தைத்திருநாள் - தமிழர் திருநாள்
14 • 01 • 2022
சூழ்ந்த இருள் அகற்ற
கைவிரித்துக் கதிர் பரப்பி
ஒளி சிந்தி ஒன்றிணைத்து _ தமிழர்
ஒற்றுமையும் நல்வினையும்
அகிலமெங்கும் அறியச் செய்து
தீமைஎரித்துத் தியாகம் விதைத்து
நன்றி நவில்ந்து நாகரீகம் உயர்ந்து
செந்தமிழாய்ச் செறிந்து ! -- தமிழர்
புத்தாண்டெனப் புலர்ந்து!
நனி போற்றும் திருமகளாக!
புதிய தொரு வழியைக் காட்ட
மலர்ந்து மகிழ்ந்து தவழ்ந்து சதிராடி வரும்
தைமகளே வருக ! வருக !
வளமான வாழ்வுதனை தருக ! தருக !
பாரெங்கும் பரவிக் கிடக்கின்றன பைந்தமிழ் இனம் . இன, மத , ஏற்றத் தாழ்வு , வேறுபாடின்றி ஒன்றிணையும் ஒப்பற்றத் திருநாள். ஒற்றுமைத் திரு நாள் .நினைவுகள் நினைக்க, இனிக்கும் தினமான அறுவடைத் திருநாள். அதனைக் கொண்டாடி நன்றிக் கடன் செலுத்திக் களிப்புறும் ஒரு ஆனந்தத் திருநாள் இத் தமிழ்ப் புத்தாண்டு திருநாள்.
அற்புதங்களால் அலங்கரிக்கப்பட்ட அரும்பெரும் ஒரு நாள் அறுவடைத் திருநாளாம் தைத்திரு நாள்.இடம் விட்டு இடம் மாறி நிலையற்ற விலங்கு வாழ்வு கண்ட மனிதன்.வேட்டையாடுதலைத் தவிர்த்து , வாழ்வுதனை மேம்படுத்த, வகைப் படுத்திய நிலத்தைப் பண்படுத்தி , நாகரீக வாழ்வு காண உழவுத் தொழிலை உயிரோட்டமாகக் கண்டான். காட்டையும் மேடு பள்ளமில்லா சமமாக்கி , விதைத்து பயிராக்கி, பலன் பெருக்கி அறுவடைச் செய்து, வீடு வந்த புதிய விளைச்சலையும் ,அதற்கு உதவி செய்தவைகளுக்கு நன்றி கூறவும் இத்தினம் கொண்டாடப் படுகிறது. உழவையே உயிர் நாடியாகக் கொண்ட பழந்தமிழர் கூட்டம் பாடுபட்டு ,அறுவடை செய்யும் காலத்தே ,அவற்றிற்கு உதவியாக இருந்த உயிர்களுக்கும் , இயற்கைக்கும் நன்றி கூறும் ஒரு விழாவாகக் கொண்டாடி மகிழ்ந்தனர். பைந்தமிழ் மாந்தர் தம் பண்பாட்டு மகத்துவத்தை அகிலத்திற்கே அள்ளித் தந்தவர்கள்.நன்றி பாராட்டலும் , உதவும் உள்ளமும் கொண்டவர்கள் என உலகமறிந்தது உவகை கொள்ளும் பாரம்பரியத்தை உடையவர்கள்.
பயிர்கள் வளர்வதும் , கருகுவதும் கதிரோன் சிந்தும் கதிர் ஒளியால் என்பதை தனது அனுபவச் சிந்தனையால் கண்டுணர்ந்தார்கள் .எனவே கதிரவனால் கழனி விளைந்து , களை பறித்து , கதிர் அறுத்து பெற்ற பலனை அள்ளி அரைத்துப் புதுப்பானையிலிட்டுப் பாலும் , நெய்யும் இரண்டறக் கலந்து இன்னமுதாய்ச் சமைத்துப் பொங்கி வழிய ! வெற்றிலையுடன் கமுகும், கரும்பும் , மஞ்சளும்,வாழையும் படைத்து ,குங்குமமாக எழும் கதிரவனையும் , குளிர்ந்த இந்திரனையும், கூடவே இணைந்து வரும் பசுவையும் இனிதே வணங்கி ! நன்றிப் பெருக்கெடுத்து உள்ளமெங்கும் உவகை பொங்க ! கண்டு களிப்படைந்து ! மனம்மகிழ்ந்து ,ஆனந்த அமைதி அகமெங்கும் நிறைய வணங்கி வழிப்பட்டனர்.இந்தச் சிறப்புப் பெற்ற திருநாளைப் போற்றி , மரபு மாறாமல் பல அடுத்தடுத்தத் தலைமுறைக்காண வழிசெய்வோம்! இளைய சமுதாயத்தை பண்பாட்டு பங்கெடுத்தலில் பயன்கொள்ளச் செய்வது நம் கடமை ஆகும்.
இத்தகைய சிறப்பு மிகு தை திருநாளை தலைவணங்கிப் போற்றுவோம். அனைவருக்கும் இனிய தைத் திருநாள் மற்றும் தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள் .!
0 Comments