ஆருத்ரா தரிசனம்
20 • 12 • 2021
தென்னாடுடைய சிவனே போற்றி !
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி !
திருச்சிற்றம்பல சிவனே போற்றி !
ஆதியும் அந்தமும் இல்லாத அகிலத்தையாளும் பிரமாண்ட நாயகன்.புவனம் முழுவதையும் படைத்து,காத்து ,அழித்து விளையாடும் ஈசன் உலக உயிர்கள் அனைத்தும் உய்யும் பொருட்டு பாரத தேசமெங்கும் 1008 - திருத்தலங்களில் லிங்க உருவத்தில் எழுந்தருளி அருள்புரிகிறார்.அப்பெருமானார் அருள்புரியும் கோலங்கள் தான் எத்தனை, எத்தனை ... அனைத்தும் துறந்த துறவியாக - பிசாடணாராக, பிரமத்தின் சொரூபமாக, தகராகாச தெய்வமாக,அண்ட , பிண்ட,பிரபஞ்ச இயக்கத் தெய்வமாக,ஐந்தொழில் மூலமாக,யோகநெறிக் கண்ட பேரொளியாக, சச்சிதானந்த சொரூபமாக, ஆனந்த நடராசராக விளங்குகிறார்.அந்தப் பெருமான் , உமையம்மையுபடன் யோகத்தில் அமர்ந்து தன் சக்தி யால் இந்த வையத்தைப் போற்றும் இடம் தான் திருக்கயிலாயம். சிற்றம்பலம் என்பது ஒரு பரமார்த்தி நிலையாகும்.இப் பெயர் கொண்ட தலம் சிதம்பரத்தில் உள்ளது.அத்தில்லையில் திகழும் திருவை திருவாதிரையில் வணங்குவோம்.!
தமிழில் திருவாதிரை எனப்படும் நட்சத்திரத்திற்கு வடமொழியில் ஆர்த்ரா என்று பெயர்.இதுவே ஆருத்ரா என்று அழைக்கப்படுகிறது. மார்கழி மாத திருவாதிரை நட்சத்திர நாளில் எல்லா சிவாலயங்களில் ஆருத்ரா தரிசனம் சிறப்பாக நடைபெறும்.இந்த ஆருத்ரா தரிசனம் கண்டால் அனைத்து பாவங்களும் நீங்கி புண்ணியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.ஆருத்ரா என்ற என்ற சொல்லுக்கு" ஈரமான ", "இளகிய," "புத்தம்புதிய,"" பசுமையான " என்ற பொருள்களைத் தருகின்றன. ஆருத்ரா எனப்படும் ஆதிரை நட்சத்திரத்தின் நாயகன் ருத்திரனாகிய சிவபெருமான் ஆவார்.அதனாலேயே சிவபெருமான் " ஆதிரையன்," " ஆதிரைமுதல்வன் " போன்ற பெயர்களில் அழைக்கப்படுகிறார். ராமனுக்கு நட்சத்திரம் புனர்பூசம், கிருஷ்ணருக்கு ரோகினி.பிறப்பே இல்லாத ஆதியும் அந்தமும் இல்லாத பரம்பொருள் சிவபெருமானுக்கு உரிய நட்சத்திரம் திருவாதிரை " பிறவா யாக்கைப் பெற்றோன் பெரியோன் " எனப் புகழ்கிறது சிலப்பதிகாரம்.
சிவபெருமானை வழிப்படும் பல விரதமுறைகளில் திருவாதிரையும் ஒன்று .இது சிவபெருமானுக்கு மார்கழியில் வரும் மிக இன்றியமையாத விரத நாள் இந்தத் திருவாதிரைத் திருநாள் ஆகும்.சிவபெருமானுக்கு உகந்த நட்சத்திரம் திருவாதிரை.
