உலகப் பறவை தினம்
5 • 1 • 2022
சின்னஞ் சிறு குருவி போலே-- நீ
திரிந்து பறந்துவா பாப்பா !
வண்ணப் பறவைகளைக் கண்டு -- நீ
மனதில் மகிழ்ச்சிகொள்ளு பாப்பா !
கொத்தித் திரியுமந்தக் கோழி -- அதைக்
கூட்டி விளையாடு பாப்பா !
எத்தித் திருடுமந்தக் காக்கை -- அதற்கு
இரக்கப் படவேணும் பாப்பா !
-- பாரதியார் --
பறவைகளின் சிறப்பையும் , முக்கியத்துவத்தையும் பாடல் வழியாக குழந்தைகளுக்கு எடுத்துச் சொல்கிறார் மகாகவி. பறவைகளைப் பாதுகாக்கவும் , அவற்றின் இன்றியமையாமையை அறிந்திடவும் பறவைகள் தினம் கொண்டாடப்படுகிறது. தேசிய பறவைகள் தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 5 - ஆம் நாள் அன்று கொண்டாடப்படுகிறது. இந்த பறவைகள் தினம் பறவை கண்காணிப்பு , பறவைகளைப் பற்றிய படிப்பு , மற்றும் பறவை தொடர்பான பிற நடவடிக்கைக்கைகள் மூலம் கொண்டாடப் படுகிறது. பறவைத் தத்தெடுப்புஎன்பது ஒரு முக்கியமான தேசிய பறவை தின செயல்பாடாகும் . மனிதன் மற்றும் இயற்கைப் பேரழிவு போன்றவற்றினால் அழிந்து வரும் பறவை இனங்களை பாதுகாக்கும் நோக்கத்தோடு இத்தினம் கொண்டாடப் படுகின்றன. காடுகளை அழித்தல் வேட்டையாடுதல் போன்ற காரணங்களாலும் , வியாபார பார்க்கப்படும் போது பறவை இனங்கள் அழிக்கப்பட்டு வருகின்றன. மனிதர்களின் பல்வேறுபட்ட நவீனமயமாக்கல் நடவடிக்கைகளால் , சுற்றுச்சூழல் மாறிப்போனது. முன்பு எல்லாம் சாக்குப்பைகளில் கொண்டு செல்லப்படும் அரிசி மற்றும் தானியங்கள் இடைவெளி வழியே சிதறும். இவை பறவைகளுக்கு உணவாக் கிடைத்தன. அவற்றுடன் சிட்டுக்குருவிகள் கூடு கட்ட ஏற்ற வகையில் ஓட்டு வீடுகள் இருந்தன. இன்றோ இவை இரண்டுமே இல்லாமல் போனது.பறவைகளுக்கான வாழ்வாதாரம் குறைந்து கொண் டே சென்றதால், இன்று அழிவின் விளிம்பில் பறவையினம் அல்லல்படுகிறது.
அழியும் தருவாயில் பறவைகள் :
இந்தியாவில் அழியும் நிலையில் 1330 - அரிய பொக்கிஷ வகையான பறவை இனங்களும், தமிழகத்தில் 52 - வகையான பறவை இனங்கள் மட்டுமே உள்ளன, என அறியப்படுவது வருத்தத்திற்குரிய செய்தியாக உள்ளது.அழிவிற்கான காரணங்களாக மனிதனே இருப்பது பெரும் வேதனையைத் தருகிறது.மேலும் கோடைகால காட்டுத் தீயினால் பல்லாயிரக்கணக்கான பறவைகள் அழிந்து வருகின்றன. மனிதன் தன் சுயநலத்திற்கா இயற்கை சுரண்டப்படுவதால் விலங்குகளுக்கும், பறவைகளுக்கும், தாவரங்களுக்கும் தொடர்ந்து அழிவைத் தருவதாக உள்ளது .கடலில் மனிதனால் எறியப்படும் கழிவுகளை உண்ணும் பறவைகள் அழிவது தொடர்கதையாகிறது. மேலும் பறவைக் காய்ச்சல் போன்ற நோய்கள் பரவலால் அதிக எண்ணிக்கையிலான பறவைகள் அழிகின்றன. மனித இடையூறுகளும் , இயற்கைப் பேரழிவுகளாலும் அதிக பாதிப்புகள் ஏற்படுகின்றன. எனவே அவற்றிலிருந்து தப்பித்து உயிர் பிழைக்க வேறு இடம் தேடிச் செல்லும் வாய்ப்பினையும் அவ்வாறு செய்ய முடியாத பட்சத்தில் அந்த இனம் மடிந்து போகும் வாய்ப்புகள் அதிகம். நகர்ப்புற மெங்கும் கூடுகட்டி செழித்திருந்த சிட்டுக் குருவிகள் இன்று ஒரு சில கிராமங்களில் மட்டுமே காணப்படுகின்றன.
