நாடகத் தந்தை பம்மல் சம்பந்த முதலியார் பிறந்த தினம் / PAMMAL K SAMBANDHA MUTHALIAYAR BIRTH DAY

 


நாடகத் தந்தை பம்மல் சம்பந்த முதலியார் பிறந்த தினம்.

                          (  Pammal Sambandha Mudaliar )

                                           01 • 02 • 022 

கலைகள் பலப்பல என இருந்த போதும் பார்த்தலும்,கேட்டலும் மகிழ்ச்சி தரும் நுண்ணிய கலையே முத்தமிழ்.இத்தகைய கலைகள் இணைந்த அற்புத மணிமாலையே நாடகம்.மனிதன் தன் திறமைகளை வெளிப்படுத்தும் அரிய கலை.மேலும் ஒரு நாட்டு மக்களின் கலாச்சாரத்தையும் , அகத்தையும் பிரதி பலிக்கும் அழகிய மேடையாகும் .நாட்டுப்புற மக்களுக்கென்றே ஒதுக்கப்பட்ட ஒரு நிலையை மாற்றி நல்லதொரு மேடையமைத்து நாகரீகத்தைப் பரப்பியது இந்த நாடகமேடை. அலங்கார மேடையமைத்து, ஒப்பனையால் ஓவியமாக்கி ,இசையினூடே இன்ப , துன்பத்தை இதமாக்கி, ஒலியும் , ஒளியும் இரண்டறக் கலந்த கதையமைப்பின் களமாக உருவாக்கி மக்கள் மனம் மகிழும் மன்றங்களாயின இந்த மேடைகள். எனவே இங்கு உயர்ந்ததொரு நாடகத்தைப் படைத்து சாதனையாக்கினார்.

 முதல் நாடகத் தந்தை எனப் போற்றப்பட்ட பம்மல் சம்பந்த முதலியார் .இவர் இக்கலையை வளர்க்க தமது 81 - வயது வரை ஓய்வின்றி உழைத்தார். தாம் கொண்ட இலட்சியத்தை நிறைவேற்ற கண்பார்வை மங்கிய நிலையிலும், பிறரை எழுத வைத்து தம் கருத்துகளால் நாடகக் கலையை வளர்க்க அரும் பாடுபட்டார்.

உழைத்து களைக்கும் மனிதன் தன்னை புதுப்பித்துக் கொள்ளவும், தன் திறமையை வெளிப்படுத்தவும் கலைகள் பலவற்றைக் கண்டுணர்ந்து கவலையைப் போக்குகிறான். அவற்றில் சிறந்தவையே இயல் , இசை , நாடகமெனும் முத்தமிழ். இயலும், இசையும் கொண்ட மெய்யின் அசைவே நாடகம்.இயல் என்பது சொல் , அச்சொல்லை இனிமைப்படுத்த ராகம், இவற்றிற்கான மெய் அசைவே நாடகம்.இவற்றை கூர்ந்து நோக்கும் போது  தெருக்கூத்து , பாவை நாடகம் என அறியப் படுகிறது. இந்த நாடகக் கலையை சிறப்பிக்க தோன்றியவராகப் போற்றப் படுபவர் தமிழ் நாடகத் தந்தை என அழைக்கப் படுபவர் பம்மல் சம்பந்தம் அவர்கள்.

1873 - ஆம் ஆண்டு பிப்ரவரி - 1 - ம் நாள் , சென்னை பம்மல் விஜயரங்க முதலியார் - மாணிக்க வேலு அம்மாளின் மகனாகப் பிறந்தார் .இவரது தந்தை ஆசிரியராக இருந்துவந்தார். இதன்காரணமாக இவரது வீட்டில் தமிழும்,ஆங்கிலமுமாக இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள் இருந்தன.சம்பந்தம் அவர்கள் வாசிக்கத் தொடங்கிய நாள் முதலே,வீட்டில் உள்ள புத்தகங்கள் அனைத்தையும் ஆர்வத்துடன் படித்து முடித்தார். உயர்நிலை மற்றும் கல்லூரி ஆகிய கல்வியை முடித்தபின் சட்டக் கல்வி பயின்று வழக்கறிஞரானார். மேலும் 1924 - ஆம் ஆண்டு முதல் 1928 - ஆம் ஆண்டு வரை நீதிமன்றத் தலைவராக வீற்றிருந்தார். இளம்வயது முதலே தமிழ் மற்றும் ஆங்கில நாடகங்களைப் பார்க்கும் வாய்ப்பு கிடைக்கப் பெற்றதால் அவற்றில் காணப்படும் வேறுபாடுகளை உணர்ந்து கொண்டதன் விளைவாக, தமிழ் நாடகப் போக்கின் தரம் குறைந்த நிலையைக் கண்டு மனம் வெதும்பினார்.1891 - ம் ஆண்டு " கிருஷ்ண மாச்சார்லு " என்ற ஆந்திர நடிகர் நடித்த நாடகங்களைக் கண்டு வியந்த சம்பந்தம் அவர்கள்  தமிழ் நாடகங்கள் மீதும் பற்றுக் கொண்டார்.அவரைப் போலவே தம் நாடகங்களில் உயர்நிலையில் உள்ள மருத்துவர் , வழக்கறிஞர் , பட்டப்படிப்பு முடித்துள்ளவர்களும் பங்குப் பெறுவதைப் போலவே , தாமும் அதுபோல ஒரு படித்தோர் பங்குக்கொண்ட நாடகக் குழு ஒன்றை உருவாக்க பேராவல் கொண்டு விழைந்தார். சீரழிந்துக் கொண்டிருந்த நாடகத்தை செம்மையாக்கி சீர்ப்படுத்தி உயர்ந்த நிலையைக் காண ஆர்வம் கொண்டார்.