எனவே மார்கழியில் வரும் திருவாதிரை நட்சத்திரம் அன்று சிவாலயங்களில் சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெறும். மேலும் இந்த நாளில் ஆருத்ரா தரிசனம் கொண்டாடப் படுகிறது. பெண்கள் தங்கள் கணவருக்கு நீண்ட ஆயுள் கிடைக்க வேண்டி திருவாதிரை நாளில் விரதம் இருந்து வழிப்படுவர்.
சிவபெருமான் உறையும் இடம்.
நாதனைப் பாடிய நால்வரால் பாடப்பட்ட 276 - சிவன் கோவில்களில் முதலாவதாக விளங்குவது உத்திரகோசமங்கை மங்களாதார சுவாமி கோயில் ஆகும். முதன்முதலில் பாடப் பெற்ற சிவாலயமாக இந்த உத்தரகோசமங்கை மங்களநாத சுவாமி திருக்கோவில் போற்றப் படுகிறது.இதன்காரணமாகவே சிவபெருமான் உண்பதற்கும் உறங்குவதற்கும் இந்த ஆலயத்திற்கு சிவபெருமான் வருவார் என நம்பப்படுகிறது.உத்திரகோசமங்கை மங்களநாத சுவாமி கோவிலில் உள்ள நடராசர் சிலை மரகதக் கற்களால் செய்யப்பட்டது.பச்சை நிறம் கொண்ட மரகதம் மென்மைத் தன்மையைக் கொண்டது. எனவே இது ஒலி மற்றும் ஒளி அதிர்வுகளைத் தாங்கிக் கொள்ள முடியாதத் தன்மைக் கொண்டது. இதன் காரணமாக ஒலி , ஒளி அதிர்வுகளால் இருந்து சிலையைப் பாதுகாக்க சந்தனம் பூசி பாதுகாக்க பராமரிக்கப் படுகிறது.மேளம் முழங்கப்பட்டால் சிலை உடைபடும்.இதன்காரணமாக உத்தரகோசமங்கை மங்களநாத சுவாமி கோயிலில் ஆண்டுக்கு ஒருமுறை மட்டும் மார்கழித் திருவாதிரை நட்சத்திரம் கொண் ட நாளில் பக்தர்கள் அங்குள்ள இறைவனைத் தரிசனம் செய்கின்றனர். அந்த சிவாலயத்தில் அன்றைய தினம் மட்டும் சிலைக்கு சந்தனம் கலைக்கப்பட்டு , மீண்டும் இரவில் பூசப்படுகிறது.32 - வகையான அபிஷேகம் நடத்தப்படுகின்றன. பின்மீண்டும் சந்தனம் பூசப்படுகிறது. இந்த நாளில் சிவபெருமானை வழிப்படுவது வாழ்வில் நன்மை உண்டாகும் என்பது மக்களின் பெரும் நம்பிக்கை.
திருவாதிரை விரதம் (மாங்கல்ய நோன்பு ) :
திருவாதிரை விரதம் என்பது , தீர்க்க சுமங்கலி வரமளிக்கும் விரதமாகக் கொண்டாடப்படுகிறது. இந்த நன்னாளில் பெண்கள் திருவாதிரை விரதம் மேற்கொண்டு, தங்கள் தாலியினை மாற்றி சிவபெருமானை வழிபட்டால், கணவருக்கு நீண்ட ஆயுள் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது.இந்த விரதத்தை மாங்கள்ய நோன்பு என்றும் அழைக்கப்படுகின்றன. திருவாதிரை நாளில் மஞ்சளில் பிள்ளையார் செய்து அருகம்புல் வைத்து விபூதி ,சந்தனம்,குங்குமம் வைத்து பிள்ளையாருக்கு முன் தாலிகயிற்றை வைத்து சுமங்கலி பெண்கள் வழிபடுவர்.இந்த விரதத்தை மேற்கொள்ள 18 - வகையான காய்களில் சமைத்து , திருவாதிரைக் களி மற்றும் பச்சரிசி அடை படையலிட்டு வழிபடுவர்.இவ் வழிபாட்டிற்குப் பின் சுமங்கலிப் பெண்கள் நிலவு தரிசனம் செய்து, தாலி கயிறை மாற்றிக் கொள்வர். பின்பு விருந்தளித்து மகிழ்வர். விருந்துமுடித்த பின்பு விரதம் இருந்த பெண்ணை தீர்க்க சுமங்கலியாக இருக்க வாழ்த்துவர்.
