அடிகுழாயும் அடுப்படியும் - கிராமத்து நினைவுகள் - மு.மகேந்திர பாபு / ADIKULAIUM ADUPPADIUM - KIRAMATHTHU NINAIVUKAL - MAHENDRA BABU

 


அடிகுழாயும் அடுப்படியும்

               மைனி , ஒரு குடம் தண்ணி அடிச்சிக்கவா ?

என்னத்தா ? இப்பத்தான வந்த ? வரிசயில நிக்குறவகள ஆளாத்தெரியலயாக்கும் ?

          இல்ல சித்தி , அடுப்புல உல வச்சிருக்கேன். அது டர்ரு புர்ருனு கொதிச்சுட்டுக் கெடக்கு. சோத்த வடிச்சுட்டு , குழம்பு வைக்கனும். ஒரு சொட்டுக்கூட தண்ணியில்ல. அதான்.

சரி சரி. அடிச்சிட்டுப்போ. ஏப்பா  வரிசில கொடத்த வச்சிருக்கவுக கோவிச்சுக்காதிக.

என்னத்தா ! நிறைமாச புள்ளக்காரி நீ கொடத்த தூக்கிட்டு வந்துருக்க. ஓன் மகன இறக்கித்தான் விடலாம்ல.

                 அது எங்க இறங்குது ? கடை கண்ணிக்குப் போனாலும் சேலயப்பிடிச்சுக்கிட்டேதான் வாரான். 

        அதுக்காக நெறமாச புள்ளத்தாச்சி தலயில கொடமும் , இடுப்புல புள்ளயும் எப்படித்தா கொண்டு போவ ?

      அதெல்லாம் கொண்டு போயிருவேன். புல்லுக்கட்டு , நெல்லுக்கட்டத் தூக்குறோம். புள்ளயத்தூக்கமாட்டமா ?

சின்னாத்தா ஒரு கொடம் பிடிச்சிக்கவா ?

                தாயி , நீ அப்படி எனல்ல ( நிழல் )  நில்லு . நானே அடிச்சு தூக்கிவிடுதேன்.

      இல்ல சின்னாத்தா. நானே அடிச்சுக்கேன். 

பரவால்லமா. நீ கொடத்த வச்சிட்டு அப்படி ஓரம் நில்லு.


                       யாரு மகன்டா நீயி ? இப்படி முண்டிக்கிட்டு வாரவன் ?

அவசரமா ஒரு சொம்பு தண்ணி வேணும். நீங்க அடிங்க . நான் பிடிச்சுக்கிறேன்.

      எலேய் ... அது என்ன பால்சொம்பாடா ? பால் வாட ஆகாதுடா !  பொறுடா , கொடத்த நகத்தி வச்சிக்கிருதன். 

     சொம்பு நிறைஞ்சிருச்சு. வழி விடுங்க. வண்டி கிளம்புது. ம்ம் உர்ருரு பீம் பீம் டுபுடுபுடுபு ...


         பாருடி இத்தினியானு ஜீவாத்து . அதுபாட்டுக்கு வந்து பிடிச்சிட்டுப் போறத ?

    அடிகுழாய் எப்போது ஆரவாரமாகவும் , ஆர்ப்பாட்டமானதாகவும் இருக்கும். ஒரேயொரு அடிகுழாய்தான். கிணறு ஒன்னு இருக்கு. அடிகுழாய் போட்டதில் இருந்து கிணறைத் தேடுவாரில்லை.


      அதிகாலை 4 மணிக்கு டங்கு டங்குனு ஒலிக்கத் தொடங்கும் அடிகுழாய் நடுச்சாமம் 12 மணி வரையிலும் அழுதுகொண்டே இருக்கும். தீப்பட்டி ஆபிஸ் போகும் பெண்கள் 4 மணிக்கு வந்து குளிக்கத் தொடங்குவார்கள். அது அவர்களுக்கான நேரம். அப்போது வேறு யாரும் வருவதில்லை.


       இரவு 11 மணி 12 மணிபோல் மூட்டம் போடுபவர்கள் மேலுக்கு குளிக்க வருவார்கள். குடிக்க , குளிக்க , துவைக்க , மாட்டுக்குத் தண்ணி காட்ட என அனைத்திற்கும் ஒரேயொரு அட்சய பாத்திரமாக இருந்தது அந்த அடிகுழாய்தான்.

      இன்று எப்போதாவதுதான் இயங்குகிறது. தன் இருப்பைக் காட்டுகிறது. பஞ்சாயத்துப் போர்டு தண்ணிதான் இப்ப நம்ம வீட்டு முத்தத்துக்கே வந்திருதே ! அப்றம் ஏன் அடிகுழாய்க்குப் போகனும் ?

காலங்கள் மாறினாலும் இன்றும் ஒரு மில்ட்டரி மேன் போல் கம்பீரமாகத்தான் காட்சி தருகிறது எங்க ஊர் அடிகுழாய்.


மு.மகேந்திர பாபு ,

30 - 01 - 2022 , ஞாயிறு.





Post a Comment

0 Comments