மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம்
தொடர் - 3
உரை விளக்கம்:
பெரும்புலவர்.திரு.மு.சன்னாசி ,
தலைமையாசிரியர் , ( ப.நி )
கோகிலாபுரம் , இராயப்பன் பட்டி , தேனி.
1 ) சிவபுராணம் - பகுதி - 3
பாடல் அடிகள் - 63 முதல் 95 நிறைவு வரை
மாசற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுடரே!
தேசனே! தேனார் அமுதே! சிவபுரனே!
பாசமாம் பற்றறுத்துப், பாரிக்கும் ஆரியனே
65 நேச அருள்புரிந்து நெஞ்சில்வஞ் சங்கெட,
பேராது நின்ற பெருங்கருணைப் பேராறே!
ஆரா அமுதே! அளவிலாப் பெம்மானே!
ஓராதார் உள்ளத் தொளிக்கும் ஒளியானே!
நீராய் உருக்கியென் ஆருயிராய் நின்றானே!
70 இன்பமும் துன்பமும் இல்லானே உள்ளானே!
அன்பருக் கன்பனே! யாவையுமாய் அல்லையுமாம்,
சோதியனே! துன்னிருளே தோன்றாப் பெருமையனே!
ஆதியனே! அந்தம் நடுவாகி, அல்லானே!
ஈர்த்தென்னை ஆட்கொண்ட எந்தை பெருமானே!
75 கூர்த்தமெய்ஞ் ஞானத்தால் கொண்டுணர்வார் தம்கருத்தின்
நோக்கரிய நோக்கே! நுணுக்கரிய நுண்ணுணர்வே!
போக்கும் வரவும், புணர்வுமிலாப் புண்ணியனே!
காக்கும் எம் காவலனே! காண்பரிய பேரொளியே!
ஆற்றின்ப வெள்ளமே! அத்தா!மிக் காய்நின்ற
80 தோற்றச் சுடர் ஒளியாய்ச் சொல்லாத நுண்ணுணர்வாய்
மாற்றமாம் வையகத்தின் வெவ்வேறே வந்தறிவாம்
தேற்றனே! தேற்றத் தெளிவே!என் சிந்தனையுள்
ஊற்றான உண்ணார் அமுதே! உடையானே!
வேற்று விகார விடக்குடம்பின் உட்கிடப்ப
85 ஆற்றேன் எம்ஐயா! அரனேயோ! என்றென்று
போற்றிப் புகழ்ந்திருந்து, பொய்கெட்டு மெய்யானார்,
மீட்டிங்கு வந்து, வினைப்பிறவி சாராமே,
கள்ளப் புலக்குரம்பை கட்டழிக்க வல்லானே!
நள்ளிருளில் நட்டம் பயின்றாடும் நாதனே!
பொருள்
களங்கமில்லாத ஒளியே ! அவ்வொளியாகி மலர்ந்திருக்கும் ஆனந்த ஒளியே ! என்னை ஆட்கொண்ட குருவே ! தேனாய் இனிப்பவனே ! கிடைத்தற்கரிய அமுதமாக விளங்குபவனே !சிவபுரத்தில் விளங்குபவனே! பாசவினையாகிய தொடர்பினை அறுத்துக் காப்பாற்றுகின்ற ஆசிரியனே! அன்பும் அருளும் காட்டி என் உள்ளத்தில் உள்ள வஞ்சகம் கெடுமாறு என்றும் நிலைத்து நிற்கின்ற பெருங்கருணை வெள்ளமே! தெவிட்டாத அமிழ்தமே! நின்னை அறியாதார் உள்ளத்துள்ளேயும் மறைந்திருக்கும் ஒளிமயமானவனே! என் உள்ளத்தை நீராய் உருக்கி என் அரிய உயிராய் விளங்குபவனே!