திருவாதிரை விரத நாளில் கணவனிடம் ஆசி பெற்று மஞ்சள் குங்குமம் வைத்து வணங்குவர்.கணவர் உணவுண்ட இலையில் மனைவி உண்ண வேண்டும்.திருவாதிரை விரதம் இருப்பவர்களுக்கு சிவசக்தியின் அருள் கிட்டும் என்பது நம்பிக்கையாகும். இவ்விரத நாளில் திருவாதிரைக் களி படைத்து உண்டு,பின் ஆருத்ரா தரிசனம் காண சிவாலயம் செல்வர்.
திருவாதிரைக் களியும், ஏழு கறிக்கூட்டும் செய்யும் வழக்கம் ஏற்பட்டதின் கதை :
முற்காலத்தில் சேந்தனார் என்ற விற்கு வெட்டி ஒருவர் சிவன் மீது அளவற்ற அன்பும்,பக்தியும் கொண்டு விளங்கினார். தினமும் ஒரு சிவபக்தருக்காவது உணவு அளித்து அதைக் கண்டுஆனந்தக் களிப்பு அடைந்தப் பின்பே உணவு உண்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.ஒரு நாள் பெருமழை பெய்தது.வெட்டிய விறகெல்லாம் நனைந்து ஈரமாகியது. எனவே அதை விற்க முடியாத நிலை ஏற்பட்டது. அதனால் மனைவியிடம் வீட்டுத் தேவைக்கு பணம் கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டது.அன்றைய தினம் ஒரு சிவபக்தர் சேந்தராரின் இல்லம் வந்து பிச்சைக் கேட்டார். சேந்தனாரின் மனைவி வீட்டில் இருந்த அரிசி மாவையும் வெல்லத்தையும் சேர்த்து களி செய்தும், முன்பு பயன்படுத்தியது போக எஞ்சியிருந்த ஏழு காய்களில் கூட்டும் செய்து சிவனடியாரின் பசியைப் போக்கினார்.வயிறு நிறைந்த சிவனடியாரை மகிழ்வுடன் அனுப்பிய பிறகே இருவரும் உண்டனர். பொழுது புலர்ந்த பொழுது வழக்கம் கோயிலைத் திறந்த அர்ச்சகர் , இறைவனின் கருவறையில் களியும், கூட்டும் சிதறி இருப்பதைக் கண்டார். பிறகு இறைவனின் திருவிளையாடலை உணர்ந்தார். சேந்தனாரின் பக்தியை உலகிற்குத் தெரியப்படுத்தவே ஈசன் பிட்சாடனார் உருவில் வந்து அருள்புரிந்தார் என்பது தெளிவானது.எனவே ஆருத்ராதரிசனம் அன்று களி மற்றும் காய்கறி கூட்டு செய்து நடராஜ ப்பெருமானுக்கு படையலிட்டு, சிவ மந்திரங்களைக் கூற வேண்டும் இதனால் எல்லா வளங்களையும் இல்லாமை ஒழிய இன்றே வழங்குவார் எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் ஈசன். பேசப் பேசப் பெருகிக்கொண்டே போகும் சிவனார் திருப்புகழ் . இவன் தென்னாடுடைய சிவன்.எந்நாட்டவர்க்கும் பரமசிவன். சிவனைப் வணங்குபவர்கள் யோகம் பெற்றவர்கள்.அளவற்ற செல்வச் செழிப்பில் வாழ்வாங்கு வாழ்பவர்கள். சிவபெருமானை எப்பொழுதும் நினைத்து,அவன் திருவடியைப் போற்றி வணங்குவோம்.!
சிவ சிவ சங்கர
ஹர ஹர சங்கர
0 Comments