கிறிஸ்துமஸ் சிறப்பு தினம் - பெத்தலகேம் குறவஞ்சி - XMAS - PETHALAGEM KURAVANCHI

 

         கிறிஸ்துமஸ் தினம் 

      பெத்தலகேம் குறவஞ்சி

               25 • 12 • 2021



உலகின் முதலாக அன்பை ஈந்து

பகைவனையும் நேசித்து 

பாவிகளை ரட்சித்து 

புவிக்கு வந்த புதிய தத்துவம்

புகழ் படைத்த மீட்பவர் 

காந்தியை அகிம்சா ஆயுதமேந்தத்   

தூண்டிய திருவிளக்கு 

தீமைக்கும் நன்மை நவில்ந்து 

கடல் அளந்து அற்புதம் பல செய்து

மன்னிப்பு என்னும் மாமருந்தைத் தந்து

இன்று பிறந்து  எங்கும் தவழ்கிறார் 

மனித குலம் காத்திட -- இரு

கரமேந்தி வணங்குவோம் 

இனிதாய் வாழ்வு  மலர்ந்திட !

      இயேசுவின் பிறப்பு ஆண்டுதோறும் டிசம்பர் -- 25-ம் நாளைகிறிஸ்துமஸ் எனும் பெருவிழாவாக உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. தூய ஆவியின் மூலம், கன்னி மரியா கருவுற்று பாலகன் இயேசுவை ஈன்றெடுத்தார்.குழந்தை இயேசு வும் வளரும் நாட்களிலேயே அனைத்து நற்பண்புகளும் நிரம்பியவராகக் காணப்பட்டார். இயலாதோர் மற்றும் ஏழை மக்களின் இயலாமையையும்,அறியாமையையும் கண்டு மனம் வருந்தினார். துயரப்படுவோரின் துயரங்களைக் கண்டு அவர்களின் துயர்துடைத்தார். மனிதர்கள் செய்யும் பாவங்களில் இருந்து விடுவிக்க எண்ணி அவர்களின் துன்பங்களைத் தான் ஏற்றார்.மன்னிப்பு என்னும் மாமருந்தைத் மனித குலத்துக்கு அளித்துஆசிர்வதித்தார். கிறிஸ்தவர்களும் கிறிஸ்துவர் அல்லாதோரும் உயர்ந்த ஆண்டவராக வணங்கும் அரும்பெரும் கடவுளானவர் இயேசு கிறிஸ்து.   இயேசுவின் இனிய காவியம் உலக மொழி அனைத்தையும் அணிசெய்கின்ற போதிலும் , அழகு மொழியாம் அன்னைத் தமிழும் தன்னிடம் கொடுத்து தனிச்சிறப்புச் செய்கிறது.பலவகையான குறவஞ்சிகளைக் கண்ட தமிழில் இயேசுவின் நாடக வடிவில் வடித்துத் தருகிறார் வேதநாயகம் சாஸ்திரி. இது தமிழில் தோன்றிய முதல் கிறிஸ்தவ இறை வழிபாட்டு பாடல் ஆகும்.இதன் காலம் 18 - ம் நூற்றாண்டாகும். 

பெத்தலகேம் குறவஞ்சி :