இயற்கையாகவே இன்பத்துள்ளும் துன்பத்துள்ளும் அமிழாதவனே! அன்பர்க்காக அவற்றை ஏற்பவனாகவும் உள்ளவனே! அடியார் மீது அன்பு காட்டுபவனே! எங்கும் பரந்திருந்து எல்லாமுமாக விளங்கியும் அல்லாதவனாகவும் விளங்குகின்ற பேரொளியானே! நிறைந்த இருளாகவும் விளங்குபவனே! எளிதில் வெளிப்பட்டுத் தோன்றாத பெருமை உடையவனே! ஆதியும் நடுவும் முடிவுமாகியும் அவை அல்லாதவனாகவும் விளங்குபவனே! என்னைக் காந்தம்போல் கவர்ந்து இழுத்து ஆட்கொண்ட என் தந்தை ஆகிய பெருமானே! மிகுந்த மெய்ஞ்ஞானம் கொண்டு உணர்பவர்தம் கருத்தினாலும் நேருக்குநேர் காண்பதற்கு அருமையான காட்சியாக விளங்குபவனே!
நுணுக்கமாக அறிவதற்கு அரிய நுட்பமான இயற்கை அறிவே! போதல் வருதல் புணர்தல் இல்லாத புண்ணியப் பொருளே! எவ்வுயிரையும் காக்கின்ற எம் அரசனே! கண்ணால் காண்பதற்கு அரிய பேரொளிப் பிழம்பே! பெருக்கெடுத்து ஓடும் ஆற்று வெள்ளமெனத் திகழும் இன்ப வெள்ளமே! எம் தந்தையே!மேலோனே! என்றும் நிலைபெற்று நிற்கும் சுடர் பொருந்திய ஒளியே! சொற்களால் சுட்டிப் பேசுவதற்கு இயலாத நுட்பமான அறிவுப் பெருக்கே! மாறிக்கொண்டே வருகின்ற இவ்வுலகில் வெவ்வேறு பொருளாகவும் விளங்கும் அறிவுப் பொருளானவனே!அவ்வறிவின் தெளிவுக்கும் தெளிவானவனே. என் சிந்தனைக்குள் ஊற்றாகப் பெருக்கெடுத்து ஊறுகின்ற உண்பதற்கு அரிய அமிழ்தமே! என்னை உடைமையாகக் கொண்டவனே! எம் தலைவனே! பல்வேறு வடிவங்களால் வேறுபட்டுத் திகழும் உடலுக்குள் தங்கியிருக்கப் பொறுக்கமாட்டேன்! எம் தலைவனே! சிவபெருமானே! நின்னிடம் தத்தம் நிலைக்காக வருத்தமுற்று ஓவெனப் புலம்பி முறையிட்டு வணங்கிப் புகழ்ந்து பொய்ம்மை நீங்கி, மெய்யே வடிவானவர்கள் மீண்டும் இவ்வுலகில் வந்து வினைவயப்படும் பிறவியை அடையாமல் வஞ்சனை தரும்புலன்களாகிய கட்டினை அழிப்பதற்கு வல்லவனே! நள்ளிருளில் நடனம் ஆடும் இறைவனே! தில்லையம்பதியில் கூத்தனாக விளங்குபவனே!
தென்பாண்டி நாட்டை உடையவனே! ஓவென்று ஓலமிட்டு அரற்றி வழிபடும் அடியவரின் பிறவியை முற்றாக அழிக்க வல்லவனே! சொற்களுக்கு எட்டாதவனாக விளங்கும் சிவபெருமானைக் குறித்துக் கூறிய சொற்களால் அவற்றின் நுட்பமான பொருள் அறிந்து உணர்ந்து வணங்குவோர் சிவபுரம் என்னும் இடத்திற் புகுவார்கள். அச்சிவபுரத்தில் சிவபெருமானின் திருவடிப் பேற்றினைப் பெற்று அன்பர் பலரும் வணங்குமாறு திகழ்வார்கள்.
திருச்சிற்றம்பலம்
0 Comments