மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம் - சிவபுராணம் - பகுதி - 2 / MANIKKAVADAKAR - THIRUVADAKAM - SIVAPURANAM - PART 2

 


மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம்

தொடர்  - 2


உரை விளக்கம்: 

பெரும்புலவர்.திரு.மு.சன்னாசி , 

தலைமையாசிரியர் , ( ப.நி )

கோகிலாபுரம் , இராயப்பன் பட்டி , தேனி.

1 ) சிவபுராணம் - பகுதி - 2

பாடல் அடிகள் - 34 முதல் 62 வரை

*****************     *************   ***********

உய்யயென் னுள்ளத்துள், ஓங்காரம் ஆய்நின்ற

மெய்யா! விமலா! விடைப்பாகா! வேதங்கள்

35 `ஐயா' எனஓங்கி, ஆழ்ந்தகன்ற நுண்ணியனே!

வெய்யாய்! தணியாய்! இயமானன்! ஆம்விமலா!

பொய்யா யினவெல்லாம் போய்யகல, வந்தருளி

மெய்ஞ்ஞானம் ஆகி, மிளிர்கின்ற மெய்ச்சுடரே!

எஞ்ஞானம் இல்லாதேன் இன்பப் பெருமானே!

40 அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல்லறிவே!

ஆக்கம், அளவிறுதி, இல்லாய்! அனைத்துலகும்

ஆக்குவாய், காப்பாய், அழிப்பாய், அருள்தருவாய்

போக்குவாய், என்னைப் புகுவிப்பாய் நின்தொழும்பில்

நாற்றத்தின் நேரியாய்! சேயாய்! நணியானே!

45 மாற்றம், மனம்கழிய நின்ற மறையோனே!

கறந்தபால், கன்னலொடு, நெய்கலந்தால் போலச்

சிறந்தடியார் சிந்தனையுள் தேனூறி நின்று,

பிறந்த பிறப்பறுக்கும் எங்கள் பெருமான்!

நிறங்களோர் ஐந்துடையாய்! விண்ணோர்கள் ஏத்த

50 மறைந்திருந்தாய், எம்பெருமான்! வல்வினையேன் தன்னை

மறைந்திட மூடிய மாய இருளை,

அறம்பாவம் என்னும் அரும்கயிற்றால் கட்டி,

புறந்தோல்போர்த் தெங்கும் புழுவழுக்கு மூடி,

மலஞ்சோரும் ஒன்பது வாயில் குடிலை

55 மலங்கப், புலன்ஐந்தும் வஞ்சனையைச் செய்ய,

விலங்கு மனத்தால், விமலா! உனக்குக்

கலந்தவன் பாகிக், கசிந்துள் உருகும்

நலம்தான் இலாத சிறியேற்கு நல்கி,

நிலம்தன்மேல் வந்தருளி, நீள்கழல்கள் காட்டி

60 நாயிற் கடையாய்க் கிடந்த அடியேற்கு,

தாயிற் சிறந்த தயாவான தத்துவனே!)


பொருள்


                  நான் பிறவிக் கட்டுகளிலிருந்து விடுபட்டு உய்வடைய என்
உள்ளத்தினுள் ஓங்காரம் என்னும் பிரணவ உருவாகி நிற்கின்ற
மெய்யனே, மாசற்றவனே, இடபவாகனனே, வேதங்கள் யாவும்
தலைவனே என்று துதி செய்யுமாறு உயர்ந்து, ஆழமாகிப்பரந்துநின்று மிகவும் நுட்பமான பொருளாக விளங்குபவனே.
வெம்மையாகவும் குளிர்ச்சி யாகவும் இருப்பவனே; பரமான்மாவாக
விளங்கும் விமலனே; பொய்யாய் விளங்கும் பொருளனைத்தும்
என்னை விட்டு நீங்கி அழியுமாறு குருவாய்த் தாமே எழுந்தருளி
மெய்ஞ்ஞானமாகி விளங்குகின்ற மெய்ச்சுடரே.

                  எவ்வகை ஞானமும் அற்ற எனக்கு இன்பத்தை நல்கிய பெருமானே. அஞ்ஞானமாகிய அறியாமையை நீக்கி என்னை ஆட்கொண்ட தூய அறிவு வடிவானவனே. தோற்றமும் நிலைபெறுதலும் முடிவும்
இல்லாதவனே. அனைத்து உலகங்களையும் படைப்பவனும் காப்பவனும் ஒடுக்குபவனும் அருள் புரிபவனும் நீயே. அடியவனாகிய என்னைப் பிறவி வயப்படுத்தி நின்தொண்டில் புகுமாறு செய்வாய். தூய நறுமணமாய் விளங்குபவனே நீண்ட
தொலைவான தூரமாகவும் மிகவும் அருகில் இருப்பவனாகவும்
விளங்குபவனே. சொல்லையும் மனத்தையும் கடந்து நிற்கின்ற
திருமறையின் பொருளாக விளங்குபவனே. மனம் வாக்கு காயம்
ஆகியவற்றால் சிறந்து விளங்கும் அடியவர்களின் சிந்தனையுள்
அப்பொழுதுதான் கறந்த பசுவின் பாலொடு கரும்புச்சாறும்நெய்யும் கலந்து சுவை செய்யுமாப் போலே பேரின்பப் பொழிவாய் நின்று அடியேன் எடுத்திருக்கும் பிறப்பினை ஒழிக்கின்ற எங்கள் பெருமானே. நிலம், நீர், தீ, வளி, வான் என்னும் ஐம்பூதங்களின்
ஐந்து நிறங்களாகி தேவர்கள் புகழ்ந்து வழிபடவும் காணமாட்டாதவனாய் விளங்குபவனே.

                  எம் பெருமானே! வலிமையுடைய வினைவயப் பட்டுள்ளவனாகிய என்னை மறைத்திருக்குமாறு மூடியுள்ள
அறியாமையாகிய இருள் நீங்குவதற்காக நல்வினை, தீவினை என்னும் கயிற்றினால் கட்டினாய். மேலும் புறத்தே தோலால் மூடி எவ்விடத்தும் புழுக்கள் நளிகின்ற அழுக்கினை மறைத்து மலம்
ஒழுகுகின்ற ஒன்பது வாயில்களை உடையதும் ஐம்புலன்கள் வஞ்சனை செய்வதுமாகிய அடியேன் உன்னை விட்டு நீங்கும் உள்ளத்தினோடு உன்மீது கலந்த
அன்புடையவனாகிக் கசிந்து மனமுருகும் அன்பு இல்லாதவனாகிய எனக்கு இந்த நிலவுலகின் மீது எழுந்தருளி எனக்குக் கருணை காட்டி நின்திருவடிகளையும் காட்டி என்னை உய்வித்த மாசற்ற
பெருமானே. நாயினும் கடையனாய் விளங்கிய எனக்குத் தாயினும்
சிறந்த அன்பு காட்டிய தத்துவப் பொருளே! )

*****************     ***********    ************

நன்றி : AR பதிப்பகம் , மதுரை .

********************   ************   **********

Post a Comment

0 Comments