரில் , மகிழ்ச்சிப் பூக்களைப் மாதந்தோறும் பூக்கச் செய்கிறது தொடர்ந்து 27 ஆண்டுகளாக மதுரை நகைச்சுவை மன்றம். தமிழகத்தில் உள்ள நகைச்சுவை மன்றங்களுக்கெல்லாம் முன்னோடியாகவும் , மகிழ்ச்சியைப் பிரதிபலிக்கும் கண்ணாடியாகவும் திகழ்ந்து வருகிறது மதுரை நகைச்சுவை மன்றம்.

மக்கள் மருத்துவர் டாக்டர்.N.சேதுராமன் அவர்களை நிறுவனராகக் கொண்டு  , நகைச்சுவைத் தென்றல் , கலைமாமணி .பேரா.கு.ஞானசம்பந்தன் அவர்களைத் தலைவர் & செயலராகக் கொண்டு தொடங்கப்பட்ட நகைச்சுவை மன்றம்  , ஆண்டுக்காண்டு பல புதியவர்களை உலகிற்கு அறிமுகம் செய்துள்ளது. 

ஒரே இடத்தில் , ஒரே தினத்தில் தொடர்ந்து  அதாவது , மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் மாதந்தோறும் முதல் ஞாயிற்றுக் கிழமையில் காலை 11 : 00 மணிக்குத் தொடங்கி மதியம் 02:00 மணி வரை எந்தத் தொய்வும் இல்லாமல் 27 ஆண்டுகளாகத் வெற்றிகரமாகத் தன் பயணத்தைத் தொடர்கிறது மன்றம்.

வரலாற்றுச் சிறப்புமிக்க மதுரை நகைச்சுவை மன்றம் , தொடக்கத்திலிருந்தே சில கொள்கைகளைத் தவறாமல் கடைப்பிடித்து வருகிறது. அமங்கலமாகப் பேசக்கூடாது. ஆபாசமாகப் பேசக்கூடாது. பிறர்மனம் புண்படும்படி பேசக்கூடாது என்பதுதான் அக்கொள்கைகள். நகைச்சுவை சொல்லும் போது அனைவரும் ரசித்துச் சிரிக்க வேண்டும் . அது ஒருவர் மனதைப் புண்படுத்தினாலும் அது நகைச்சுவை இல்லை என்பது பேரா.கு.ஞானசம்பந்தன் அவர்களின் கருத்து.

சிரித்துப்பேசி கலைந்து செல்லாமல் , சிந்தனையைத் தூண்டும் விதமாகவும் , பிறர்க்கு உதவி செய்யக்கூடியதாகவும் மதுரை நகைச்சுவை மன்றம் செயல்படுகிறது. ஆம்  ! நலிந்த நாடகக் கலைஞர்களுக்கு ஆண்டுதோறும் , ஆண்டுவிழாவில் ' பொற்கிழி ' வழங்கி பெருமைப்படுத்தி வருகிறது.சமூக ஆர்வலர்களுக்கு , படைப்பாளர்களுக்கு ' சாதனையாளர் விருதும் '  , குழந்தைகளை ஊக்குவிக்கும் வகையில் ' வளரும் கலைஞர் விருதும் ' வழங்கிவருகிறது. 

சிறு குழந்தையாய் வந்து , மன்றத்தில் ஜோக் சொன்ன குழந்தைகள் இன்று மணமாகி , அவர்களது குழந்தைகள் வந்து ஜோக்குகளைப் பிள்ளைத் தமிழில் அழகுற சொல்லும் போது , அரங்கமே கரவொலியால் அதிர்கிறது. அது மட்டுமல்ல , உலகம் முழுமையும் குறிப்பாக அமெரிக்கா , ஆஸ்திரேலியா போன்ற நாடுகளுக்கு நான் பேசச்சென்றபோது , நம் மன்றத்தில் ஜோக்சொல்லி நான் பரிசு வாங்கியுள்ளேன் என அங்குள்ள நம் மதுரைக்காரர்கள் சொல்லும் போது நெகிழ்ந்து போயுள்ளேன் என்கிறார் பேரா.கு.ஞானசம்பந்தன் அவர்கள். 

ஜோக் சொன்ன குழந்தைகள் அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்படும். பெயர் கொடுத்த குழந்தைகள் , கொடுக்காத குழந்தைகள் என மேடையேறிய அனைவருக்கும் பரிசு. ஒருமுறை பெயர் கொடுத்த குழந்தை ஒன்று ஜோக் சொல்லி பரிசு பெற்றுச்செல்ல , அவனது நான்கு வயது தம்பி மேடை ஏறி மைக்பிடித்து ஜோக் சொல்ல முயற்சிக்க , அவனுக்கோ ஜோக் மறந்து விட்டது. அவனது ஐந்து வயது அண்ணன் ,  ' டேய் ... உன் பேரச் சொல்லுடா . பரிசு தருவாய்ங்க ' என கீழிருந்து சொல்ல அரங்கமே அதிர்ந்தது.  இந்த வயதில் மேடை ஏறி வந்து பயப்படாமல் நிற்கிறானே அதுவே பெரிதல்லவா ? நீங்களும் , நானும் இப்படி மேடையேறி நிற்போமா ?  என்றார்.

ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தின் தலைசிறந்த பேச்சாளர்கள்  , சிந்தனையாளர்கள் , திரைத்துறையைச் சேர்ந்தவர்கள் என சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்படுவார்கள்.  பழம்பெரும் நடிகைகள் மனோரமா , குமாரி சச்சு ,  நடிகர்கள் வி.கே.இராமசாமி ,  S.V.சேகர் , யூகிசேது , மௌலி , செந்தில்  ,  பாண்டியராஜன் , தாமு , சார்லி , மனோபாலா ,  படவாகோபி , சிவகார்த்திகேயன் , மயில்சாமி ,  பேரா.கண.சிற்சபேசன் , பேரா. ப.நமச்சிவாயம் , தென்கச்சி.கோ.சுவாமிநாதன் ,  இறையன்பு இ.ஆ.ப. என பலர் வந்து இங்கே தன் சிரிப்புப் பேச்சினால் சிறப்புச் செய்துள்ளார்கள். 

27 - வது ஆண்டு விழாவிற்கு' பிக்பாஸ் ' புகழ் நடிகர் வையாபுரி அவர்கள் கலந்து கொண்டார். பேரா.கு.ஞானசம்பந்தன் அவர்கள் வையாபுரி அவர்களுடன்  திரைத்துறை அனுபவங்கள் , வாழ்க்கை நிகழ்வுகள் என கலந்துரையாட நகைச்சுவை மன்ற அரங்கம் சிரிப்பொலியால் அதிர்ந்தது. 

மதுரை நகைச்சுவை மன்றம் பல சாதனைக் கலைஞர்களை உருவாக்கியுள்ளது. ' காமெடி பாய்ஸ் ' என ஒரு நகைச்சுவை குழு உருவாக்கப்பட்டு வருடந்தோறும் நகைச்சுவை சொல்லி அமர்க்களப் படுத்தி வருகிறார்கள். இம்மன்றத்தில் உருவான ரோபோ சங்கர் , இராமர், வெங்கடேஷ் , அரவிந்த் , சசி  என பலர் திரைத்துறையிலும் , சின்னத்திரையிலும் தடம் பதித்து வருகிறார்கள்.  தமிழகத்தின் மற்ற நகைச்சுவை மன்றங்களுக்கெல்லாம் மதுரை நகைச்சுவை மன்றம் தாயாக விளங்குகிறது.  ஆம் ! பேரா. கோ.கு.ஞானசம்பந்தன் அவர்கள் தமிழகத்தில் 17 மாவட்டங்களில் நகைச்சுவை மன்றங்களை உருவாக்கி , தொடர்ந்து ஊக்கப்படுத்தி வருகிறார். மதுரை நகைச்சுவை மன்றத்தின் 27 வது ஆண்டுவிழா அன்று மாலை  திருச்சி நகைச்சுவை மன்றத்தின் 19 வது ஆண்டுவிழாவையும் சிறப்பாக நடத்தி உள்ளார்.

செவிக்குணவாய் நகைச்சுவை நிறைய , மதியம் வயிற்றுக்குணவாய் சைவம் , அசைவம் என குழந்தைகளுக்கும் , கலந்து கொண்டவர்களுக்கும் அறுசுவை உணவை மீனாட்சி  மிஷன் மருத்துவமனையின் சார்பில் திரு.பாண்டியராஜன் அவர்கள் தொடர்ந்து 27 ஆண்டுகளாக முகமலர்ச்சியோடு வழங்கிவருகிறார். 

இன்றைய அவசர உலகில் சிரிக்க மறந்து போன மனித மனங்களை , மாதந்தோறும் சிரிக்கவும் , சிந்திக்கவும் , பிறர்க்கு உதவிகளையும் செய்துவரும் மதுரை நகைச்சுவை மன்றம் பாராட்டிற்குரிய மன்றமாகும் .

மு.மகேந்திர பாபு , ஆசிரியர் & நகைச்சுவை மன்ற உறுப்பினர்.

ஆண்டுவிழா அன்று அரங்கை அதிரச் செய்த குழந்தைகளின் நகைச்சுவைகள் .

1 ) ஆசிரியர் , மாணவர்கள்ட்ட கேட்குறாங்க , சூரியன் மேற்கே மறைகிறது. இது என்ன காலம் ?  நிகழ்காலமா ? எதிர்காலமா ?

அதுக்கு மாணவர் சொல்றாங்க , இது சாயங்காலம் சார்.

2 ) மாப்ள ஏன் மாத்திரை சாப்பிடும் போது சட்டய கழட்றாரு ?

டாக்டர்தான்  மாத்திரைய வெறும் வயித்தில சாப்பிடச் சொன்னாராம்.

3 ) படகுப் போட்டியில கலந்துகிட்ட தலைவர் மானத்த வாங்கிட்டாரா ? எப்படி ?

லைப் ஜாக்கெட்ட போட்டு வரச்சொன்னா ஒயிட் ஜாக்கெட்ட போட்டு வந்திட்டாரு.

4 ) மாப்பிள பொங்கலுக்கு வருவாரா ?

மாப்பிள பழைய சோத்துக்கே வருவாரு. பொங்கலுக்கு வரமாட்டாரா ?

5 ) பெரிய பங்சன்ல பெரிய சட்டியில சாம்பார் வைப்பாங்க.ஒருத்தன தூக்கி உள்ள விட்டாங்க . ஏன் ?

ஏன்னா , அவன்தான் அந்த தெருவுல பெரிய பருப்பு.

6 ) நமக்கு ஒரு துன்பம் வந்தா , உறவினர்கள் எல்லாம் நம்ம பின்னாடி வந்து இருப்பாங்கடா .

எப்படிடா சொல்ற ?

உன் கல்யாண ஆல்பத்த எடுத்துப்பாரு.

7 ) சார் ... சார் ... என் பொண்டாட்டிய காணோம் .

யோவ் ... இது போஸ்ட் ஆபிசுயா.

அப்படியா ? சந்தோசத்தில எங்க சொல்றதுனு தெரியல சார்.

தொகுப்பு .

மு.மகேந்திர பாபு. , ஆசிரியர்.
97861 41410

Post a Comment

0 Comments