பெத்தலகேம் என்பது ( Bethlehem) என்பது இயேசு பிறந்த இடம். இது கிறிஸ்தவர்களின் புனித இடமாகும். குறவஞ்சி என்பது ஒரு தமிழ்ப் பாடல் இலக்கியம்கும்.இது சிற்றிலக்கிய வகைகளில் ஒன்று ஆகும்.வஞ்சி என்னும் சொல்லானது பெண் எனப் பொருள்படும்.எனவே குறவஞ்சி என்பது குறத்திப் பெண் எனப்படும்.குறவஞ்சி இலக்கியத்தில் , குறத்திப் பெண் சிறந்ததொரு  இடத்தைப் பெறுகிறாள்.   கதைத் தலைவர் கடவுளாகவோ அல்லது மன்னராகவோ இருப்பர். இவ்விலக்கியம் நாடகப் பாங்கான கதை அமைப்பைக்   கொண்டது. இவற்றின் இடையிடையே இசைப் பாடல்களைக் கொண்டு விளங்குகின்றன. கிறிஸ்தவக் குறவஞ்சி நூல்களுள் பெத்தலகேம் குறவஞ்சி தனிச்சிறப்பு வாய்ந்தது. இதன் ஆசிரியர் வேதநாயகம் சாஸ்திரி ஆவார்.இது ஞானக் குறவஞ்சி என்றும் அழைக்கப்படுகின்றன. பெத்தலகேம் குறவஞ்சி என்பது பெத்தலகேம் என்னும் ஊரில் பிறந்த இயேசுநாதரின் மீது பாடப்பட்ட நூலாகும். இதுவே " பெத்தலகேம் குறவஞ்சி "என அழைக்கப்படுகின்றன. பெத்தலகேம் குறவஞ்சியில் உலா வரும் மன்னர் இயேசுவாகவும் ,தேவமோகினியாகிய தலைவி சீயோன் மகளாகவும் , குற வஞ்சி விசுவாசமாகவும்,சிங்கன் குருவாகவும் ,குறி கூறுதல் தீர்க்க தரிசனமாகவும்,சிங்கன் குருவாகவும் ,நூவன் உபதேசியாகவும், அவர்கள் பிடிக்கும் பறவைகளும்,அதற்குப் பயன்படுத்யப்படும் வலையாக இறைவாக்கு என்ற நற்செய்தியும் உருவகிக்கப் பட்டு விளக்கப்பட்டுள்ளன. இது ஒரு சிறந்த இசை நாடகமாகும். 

வேதநாயக சாஸ்திரி:(1774 -- 1864)

   தமிழகத்துப் புலவர்,கவிஞர் , வித்தகக் கவிஞர்,விவிலிய அறிஞர் என்ற சிப்புகளைப் பெற்ற தமிழறிஞரானவர்   பெத்தலகேம் குறவஞ்சி நூலை இயற்றிய வேதநாயக சாஸ்திரி ஆவார். இவர் தமது 25 -ஆவது வயதில் பெத்தலகேம் குறவஞ்சி என்னும் நாடகத்தை இயற்றினார். சென்னை  வேப்பேரி கிறிஸ்துவச் சபையில் அரங்கேற்றம் செய்யப்பட்டது . இக்காவியமானது , வேதநாயகம் சாஸ்திரி அவர்களுக்கு " ஞான தீபக் கவிராயர் " என்னும் சிறப்பைப் பெற்றுத் தந்தது.  இவர் இயற்றிய நூல்கள் "ஞான அந்தாதி ,நான உலா பராபரன்மாலை முதலிய சிற்றிலக்கியங்களைப் படைத்துள்ளார். இவை மட்டுமன்றி நாட்டுப்புற இலக்கியங்களையும் எழுதியுள்ளார். பெத்தலகேம் குறவஞ்சியானது இறைவாழ்த்து ,இயே சு உலா ,தேவமோகினி காதல், குறத்தி குறி கூறல் , சீவகன் வருகை என்ற ஐந்துப் பிரிவுகளைக் கொண்டது: பாயிரம் முதலாக வாழ்த்து ஈறாக, 72 - உட்பிரிவுகளையும் கொண்டது. 

இறைவாழ்த்து !

"சீரேசு நாதனுக்கு செய மங்கலம்,

  ஆதி திரியேக நாதனுக்கு சுப மங்களம்.

         எனத் தொடங்கும் பாடல் இன்றும் கிறிஸ்தவர்களின் வழிபாட்டுப்பாடலில் இன்றும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இப்பகுதியில் வரும் கடவுள் வாழ்த்து சரணத் தரு, தோடையமங்கலம், தோத்திரத் தரு ஆகியன இறைவாழ்த்தாக அமைந்து பாடப்பட்டு வருகிறது.

