PG TRB - தமிழ் - சங்க இலக்கியம்
5. ஐங்குறுநூறு
பெயர்க்காரணம்:
+ ஐந்து + குறுமை + நூறு = ஐங்குறுநூறு. குறிஞ்சி, மருதம், நெய்தல், பாலை, முல்லை என ஐவகைத் திணை குறித்த குறுகிய நூறு நூறு பாட்டுகளாகத் தொகுக்கப்பட்ட நூல் இது. ஆதலின் இந்நூல் ஐங்குறுநூறு எனப் பெயர் பெற்றது.
இந்நூலில் மூன்றடிச் சிறுமையும் ஆறடிப் பேரெல்லையும் உடைய ஐந்நூறு ஆசிரியப்பாக்கள் உள்ளன.
* அதனால் அளவாலும் பொருளாலும் இந்நூல் இப்பெயர் பெற்றது.
நூல் தோன்றிய வரலாறு:
* இந்நூலைத் தொகுத்தவர் புலத்துறை முற்றிய கூடலூர்க்கிழார்.
* தொகுப்பித்தவர் யானைகட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை. யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை என்னும் சேரமன்னன்,
* இன்பப் பொருள் அமைந்த அகப்பொருள் பாடல்கள் திணைக்கு நூறாய் ஐந்நூறு பாடல்களைக் கொண்ட நூல் ஒன்றை உருவாக்கித் தமிழ் உலகிற்கு அளிக்க விரும்பினான்; தன் விருப்பத்தைக் கூடலூர்க் கிழார் என்னும் புலவரிடம் கூறினான்.
* அவர் அவ்வத்திணை பாடுதலில் வல்ல புலவர்களைக் கொண்டு நூறு நூறு பாடல்கள் பாடச்செய்து இந்நூலைத் தொகுத்தளித்தார்.
நூலாசிரியர்கள்:
* அம்முறையில் இந்நூற்பாடல்கள் ஐம்பெரும் புலவர்களால் பாடப்பட்டனவாம்.
* "மருதத்திணை பாடியவர் ஓரம்போகியார்” "நெய்தல் திணை பாடியவர் அம்மூவனார்” "குறிஞ்சித்திணை பாடியவர் கபிலர்”. "பாலைத்திணை பாடியவர் ஓதலாந்தையார்”. முல்லைத்திணை பாடியவர் பேயனார்' என்பவராவர்.
* இந்நூலிற்கு கடவுள்வாழ்த்துப் பாடியவர் பாரதம் பாடிய பெருந்தேவனார்.
* இதனையும் வரிசை முறையையும்
“மருதமோ ரம்போகி நெய்தலம் மூவன்
கருதுங் குறிஞ்சிக் கபிலன் - கருதிய
பாலை ஓத லாந்தை பனிமுல்லை பேயனே
நூலையோ தைங்குறு நூறு.” எனும் வெண்பாவால் அறியலாம்.
நூலின் பெருமை :
(இந்நூலில் ஒவ்வொரு திணையும் பத்துப் பத்துப் பாடல்களைக் அரண்ட பத்துப் பத்துகளாக நூறு பாடல்கள் அமைந்துள்ளன. அடிகளைக் கொண்ட பாடல்களில் சொல்லழகும், பொருளழகும் அணிநலமும் அமையப் பாடுவது எளிது. குறுகிய அடிகளில் அந்நலங்கள் எல்லாம் அமையப் பாடுவது அரிது. அவ்வகையில் வள்ளுவர் இரண்டடிப் பாடல்களில் மிக விரிந்த கருத்துகளைச் செறித்துப் பாடியதனாலேயே திருக்குறள் அறநூல்களுள் தலைசிறந்ததாய்ப் போற்றப்படுகிறது.
* அதுபோல, அகப்பொருள் கூறும் குறுகிய இன்பியல் பாடல்களைக் கொண்டதாய்ச் சொல்லழகும் பொருளழகும் அணிநலமும் செறிந்ததாய்ப் பண்டைத் தமிழருடைய வாழ்க்கை முறைகளைத் தன்னுள் கொண்டு காட்டும் கண்ணாடியாய் விளங்கும் பெருமை உடையது ஐங்குறுநூறு.
* இப்பாடல்களின் வாயிலாகப் பண்டைத் தமிழரின் காதல் வாழ்க்கை, ஒழுக்கம், நாகரிகம், பழக்கவழக்கங்கள், மகளிரின் மாண்பு, அறவுணர்வு ஆகியவற்றை நன்கு உணர முடிகின்றது.
* இப்பாடல்களில் அமைந்த உள்ளுறை உவமம், இறைச்சி போன்றவை நுண்ணிதின் ஆராய்ந்து சுவைத்து இன்புறத்தக்கன.
* " நவில்தொறும் நூல்நயம் போலும் " என்னும் கூற்றுக்கு எடுத்துக்காட்டாய் விளங்குவது இந்நூல்.
* இந்நூலை 1903 ல் உ.வே . சாமிநாத ஐயர் முதன் முதலாகப் பதிப்பித்தார்.
*************** ************* *************
கல்விப் பணியில் ,
' பைந்தமிழ் ' மு.மகேந்திர பாபு ,
தமிழாசிரியர் . மதுரை - 97861 41410
YOU TUBE - GREEN TAMIL
************** *********** **************
0 Comments