சர்வதேச மலை தினம் - இயற்கையின் அரண் மலை / INTERNATIONAL MOUNTAIN DAY - 11 : 12 : 2021

 

     சர்வதேச மலை தினம்

       International Mountain Day

                 11 • 12 • 2021


நிலமது உயர்ந்து திட்டாகி 

திடமாக நிமிர்ந்த குன்று 

உச்சி நீண்டு உயர்ந்த போதும்

பசுமை போர்த்தி பக்கமெல்லாம்

 பாதுகாப்பு அரணமைக்கும்

சொர்கத்தின் ரதமாக...!

வெண்மேகம் விளையாடி

தன்தேகம் கருத்து கானமழையின்

வானத்துச் சாரல் எங்கும் பொழிய

சொரியும் மழை, மலையின் புறம் வழிய

சரிவு தரும்  பெரும்மலை நனைய 

பனிப் பொழிவை படிகமாக்கி

பயன் தேடும் காலத்தில்

பக்குவமாக்கி  ஆற்றுநீராக

கோடையில் கொடையளிக்கும் 

சேமிப்புக் கிடங்கு அல்லவா இம்மலைகள் 

மலை தரும் ஊறல் நீரும்,சாரல் நீரும்

மனித குலத்தின் மகத்தான நம்பிக்கை

மலையின் அழகை ரசித்த மனிதன்

மாளிகையும் இங்கு அமைக்க

மகிழ்ந்திருந்த இயற்கையும் மடிந்தே போனது

நெகிழி  வீச்சத்தால் சிதைந்தது தன் சுவாசம் 

வெப்ப மிகுதியால் வீணாச்சு  மொத்த வளம்

கடல் கொள்ள காத்திருக்கு

விழித்துக் கொள் மானிடனே !

கிழக்கு மேற்கு தொடர்ச்சி மலைகள்

கரம் சேர்த்து வணங்குகிறது !

நீலகிரியின் நிலம் காக்க -- இனி

சுயநலத்தை விட்டுவிட்டு

உலகத்தைக் காப்பாற்று

உன் தலைமுறையை ஈடேற்று..!


             சங்கத் தமிழ் நூல்கள் எங்கும் மலையைப் போற்றிய பாடல்கள் ஆம்.. 350 - பாடல்களை  பாடி மலைவளம் போற்றினர் பழந் தமிழர்.ஆதிமனிதன் அவதரித்த மலை.மன்னர்களின் அறிவும் , பரந்த மனமும் போல பண்பாட்டு இலக்கணமாக பங்காற்றும்  பசுமை மலை. தன்னை நாடும் உயிர்களுக்கெல்லாம் உறைவிடமாக உள்ள மலை .இம் மலைகளைப் போற்ற ஓர் நாள் , பன்னாட்டு மலை நாள்.

     ஆண்டு தோறும் டிசம்பர் 11 - ம் நாளை சர்வதேச மலை நாளாக கொண்டாடப் படுகின்றது. சர்வதேச நாள் என்பது ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பானது முன்னின்று நடத்தி வருகின்றது. இந்த மலை நாளானது மலைகளைப் பாதுகாக்கவும் , மலைப்பகுதிகளில் வாழும் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் , மலையின் சுற்றுச் சூழலை பாதுகாக்கவும் 2002 - ஆம் ஆண்டில் " மலைகளின் கூட்டாளி " என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பு உலகம் முழுவதும் தொடர்பை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது.இவ்வமைப்பின் முயற்சியால் 2003 - ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் அவை டிசம்பர் 11- ம் நாளை, பன்னாட்டு மலைகள் நாளாக அறிவித்தது.மலைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த இத்தினம் கொண்டாடப்படுகின்றது. சுற்றுச் சூழலைக்  காப்பதில் மலையின் பங்கு இன்றியமையாதது. இயற்கையின் கொடையான மலைகள் ஆறுகளின் உற்பத்திக்கு ஆதாரமாகத் திகழ்கின்றன. தவிர நீர் சுழற்சியில் முக்கிய இடத்தைப் பெற்றிருக்கின்றன. 