இயேசுவின் உலா : (உலா வரும் ஆண்டவர் )

       கட்டியங்காரனாக வரும் யோவான்  இயேசு உலா வரப் போவதை முன்னதாக அறிவிக்கிறார்.இயேசுவின் பெருமைகளைக் கூறுகிறார்.இயேசுவின் வருகைக்காக எருசலேம் நகரம் விழாக்கோலம் பூண்டு காணப்படுகின்றன. மகிழ்ச்சியில் ஆரவாரம் கொண்ட நகர மக்களும் ,தேவதூதர்களும், திருச்சபைக் கன்னியரும் கூறியிருக்கின்றனர்.இங்கு இயேசு உலா வருகின்றார். 

இயேசுவைக் கண்ட மகளிர் நிலை:

          உலா வரும் இயேசுவைக் கண்ட அனைவரும் ஆனந்த பரவசத்தில் தங்களை மறந்து அற்புதமான காட்சியை சொல்லவொண்ணா களிப்பில் வியந்தனர்.மேலும் " ஓசன்னா " என்ற வாழ்த்தொலியை விண் அதிர முழங்கி மகிழ்ந்தனர். 

தேச மாதர்கள் பாசமாய்

வாச மேவு விலாச மரக்கிளை 

மாசிலாது எடுத்து ஆசையா 

யோசன்னா ,பவசன்னா என 

ஓசையாய் கிறிஸ்தேசுவே 

நீச வாகன ராசனே எங்கள் 

நேசனே எனப் பேசவே  _ பவனி

                                                 (பவனிச் சிந்து - 3)

பாவத்தை அழித்தவரே ! இயேசுகிறிஸ்து ஆண்டவரே! கழுதை மீது பவனி வரும் எங்கள் அன்பின்  ஆண்டவரே! என மகிழ்ச்சிக் கொண்ட மகளிர் தம் கைகளில் உள்ள மரக்கிளைகளை அசைத்து  ஓசன்னா என கூறி மகிழ்ந்தனர்.

தேவ மோகினியின் காதல் :

      தலைவியான சீயோன் மகள் என்னும் தேவ மோகினி அழகும், பக்தியும் நிறைந்த கருனைமிக்கவள் , இயேசுவைக் கண்டு மையல் கொண்டாள். அன்பு மிகுதியால் நிலவு சுடுகிறது, தென்றல் கனலாக கனக்கிறது . இவற்றை தலைவி பழித்துப் பேசுகிறாள். இத்தகைய தலைவின் அழகினை ஆசிரியர் சிறப்பித்துக் கூறுகிறார். இங்கு திருச்சபையே தலைவியாக உருவகிக்கப்படுகிறது. 

குறத்தியின் வருகை:

    தன்னிலை மறந்தத் தலைவி உணவும் , உறக்கமும் இன்றி தலைவன் நினைவிலேயே தவித்திருக்கிறாள். இவ்வேலையில் சிங்கி என்பவள் , இடுப்பில் கூடையும்,கையில் கோலும் கொண்டு ஒய்யார நடைப் பயின்று , ஒயிலாக வருகிறாள்.அவளது வருகையை வரவேற்கும் ஆசிரியர் இவ்விதம் கூறுகின்றார்.

சிங்கி வந்தாளே -- விசுவாச

சிங்கி வந்தாளே 

                               (சிங்கி வரவுச் சிந்து )

நாட்டு வளம் :

         சிங்கியின் வரவைக் கேள்வியுற்ற தலைவி, அவளை அழைத்து தன் அக வேதனையைப் போக்கும் மருந்தினைக் காண விழைகின்றாள். அவ்வேதனையைத் மாற்றும் தலைவி அதனூடே குறத்தி தன்னுடைய நாட்டு வளம் ,நகர் வளம் , மலை வளம் ஆகியவற்றை நயம் பட எடுத்துக் கூறுகிறாள். அப்போது "விவிலியச் செய்திகளையும்,இயேசுவின் சிறப்புகளையும், கிறிஸ்தவர்களின் மேன்மைகளையும் குறத்தி பலவாறு சிறப்பித்து எடுத்துரைக்கிறாள். மேலும் தம் தலப் பெருமையைப் போற்றும் போது இயேசுவின் வாழ்க்கை நிகழ்வுகள் கூறப் படுகிறது.

