மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம் - தொடர் 1,சிவபுராணம் - பகுதி - 1 / MANIKKAVASAKARIN THIRUVASAKAM - SIVAPURANAM - PART - 1

 


மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம்

தொடர்  

உரை விளக்கம்

பெரும்புலவர்.திரு.மு.சன்னாசி

1 ) சிவபுராணம் - பகுதி - 1

(திருப்பெருந்துறையில் அருளியது)

(சிவனது அநாதி முறைமையான பழைமை)

கலிவெண்பா

திருச்சிற்றம்பலம்

நமச்சிவாய வாஅழ்க! நாதன்தாள் வாழ்க!

இமைப்பொழுதும் என்நெஞ்சில் நீங்காதான் தாள்வாழ்க!

கோகழி ஆண்ட குருமணிதன் தாள்வாழ்க!

ஆகமம் ஆகிநின் றண்ணிப்பான் தாள்வாழ்க!


5 ஏகன், அநேகன், இறைவன், அடிவாழ்க,

வேகம் கெடுத்தாண்ட வேந்தன் அடிவெல்க!

பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்தன் பெய்கழல்கள் வெல்க!

புறத்தார்க்குச் சேயோன்தன் பூங்கழல்கள் வெல்க!

கரங்குவிவார் உள்மகிழும் கோன்கழல்கள் வெல்க!


10 சிரங்குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல் வெல்க!

ஈசன் அடிபோற்றி! எந்தை அடிபோற்றி!

தேசன் அடிபோற்றி! சிவன்சே வடிபோற்றி!

நேயத்தே நின்ற நிமலன் அடிபோற்றி!

மாயப் பிறப்பறுக்கும் மன்னன் அடிபோற்றி!


15 சீரார் பெருந்துறை நம்தேவன் அடிபோற்றி!

ஆராத இன்பம் அருளும் மலைபோற்றி!

சிவனவன் என்சிந்தையுள் நின்ற அதனால்,

அவனரு ளாலே அவன்தாள் வணங்கி,

சிந்தை மகிழச் சிவபுராணம் தன்னை,

20 முந்தை வினைமுழுதும் ஓய, உரைப்பன்யான்

கண்ணுதலான் தன்கருணைக் கண்காட்ட வந்தெய்தி

எண்ணுதற் கெட்டா எழிலார் கழலிறைஞ்சி

விண்ணிறைந்து மண்நிறைந்து, மிக்காய், விளங்கொளியாய்,

எண்ணிறந் தெல்லை இலாதானே! நின்பெருஞ்சீர்.

25 பொல்லா வினையேன், புகழுமா றொன்றறியேன்;

புல்லாகிப் பூடாய்ப் புழுவாய், மரமாகிப்

பல்விருக மாகிப், பறவையாய்ப், பாம்பாகி,

கல்லாய், மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்,

வல்லசுர ராகி, முனிவராய்த் தேவராய்ச்

30 செல்லாஅ நின்றயித் தாவர சங்கமத்துள்

எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன், எம்பெருமான்!

மெய்யே உன் பொன்னடிகள் கண்டின்று வீடுற்றேன்;

பாடலுக்கான உரை

(சிவபெருமான் உயிர்களை உய்வித்தற்காக
பன்னெடுங்காலமாக ஆற்றி வருகின்ற திருவருட் செயலின் முறைமை என்பது ஆகும்.)

                    ' நமசிவாய' என்னும் சிவபிரானது திருவைந்தெழுத்து மந்திரம் வாழ்க. எல்லா உயிர்க்கும் தலைவனாக விளங்கும்
அப்பெருமானின் திருவடி வாழ்க, கண் இமைக்கின்ற நேரம் கூட என் நெஞ்சைவிட்டு நீங்காத அவ்விறைவனின் திருவடி வாழ்க.
திருப்பெருந்துறை என்னும் ஊரில் குருந்தமரத்தடியில் வீற்றிருந்து
என்னை ஆட்கொண்ட குருமணியாய் விளங்கும் இறைவன் திருவடி வாழ்க. ஆகமங்களின் வடிவமாக விளங்கி இனிமை
செய்து அருளும் இறைவன் திருவடி வாழ்க. தனி ஒருவனாகவும் அவ்வொருவனே பலராகவும் அருள்புரியும் இறைவனின் திருவடி  வாழ்க.