இந்திய மலைகளின் பங்கு:

     இந்திய நாட்டின் அரணாக இமயமலை விளங்குகின்றன. இமயத்தைத் தொடர்ந்து மேற்குத் தொடர்ச்சி மலைகள்  மிக முக்கியமான இடத்தை வகிக்கின்றன. பண்பாட்டுத் தொன்மையை இன்றும் தன்னகத்தே வைத்து பிரமிக்க வைக்கும் நீலகிரி, நமது பண்பாட்டை பறைசாற்றும் குறிஞ்சியைத் தன்னகத்தே  கொண்டது.இன்றைய நீலகிரி மலையானது தனது தொன்மை குறைந்த பன்மை பெருக்கத்தால் இயற்கை சீற்றமும், செயற்கை மாற்றமும் தரும் பெரும் பாதிப்பைச் சந்தித்து வருகிறது. அதாவது பழமை முதிர்ந்த நீலகிரி மலைகளின் உயரம்  நாளுக்கு நாள் குறைந்து வருவதாக உலகஅளவில்   எடுக்கப்பட்ட  சமீபத்திய ஆய்வுகள் அச்சுறுத்துகிறது. இவற்றிலிருந்து மீள என்ன வழி ? , மனிதனில் மாற்றம் உருவாக வேண்டும்.அதாவது மனிதன் தன் பேராசையை விட்டொழிப்பதன் மூலம் நன்மை பெருக வழியுண்டு. இயற்கையை , இயற்கையாக நேசிக்க வேண்டும் . யாசிக்க வேண்டும் அவற்றை தனதாக்க யோசிக்கக் கூடாது. நிலங்களை அவற்றின் அமைப்பு , காலநிலைக் கேற்ப  வகைப்படுத்தி இயற்கையை வணங்கினான்  தமிழன் . குறிஞ்சியைக் கோயிலாக்கி கோலோச்சியக் காலத்தில் மலைகளை புனித இடமாகப் போற்றினர். உயிரினங்களின் இருப்பிடமாக சிறப்புற்று இருந்தது. தற்போதைய நிலையோ வருந்தும் நிலையில் உள்ளது.இயற்கையை தனதாக்க எண்ணும் மனிதன் அவற்றை ரசிக்கவும், நேசிக்கவும் செய்வதை விடுத்து, தனக்குரியதாக மாற்றிக் கொள்ள நினைத்ததன் விளைவே மலைகளின் அழிவு.புனிதமாகக் கருதிய உயர்ந்த இடத்தை வணங்கி வந்த நிலைமாறி , அப்பகுதிகளை தங்கள் பொழுதைக் கழிக்கும் வாழிடமாக மாற்ற நினைத்த காரணமே  வெப்பமயமாதல் , இவ்வெப்பத்தால் காடுகள் அழிந்து அதன் வழி மண்ணும் சரிந்து உயர்ந்த   நிலப்பகுதி குறைந்து குன்றாக மாறியது.இதன் குன்றாத நிலைக் காண , வற்றாத நீர் பெருக இயற்கை எப்போதும் போற்றிடுக. 


மலைகளின் இன்றியமையாமை:

          மலைகள் என்பது ஒரு நாட்டின் வேலியாக, இயற்கையின் வனப்பாக திண்ணம் மிக்க கம்பீரம் பொருந்திய கட்டமைப்பைக் கொண்டவையாகத் திகழ்கின்றன. இயற்கைச் சீற்றத்தைத் தடுக்கும் பாதுகாவலனாக, தூய காற்றுத் தரும் வள்ளலாக ... மனிதனுக்கு மலைகள் தரும் பரிசுகள் பலப்பல.  வணங்கா முடியாக நிமிர்ந்து நின்று தன் கீழ் வாழும் உயிரினங்களைக் காக்கும் நிழல் தரும் பெருங் குடையாகவும் பொழுது போக்கைக் கொண்டாடும் பூலோகச் சொர்கமாகவும் , வளம் கொழிக்கும் விவசாயத்தின் ஆதாரமாகவும் , உணவு உற்பத்தியின் இடமாகவும்  , உள்ளம் மகிழும் நிலமாகவும் இருந்து நன்மைகள் பல நல்கி நலம் காண்கிறது.

மலை அழிவுற காரணம் :

விவசாய முறையின் மாற்றம், செயற்கை முறையின் தாக்கம்  பழமை முறையை கடைபிடிக்காமை, இயற்கை முறையை பின் தோடராமை, தாவர அழிப்பு , மரம் வெட்டுதல் ,வேட்டையாடுதல், ஆகியவை மலைவாழ் உயிரினங் களுக்கும் மண்ணுக்கும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. தற்போது அதிகமான நிகழ்வாக பனிப்பாறை உருகுதல், கடல் மட்டம் உயர்தல் போன்ற வையும் அழிவுறக் காரணமாக உள்ளது.மரங்களை வெட்டுவதன் காரணமாக கார்பன் - டை - ஆக்சைடு அளவு வளி மண்டலத்தில் அதிகரித்து பல பிரச்சனைகளை   உண்டாக்குகிறது.இந்த விளைவின் தாக்கத்தைக் தடுக்கும வழிமுறைகளைப் பின்பற்றியும், தாவர உலக த்தைப் பாதுகாத்தும் மலையின் நலத்தை காப்போம் ! அகிலம் நிலைக்க  மலையைக் காப்போம்.! மாநிலம் செழிக்க மலையைக் காப்போம்.!

Post a Comment

0 Comments