அவை :


நாசரேத்து ஆண்டவரே வாழ்ந்த தலம் அம்மே

தேசிகனார் பாடுபட்டு மரித்த தலம் அம்மே

                                                      ( தல வளம் -- 4)

மேலும் இயேசுவின் அருளால் நிகழ்த்தப்பட்ட பல அற்புதங்களைச் சுட்டிக் கூறுகின்றாள். 

குறி கூறும் குறத்தி :

சிங்கி கூறிய சிறப்புகளைக் கேட்ட தலைவி , நாணம் கொண்டு முகம் சிவந்து, தன் கரம் நீட்டி குறி கேட்பதில் ஆர்வம் கொள்கிறாள்.தலைவியின் கரங்களைப் புகழ்ந்த சிங்கி , தன்னுடைய குறி நல்விளைவை உண்டாக்க ஆண்டவரை வேண்டுகிறாள். பின்பு குறி சொல்லத் தொடங்குகிறாள். மாசில்லாத பெத்தலகேம் தலைவர் , புதிய சேலை , மாலையுடன் உன்னை மணம் கொள்ள நாளை வருவார் என உரைக்கின்றாள்.அதைக் கேட்டத் தலைவி மகிழ்ச்சி அடைகிறாள். குறத்திக்கு பொன்னும் பொருளும் வழங்கி சிறப்பிக்கப் படுகிறாள்.


சிங்கன் வருகை :

          வேட்டையாடச் சென்ற சிங்கன் பெத்தலகேம் நாதரின் புகழ் பாடி மகிழ்ந்து வருகிறான்.மண்ணகத்தில் மனிதனிடம் விளையும் ஆசைகளுக்கு காரணமான பாச அலைகளை அறுத்தொழிக்கும் " ஞான வலை " அவரிடமே உள்ளது எனக் கூறி மகிழ்கிறான் சிங்கன் .வேட்டையாடும் சிங்கனுக்கு பறவை ஒன்றும் கிடைக்காமல் போகவே ,சிங்கியின் நினைவு வந்தவனாக அவளைத் தேடிச் சென்ற சிங்கன் , எதிரே சிங்கியைக் கண்டு உரையாடுகிறார். இவர்களின் உரையாடலே சுவை மிகுந்ததாகக் காணப்படுவதை குறவஞ்சி வழிக் காணக் கிடைக்கிறது. 

இத்தனைக் காலமாய் என்னிடம் கேளாமல் 

எங்கே நீ சென்றனை சிங்கி ? -- மா

பெத்தலே கேம்நகர் சீயோன் குமாரிக்குப் 

பக்திக்குறி சொல்ச் சிங்கா 

 ( சிங்கன் சிங்கி சம்பாஷித்தல்- பாடல்- 1)                                                      

குறத்தி அணிந்திருந்த அணியினது அழகை வியந்துப் பாராட்டிய சிங்கனின் வினாவிற்கு, நயம்பட பதில் உரைக்கின்றாள் சிங்கி .இவற்றைப் பேசி பேசி மகிழ்ந்த சிங்கன்- சிங்கி இரு வரும் அதற்குக் காரணமான ஆண்டவரைப் போற்றுகின்றனர். இவ்வாறாக இயேசுபிரானின் வாழ்க்கை வரலாறு குறஞ்சியில் நாடக வடிவில் அமைத்து எளிய மக்களும் புரிந்துக் கொள்ளும் விதமாக ஆசிரியர் தொடுத்து தோரணமாக் கி ஆண்டவரை அழகுப் படுத்துகிறார்.அவர் வழியில் அனைவரும் , மண்ணில் பல இன்னல்களில் சிக்கித் தவிக்கும் மானிட குலத்தை மீட்க வேண்டி மனிதனாக அவதரித்த ஆண்டவரை கிறிஸ்துமஸ் நன்னாளில் வணங்கி மகிழ்வோம்.!

Post a Comment

0 Comments