              என் மனத்தின் வேகத்தைத் தடுத்து என்னை ஆட்கொண்டு அருள்செய்த தலைவனாகிய இறைவன் திருவடி வெல்க. பிறவி என்னும் கட்டினை முழுமையும் நீக்கியருளிய பிறை, கங்கை, அரவம் முதலியனவற்றைத் தலைக்கோலமாகக் கொண்டிருக்கும் சிவபிரானின் வீரக்கழலணிந்த திருவடிகள் வெல்க. தமக்குப் புறம்பாக நிற்போர்க்கு எட்டாத் தொலைவினனாக விளங்கும் பூப்போன்ற திருவடிகளைப் பெற்றிருப்போன் சிவன் ஆவான்.

         ஆனால் அச்சிவனே இருகரம் குவித்து இதயத்தில் தன்னைக் கொண்டிருப்போரின் உள்ளத்தில் மகிழ்ச்சி செய்பவனாகவும்,
உச்சிக் கரத்தினராய்த் தன்னை வணங்குவோரை உயர்விப்பனாகவும் விளங்குகிறான். அவன் திருவடி வெல்க.
எல்லாம் வல்ல ஈசன் திருவடிக்கு வணக்கம். எம் தந்தையாக விளங்குபவனும் அவனே; அவன் திருவடிக்கு வணக்கம். ஒளித்திருமேனியாய் விளங்கும் இறைவன் அடிக்கு வணக்கம். தனிப்பெரும் சிவனாய் விளங்குபவனது திருவடிக்கு வணக்கம்.

         அன்பு உள்ளம் கொண்டார் உள்ளத்தே நிலைத்து நிற்கும் மாசற்றவனது திருவடிக்கு வணக்கம். மாயை முதலிய மலங்களால் தோன்றும் பிறவித் தளையைக் கட்டறுப்பவனாகிய தனிமுதல் அரசனின் திருவடிக்கு வணக்கம். சிறப்புப் பொருந்திய
திருப்பெருந்துறையில் எழுந்தருளிய நம் தேவாதி தேவன் திருவடிக்கு வணக்கம். வரம்பில்லாத இன்பத்தை அருள்கின்ற
மலைபோன்ற கருணையுடைய வள்ளலுக்கு வணக்கம். சிவபெருமான் என் உள்ளத்தினுள்ளே தங்கி இருக்கின்றான்.
அதனாலே அச்சிவபெருமானின் அருளினாலே அவன் திருவடியை வணங்கி என் உள்ளம் மகிழுமாறு சிவனது அநாதி
முறைமையான பழைமையினை முன்னைய வினை முழுவதும் அறுத்திடுமாறு உரைக்கின்றேன். நெற்றிக் கண்ணை
சிவபெருமான் நினைப்பதற்கும் அரிய தன் திருவடிகளை தன் அளப்பரிய கருணையினால் என் கண்களால் காணுமாறு அருள் செய்தான். அத்தகைய அழகு பொருந்திய திருவடிகளை வணங்கி
மேலும் அவன் புகழ் விரித்துக் கூறுகின்றேன். ஆகாயமாகியும், நிலவுலகமாகியும் நீக்கமற நிறைந்து மேலானவனாகி விளக்கமுறும்
ஒளிப்பிழம்பாகி மனம் கடந்து வரம்பற்றவனாக விளங்குபவனே
நின் பெரும்புகழைக் கொடிய வினைவயத்தால் பிறப்பெடுத்த
யான் புகழ்ந்து கூறுவதற்குச் சிறிதும் அறிகிலேன்.

           அடியவனாகிய யான், புல், பூண்டு, புழு, மரம், பலமிருகங்கள், பறவை, பாம்பு, கல், மனிதர், பேய், பூதகணங்கள், வலிய அசுரர், முனிவர், தேவர் ஆகிய பல்வேறு பிறப்புகள் எடுத்து அசையும் பொருளாகவும், அசையாப் பொருளாகவும் விளங்கி  மெலிவடைந்திருந்தேன். உண்மைப் பொருளே இப்பொழுதுதான் உன் பொன்னார் திருவடிகள் கண்டு வீடு பெற்றேன்.


நன்றி : AR பதிப்பகம் , மதுரை.

****************   ****************   ********


Post a Comment

0 Comments