துப்புரவுப் பணியாளர்களாக... ;
மனிதன் அலட்சியமாக கருதும் பறவை காக்கை .ஆனால் இது செய்யும் பணியோ மனித குலமேன்மைக்கு பல வகையில் பயன்தருவதாக அமைகின்றன. இவற்றின் முதன்மையான பணியானது கழிவுகளை உண்டு சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருக்க உதவுகின்றன. நமது சுற்றுப்பு றத்தில் வாழும் பல்வேறு பறவைகள் மேற்க்கொள்ளும் முக்கிய பணி பூச்சிகளை உண்பதாகும் .பறவைகளின் பெரும்பாலான உணவும் புழுபூச்சிகள் தான்.சிட்டுக் குருவியின் உணவு புழுக்கள். பட்டாணிக் குருவி ( Tit ) என்ற சின்னஞ் சிறு பறவை யின் ஒரு ஜோடி மட்டும் ஒரு ஆண்டில் 12 - கோடி பூச்சிகளின் முட்டைகளை அல்லது 1.50 - லட்சம் கம்பளிப் புழுக்கள உணவாக உண்டு விடுகின்றன. இத்தகைய பறவைகள் இல்லையெனில் உலகில் உள்ள தாவரங்கள் அனைத்தையும் பூச்சிகள் அழித்துவிடும். விவசாய நிலங்களை பாழ்படுத்துவதா க எண்ணி அவற்றிற்கு இடையூறு பல இழைக்கின்றனர். இவற்றால் அவை அழிவுப் பாதையில் உள்ளன.பறவைகளும் ஒர் உயிர்களே, இந்த பூமியில் வாழ அவைகளும் முழு தகுதி பெற்றவைகளே. எனவே அவற்றைக் காப்பது நமது கடமை மட்டுமன்று கட்டாயமும் ஆகும்.
நமது பண்பாடு :
உயிர்களிடம் அன்புப் பாராட்டுவதும் , இரக்கம் கொள்வதும் நமது பண்பாடாகும். இவற்றை வெளிப்படுத்தும் விதமாக இன்றும் நமது கிராமங்களில் பறவைகளுக்கும், விலங்குகளுக்கும். உணவிடுதலும்,தண்ணீர் வைக்கும் பழக்கமும் இருக்கின்றது.இவை சிறிய உயிரினங்களைக் காக்கும் ஒரு பாதுகாப்பு நடவடிக்கையாகவும் மேற்கொள்ளப் படுகின்றன. இயற்கை வளங்களை நிர்வகித்தல், பாதுகாத்தல் போன்ற நடவடிக்கைகள் பண்டைய சமூகங்களில் இருந்தன. பறவைகளைக் காக்கும் ஓர் அன்புக்குச் சான்றாக அலங்கரிப்பவர் பேகன்.
கொடைமடம்:
ஐந்தறிவு களிடமும் அன்பையும் , நன்றியையும் காட்டுபவர்
கள் நம் தமிழர்கள். இத்தகைய இரக்க உள்ளங்கள் தமிழ் மண்ணெங்கும் தழைத்துக் காணப்பட்டது.வீரத்தோடு அன்பையும் , இரக்க குணத்தையும் வளர்ந்தனர். கடையெழு வள்ளல்களுள் ஒருவரான பொதினி - (பழனி) மலைத் தலைவன். அம்மலையானது மலையும், மழையும் கொண்ட வளம் கொ ழிக்கும் நில அமைப்பை உடையது .மழை வளம் மிக்க அந்நிலப்பகுதியில் மயில்கள் அங்குமிங்கும் திரிந்து கொண்டிருக்கும். அப்படி ஒரு சமயம் அவ்வாறாக திரிந்துக் கொண்டிருந்த ஒரு மயில் அகவியது. அதைக் கேட்ட மன்னன் மயில் குளிரால் நடுங்கி அகவியது என எண்ணி மனம் அன்பெனும் அருளால் நிறைந்து , அம்மயிலுக்கு உதவிட உணர்ச்சி வசப்பட்டவராக தன் போர்வையைப் போர்த்தினார்.இந்நிகழ்வு மயிலுக்கு குளிருமா? போர்வையை பயன்படுத்திக் கொள்ளு மா ? எனச் சிறிதும் சிந்திக்காமல், சிந்தையில் உதித்ததை செயலாக்கி மகிழ்ந்த மன்னன் வாழ்ந்த நாடும் அவ்வாறே வாழ்ந்திருக்கும் என்பதில் ஐயமில்லை.இதனையே " கொடைமடம் " எனச் சான்றோர் போற்றி வாழ்த்தினார்கள் என்பது தமிழரின் மென்மையான உள்ளத்தைக் உள்ளங்கை நெல்லிக்கனி என எடுத்துக் காட்டுகிறது. எனவே மனிதர்கள் வாழும் முறைகளிலும் ,பழக்க வழக்கங்க ளிலும் நமது பண்பாடுகளை இழப்பதால் இயற்கை சீர்கெட்டு சிதைகிறது. இயற்கையை போற்றவும் , கையாளவும் அறிவியல் சிந்தனை அவசியமாகின்றன. மனித பண்பாடும் , ஐந்தறிவு பாதுகாப்பும் இரண்டறக் கலந்தவையாகும். ஆகவே சூழ்நிலையைக் காக்கும் வழிகளை அறிந்து , தொடர்ந்து ஆதரித்து வருவோமானால், எதிர்கால உலகை இனிமையாக்கி மகிழ்வோம் .! பறவையும் ஒரு உயிர் தானே , அதன் வாழும் உரிமையைப் பறிக்காமல், வாழ வழி அமைப்போம் .! வையத்தின் நலம் காப்போம்.!
.
0 Comments