தைப்பொங்கல் - சிறப்புக்கவிதை - தைத்திருநாள் தமிழர் திருநாள் / PONGAL KAVITHAI - TAMILZHAR THIRUNAL - KARUMPUK KAVITHAI

 


தைத்திருநாள் - தமிழர் திருநாள்

சிறப்புக் கவிதை 

*************   **************   ************

நான்கு நாள் திருவிழா

விழைந்து கொண்டாடப் படுவதே விழாவென்றாலும்

விதவிதமாய் கொண்டாடி மகிழ்ந்திட பற்பலவாய்

விழாக்கள் நாமிங்கு உருவாக்கி வைத்திருந்தாலும்

வியன்மிகு விழாவென்றாலது பொங்கல் விழாவே

நான்குநாள் விழாவாய் நற்றமிழரிதை நானிலத்தில்

நயத்தகு முறையில் கொண்டாடுவதே இவ்விழாவின்

நோக்கம் உயரியது எனவுலகோர் அறிந்திட

நேர்த்தியான செயற்பாடாய் திகழ்கிறது என்பேனே!

முதல்நாள், ஆண்டு முழுவதும் சேர்ந்த

மங்கும் குப்பைகள் மங்கா குப்பைகளென

எவ்லா குப்பைகளையும் அப்புறப்படுத்தி தூய்மையாக்கி

எம்மவர் தம்மிதயம்போல் இல்லத்தைப் புதுப்பிப்பரே

போகியை வழியனுப்பி தைத்திங்கள் ஒன்றில்

புத்தரிசி பானையிலிட்டு விளைந்திட்ட காய்கறிகள்

படையலிட்டு உழவுத்தொழில் சிறக்க உதவிட்ட

பகலவனுக்குச் சொல்லும் நன்றியே பொங்கல்!

விளைநிலத்தில் வியர்வை சிந்தி இராப்பகலாய்

வலம்வந்த உழவனுக்கு உற்றத்தோழனாய் களத்தில்

விளையாடும் தன்வீரத்தை தானேயடக்கி ஏர்தாங்கி

வலம்வந்த காளைக்கான நன்றியே மாட்டுப்பொங்கல்!

சோற்றில் நாள்தோறும் நாமிங்கு கைவைக்க

சேற்றில் காலோடு கைவைத்து தன்னலமின்றி

பாடுபடும் பண்பாளன் உழவனென்ற பேரருளாளன்

பாரினில் நன்றியுரைத்தோம் உழவர்த் திருநாளாய்!

சொந்த நிலங்கொண்டோர் நிலமற்றோர் யாவரும்

சுகமாய்த் தாம்வாழ உதவியவர்க்கு நன்றியுரைத்த

பின்னிங்கு சுற்றம் கண்டு மகிழ்ந்து திளைத்த

நன்னாளே காணும்பொங்கலாய் சிறந்து விளங்கியது!

செய்ந்நன்றி மறவா தமிழனின் தனிப்பெரும்

செயற்பாடாம் பொங்கல் விழாவென்றும் வாழ்கவாழ்கவே

கவிஞர் அ திருமலைக்குமரன் அருணாச்சலம்.

தமிழாசிரியர் , கோவில்பட்டி.


Post a Comment

0 Comments