ஆகையால் 1891 - ம் ஆண்டு ஜுலை 1 - ம் நாள் நல்ல நண்பர்கள் சிலரின் உதவியுடன் " சுகுண விலாச சபை " என்ற நாடகக் குழுவை உருவாக்கினார்.  பம்மல் சம்பந்தம் அவர்களே முதல் நாடக ஆசிரியர்.இவர் 80 - நாடகங்களை எழுதி யுள்ளார். இதனைத் தொடர்ந்து முதல்  நாடகமான 'லீலாவதி ', என்ற நாடகம் ' சுலோசனா' என்ற பெயரில் அரங்கேற்றம் செய்யப்பட்டது.இதன் விளைவாக 1916 - ம் ஆண்டு நாடகப் பேராசிரியர் என்ற விருதைப் பெற்றார்.மேலும் 1959 - ஆம் ஆண்டு சங்கீத நாடக அகாதமி விருதைப் பெற்றார், தொடர்ந்து அதே ஆண்டு " பத்மபூஷன் " என்ற பட்டத்தையும் பெற்றார்.இவர் தம் நாடகத்தில் சில கீர்த்தனைகளை அறிமுகப்படுத்தி சிறப்பாக்கினார். இவ்வாறாக தமிழ் நாடகங்கள் சிறந்த இடத்தைப் பெற்று, மதிப்புக்குரியதாக மக்கள் மனங்களில் ஆனந்தத்தை ஏற்படுத்த இவரது முயற்சியே முழு முதற் காரணமாகத் திகழ்கின்றன. பம்மல் சம்பந்தம் அவர்களால் எழுதப்பட்ட நாடகங்களில் பல திரைப்படமாக எடுக்கப்பட்டு மக்கள் மனங்களில் நல்லதொரு விளைவை  ஏற்படுத்தின. அவ்வாறு எடுக்கப்பட்டவையே காலவா ரிஷி என்னும் திரைப்படம். 1936 - ம் ஆண்டு அவரே எழுதி நடித்த " சதி சுலோசனா " என்ற நாடகம் திரைப்படமாக்கப் பட்டது.

அவ்வாறே " மனோகரா " - வும் திரைப்பட மாக்கப் பட்டு , 1935 ம் ஆண்டு வெளியிடப்பட்டு மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தின. மேலும் 1935 - ம் ஆண்டு திரைப்படமாக்கப் பட்ட ரத்னாவளியும் , 1938 - ம் ஆண்டு வெளிவந்த " யயாதியும், 1939 - ம்ஆண்டு ராமலிங்க சுவாமிகளும் , 1943 - ம் ஆண்டு தாசிப் பெண்ணும் , 1941 ஆம் ஆண்டு " சபா பதியும்", 1948 --" ம் - ஆண்டு வேதாள உலகமும் திரைப்படங்களாக்கப் பட்டவைகளாகும். இவை மட்டுமன்றிஆங்கிலக் கவிஞர் ஷேக்ஸ்பியரின் சில ஆங்கில நாடகங்களை, அவற்றின் சுவையும் , நயமும் குறையாமல் அவற்றின் போக்கிலேயே தமிழ் நாடகங்களாக மொழிபெயர்த்தார்.அவை...

* Hamlet  - அமலாதித்யன் 

* As you Like it - நீ விரும்பியப் படியே.

* Macbeth - மகபதி 

* Cymbeline - சிம்மளநாதன் .

* Merchant Of Venice- வணிகபுரி- வாணிகன்   போன்றவைகள்  சிறந்த இடத்தைப் பிடித்தது மட்டுமில்லாமல் சிந்திக்கவும் வைத்தது.மேலும் பம்மல் சம்பந்த முதலியார் இயற்றிய நூல்களைப் போற்றி பாதுகாக்கும் விதமாக தமிழ் நாடு அரசு நாட் டுடமை யாக்கி சிறப்பித்து வருகின்றன. இவற்றில் நமது பங்காக அந்த நாடகங்களைப் பயன்படுத்தி மகிழ்வோம் .!

Post a Comment

0 Comments